Published:Updated:

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

விண்ணை முட்டும் விலையில் காஸ், உணவுப்பொருள்கள்... விலை ஏறாத மது, சிகரெட்...

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

விண்ணை முட்டும் விலையில் காஸ், உணவுப்பொருள்கள்... விலை ஏறாத மது, சிகரெட்...

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

படங்கள்: எம்.ஆர்.சிவக்குமார், ஆனந் ரஹ்மானிக்

அண்டை நாடான இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே. அங்கு நிலவும் உண்மைநிலை குறித்துத் தெரிந்துகொள்ள நேரடியாக இலங்கைக்கு விசிட் அடித்தது ஜூ.வி டீம். அங்கே நாம் நேரடியாகப் பார்த்த, கேட்ட தகவல்களை; உணர்ந்த விஷயங்களை இங்கே பதிவுசெய்கிறோம்...

இருள் சூழ்ந்த சாலைகள்!

ஏப்ரல் 21-ம் தேதி இரவு, சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பி, நள்ளிரவு 2:30 மணியளவில் இலங்கையின் தலைநகர் கொழும்புவிலுள்ள பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைந்தோம். எப்போதும் நள்ளிரவு நேரத்தில்கூட பிஸியாக இருக்கும் இந்த விமான நிலையம், நாம் சென்றபோது வெறிச்சோடிக் காணப்பட்டது. அங்கிருந்த கடைகள் பலவும் மூடப்பட்டிருந்தன. விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகர்ப் பகுதிக்கு 45 கி.மீ தூரம் என்பதால், டாக்ஸி ஒன்றில் வாடகை பேசி ஏறினோம். வழி நெடுகிலும் தெருவிளக்குகள் அணைத்துவைக்கப்பட்டிருந்ததால், சாலையெங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இது பற்றி டாக்ஸி ஓட்டுநர் ராஜாவிடம் பேச்சுக் கொடுத்தோம். ``எப்போதும் இந்தச் சாலைகளில் மின்விளக்குகள் ஒளிரும். ஆனால், மின்சாரத்தை மிச்சம் பிடிப்பதற்காக இலங்கை முழுவதுமே தெருவிளக்குகள் அணைத்து வைக்கப்பட்டிருக் கின்றன. அதோ... அங்கே தெரியும் தேவாலயத்தில்தான் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் அன்று குண்டுவெடிப்பு நடந்தது. அதனால், அங்கு மட்டும் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன’’ என்றார்.

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

இன்டர்நெட் கட்!

விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் அறைக்குச் செல்வதற்குள்ளாகவே இலங்கையின் நிலை நமக்கு ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டிருந்ததால், ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தோம். அந்த ஹோட்டல் வசதியாக இருந்தாலும், அங்கிருந்து செய்திகள், காணொலிகளை அனுப்ப முடியவில்லை. காரணம், சரியாக இன்டர்நெட் கிடைக்கவில்லை. இதற்காகவே மூன்று ஹோட்டல்களுக்கு மாறினோம். எங்குமே இன்டர்நெட் ஸ்பீடு சரியில்லை. மொபைல் டேட்டா 4G-யிலிருந்து 3G, 2G-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இன்டர்நெட் மூலம்தான் போராட்டங்கள் பரவுகின்றன என்பதால், இலங்கை முழுவதும் இன்டர்நெட்டை முடக்கும் வேலைகளில் அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது.

முதல் நாள் காலை, அங்கிருக்கும் மிகச் சாதாரணமான உணவகம் ஒன்றில், நான்கு இட்லி, ரெண்டு வடை சாப்பிட்டோம். `இந்தாங்க’ என்று 1,100 இலங்கை ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.400) பில்லை நீட்டினார் உணவக ஊழியர். `இதுக்கே ஷாக் ஆனா எப்படி?’ என்பதைப்போல நம்மைப் பார்த்த உணவக ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம், ``சார், ஆறு மாசத்துக்கு முன்னாடி நீங்க சாப்பிட்ட நாலு இட்லி, ரெண்டு வடை இலங்கை ரூபாய்ல 320-தான். நேத்து ஒரு கல் தோசை ரூ.350, இன்னைக்கு ரூ.400. சிலிண்டர் கிடைக்காததால, கள்ளச்சந்தையில் சிலிண்டர் வாங்கித்தான் சமைக்குறோம். அதனால, சிலிண்டரின் விலையைப் பொறுத்துத்தான் உணவுகளோட விலை நிர்ணயிக்கப்படுது. நீங்க இப்போ குடிக்கிற தண்ணீர் பாட்டிலோட விலை போன மாசம் ரூ.50, இப்போ ரூ.100. இது மாதிரி எல்லாமே பல மடங்கு விலை ஏறிக்கிட்டே போகுது’’ என்றார்.

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
Eranga Jayawardena

விலையேறாத மதுபானங்கள்..!

உணவகத்துக்குப் பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் ஒரு சின்ன பிஸ்கெட் பாக்கெட் வாங்கினோம். முதல்நாள் வாங்கியபோது 150 ரூபாயாக இருந்த அந்த பிஸ்கெட்டின் MRP, அடுத்த நாளே 200 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. “இதெல்லாம் விலையேறுது; ஆனா அரசுக்கு வருவாய் வரணும்கிறதுக்காக மதுபான விலையை மட்டும் ஏத்தாம வெச்சுருக்காங்க. மதுபானம், சிகரெட் தவிர எல்லாத்தோட விலையும் பல மடங்கு ஏறிடுச்சு. போதாக்குறைக்கு ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை மின்சாரம் இல்லை’’ என்றார் பெட்டிக்கடைக்காரர் சலிப்போடு. பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசைகளைக் காண முடிகிறது. குறைந்தது ஒரு மணி நேரம் நின்றால்தான், பெட்ரோல் போட முடியும். இலங்கை முழுவதும் டீசல் ஸ்டாக் இல்லை. சிலிண்டர் விலை 5,000 ரூபாயை நெருங்கிவிட்டது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பவர்களுக்கும் சிலிண்டர் கிடைப்பதில்லை. எனவே, மண்ணெண்ணெயில்தான் சமையல் செய்கிறார்கள்.

இரண்டு வேளைதான் சாப்பாடு!

விலைவாசி உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு காரணமாகப் பெரும்பாலான இலங்கை மக்கள் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அதுவும் கிடைக்காதவர்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் பன், பிரெட்டைச் சாப்பிட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். தலைநகர் கொழும்பிலேயே பத்து, பதினைந்து உணவகங்களில் ஏறி இறங்கிய நமக்கு, ஓர் உணவகத்தில் மட்டுமே உணவு கிடைத்தது. அனைத்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், ஒரு நாள் உணவு கிடைக்கும் உணவகத்தில், அடுத்த நாள் உணவு கிடைப்பதில்லை. ஆனால், கொழும்புவிலுள்ள ஓர் இடத்தில் மட்டும் மூன்று வேளையும் இலவச உணவு, தண்ணீர் கிடைக்கிறது. அது, இலங்கையின் பழைய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் கால் ஃபேஸ் என்ற இடம்.

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

போராட்டக் களத்தில் நூலகம்!

‘கால் ஃபேஸ்’தான் இன்றைக்கு இலங்கையின் ஹாட் ஸ்பாட். அங்குதான் லட்சக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடி ராஜபக்சே அரசுக்கு எதிராக 18 நாள்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முதலில் மாணவர்கள் தன்னெழுச்சியாகத் தொடங்கிய இந்தப் போராட்டத்தில், தற்போது குடும்பம் குடும்பமாக இலங்கையின் தேசியக் கொடியேந்தி, கோஷங்களை எழுப்பிப் போராடிவருகின்றனர். சிலர் இங்கு டென்ட் அமைத்து, அதில் தங்கிப் போராட்டம் நடத்திவருகிறார்கள். தமிழர்கள், சிங்களர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி நடத்தும் இந்தப் போராட்டத்தில், தன்னார்வலர்கள் பலரும் இலவச உணவு, குடிநீர் வழங்கிவருகின்றனர். தற்காலிகக் கழிப்பறைகள், தற்காலிக நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

24 மணி நேரமும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், சுமார் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டாலும், ஒரு சிறிய குப்பையைக்கூடக் கீழே போட்டுவிடாமல் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

தீர்ப்பளித்த பிரபாகரன்!

கால் ஃபேஸிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக இலங்கை நீதிமன்றத்தை நாடியது ராஜபக்சே அரசு. ஆனால், `மக்களுக்குப் போராட முழு உரிமையுண்டு’ என்று சொல்லி அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் பெயர் பிரபாகரன் என்பதால், தீர்ப்புக்குப் பின்னர் தமிழர்கள் பலரும் உணர்ச்சி பொங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மெரினா முழுவதும் செல்போன் டார்ச் ஒளிர்ந்ததுபோல, இந்த கால் ஃபேஸ் போராட்டத்தில் இரவு நேரங்களில் செல்போன் டார்ச் ஒளி மிளிர்கிறது. போராட்டக் களத்தில், இலங்கை அரசால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் சில பத்திரிகையாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் `நீதி எங்கே?’ என்ற கேள்வியோடு வைக்கப்பட்டிருந்தன.

`இது என் தாய் நாடு!’

போராட்டக்களத்திலிருந்த சிலரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம். குடும்பத்துடன் இந்தப் போராட்டத்துக்கு வந்திருந்த தமிழ்ப் பெண் கவிதா, ``இலங்கை எவ்வளவு அழகான நாடு... அதை ராஜபக்சே குடும்பம் இப்படி கேவலப்படுத்திட்டாங்க. நான் குடியிருக்கிறது ஒரு சிங்களரோட வீடுதான். நாங்க எங்களுக்குள்ள பரஸ்பரம் உதவி செஞ்சுப்போம். ஆனா, இந்த அரசியல்வாதிகள் வாக்குக்காக எங்களைப் பிரிக்க நினைச்சாங்க. ஆனா, இந்தப் போராட்டத்துல நாங்க ஒண்ணு சேர்ந்துட்டோம். போன வாரம் இந்தியாவுக்குப் போகலாம்னு முடிவு பண்ணினோம். ஆனா, எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்காங்க... எங்க காலம் முடிஞ்சுது. குழந்தைகளுக்காக இந்த நாட்டை மீட்டெடுக்கணும்கிற முடிவுக்கு வந்துதான் இங்கே போராட வந்திருக்கேன். இது என் தாய் நாடு; நான் இங்கதான் இருப்பேன். ராஜபக்சே குடும்பம் நாட்டைவிட்டு வெளியே போகட்டும்’’ என்றார் உணர்ச்சிகரமாக.

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

`பெட்ரோல் போட 55,000 ரூபாய்..!’

``என் வீட்டுக்காரர் மட்டுமே வேலைக்குப் போறார். அவர் பார்க்குற வேலைக்கு கார் அவசியம். ஒரு மாசத்துக்கு காருக்கு பெட்ரோல் போடவே இலங்கை ரூபாயில் 55,000 போயிடுது. அப்புறம் சாப்பாட்டுச் செலவுக்கு நாங்க எங்கே போறது..? 93 ரூபாயாக இருந்த ஒரு கிலோ அரிசி, இப்போ 210 ரூபாய் ஆகிடுச்சு. அரசு ரேஷன் கடைகளில் பொருள்கள் இல்லை. என் கணவருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம். எங்களுக்கே இந்த நிலைமைன்னா, குறைந்த சம்பளம் வாங்குறவங்களோட நிலையை யோசிச்சுப் பாருங்க’’ என்றார் போராட்டக் களத்திலிருந்த மற்றொரு பெண். ஆனந்த் என்ற இளைஞர், ``சமைக்க காஸ் இல்லை, வண்டியில போக பெட்ரோல் இல்லை, வீட்டுல இருக்க கரன்ட் இல்லை... மூணு மாசம் முன்னாடியே இந்தப் பிரச்னைகள் தொடங்கிடுச்சு. ஆனா, இப்ப என்ன பண்றதுன்னே தெரியாத அளவுக்கு கைமீறிப் போயிட்டதால போராட வந்துட்டோம்’’ என்றார்.

துணை நிற்கும் காவலர்கள்!

கால் ஃபேஸுக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்ததால், அந்தப் பகுதியின் நான்கு பக்கமும் காவல் தடுப்புகளை ஏற்படுத்தியது அரசு. ஆனால், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணியாக வந்த மாணவர்கள் அந்தத் தடுப்புகளைத் தகர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த காவல்துறையினரும், ராணுவத்தினரும் மாணவர்களைத் தடுக்கவில்லை. இது குறித்துப் பெயர் குறிப்பிட விரும்பாத சிங்கள ராணுவ வீரர் ஒருவர், ``எங்க வீட்டுலயும் சிலிண்டர் இல்லை, உணவுப்பொருள்கள் இல்லை... எங்க அப்பா அம்மாவுக்கு மருந்து, மாத்திரைகூட இல்லை. எங்களுக்காகவும் சேர்த்துத்தான் இந்த மாணவர்கள் போராடுறாங்க. அதனால அவங்களைத் தடுக்க மனசு வரலை’’ என்றார். அங்கு காவல் பணியிலிருந்த பெரும்பாலான அதிகாரிகளின் மனநிலை அதுவாகத்தான் இருந்தது.

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

யார் ஆட்சிக்கு வர வேண்டும்? - விடையில்லாத கேள்வி!

பள்ளிகள், தேர்வுகள் பற்றிய கேள்விகளுக்கு, ``பள்ளிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், காகிதங்கள் இல்லாததால் பெரும்பாலான பள்ளிகளில் தேர்வுகள் நடப்பதில்லை. சில தனியார் பள்ளிகளில் `பேப்பர் ஃபீஸ்’ என காகிதங்களுக்கு 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு தேர்வு நடத்துகிறார்கள்’’ என்றனர். நம்மிடம் பேசிய இளைஞர் ஒருவர், ``நிலைமை இப்படியே நீடிச்சா இலங்கை இன்னொரு சோமாலியாவா மாறிடும். ராஜபக்சே குடும்பம் மொத்தமாகப் பதவி விலகணும். அவங்க கொள்ளையடிச்சு வெளிநாட்டுல வெச்சுருக்குற பணத்தையெல்லாம் இலங்கைக்குக் கொண்டு வரணும்’’ என்றார் ஆவேசமாக. இங்கு போராடுபவர்கள் அனைவருமே இதைத்தான் சொல்கிறார்கள். `ராஜபக்சே பதவி விலகிய பின்னர், யார் ஆட்சிக்கு வர வேண்டுமென நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அது குறித்த தெளிவு மற்ற அரசியல் கட்சிகளிடமும் இல்லை என்பது ஆச்சர்யமான விஷயம்!

பவுன், இரண்டு லட்சம்!

எப்போதுமே ஏப்ரல் மாதம் நகைக்கடைகள் களைகட்டுமாம். முக்கியமாக, கொழும்புவிலிருக்கும் `சீ ஸ்ட்ரீட்’ நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுமாம். இப்போது 100-க்கு 90 கடைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. 10 சதவிகிதக் கடைகளுக்கு வரும் ஓரிருவர்கூட நகை வாங்க வருவதில்லை; விற்கத்தான் வருகிறார்கள். இன்றைக்கு ஒரு பவுன் தங்கத்தின் விலை இரண்டு லட்சம் ரூபாய்!

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

மருந்துத் தட்டுப்பாடு!

இலங்கையின் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினரான வாசன் ரத்தினசிங்கத்திடம் பேசினோம். ``இலங்கையில் உயிர்காக்கும் ஐந்து முக்கிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. மாரடைப்பு என்று ஒருவர் மருத்துவமனைக்கு வந்தால், அவருக்குக் கொடுக்க மருந்து இல்லை. மொத்தம் 237 மருந்துகள் இங்கு சுத்தமாகக் கிடைக்கவில்லை. வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்தான் மருந்துகளை அனுப்பி, இங்கிருக்கும் மக்களின் உயிரைக் காக்க வேண்டும்’’ என்றார்.

நலிந்த சுற்றுலாத்துறை!

இலங்கையின் பிரதான தொழிலான சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுவந்த குதுப்தீன், ``2019-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. நான்கு மாதங்கள் கழித்து நிலை சரியானது. அடுத்து கொரோனா வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா குறையத் தொடங்கியதும் பொருளாதாரம் சரிய, சுற்றுலாத்துறை முற்றிலுமாகப் படுத்துவிட்டது. சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கையைச் சுற்றிக்காட்ட டிராவல்ஸ் வைத்திருந்த நான், தற்போது என்னிடமிருந்த கார்களை விற்றுவிட்டு, கார் ஓட்டுநராகப் பணிபுரிகிறேன்’’ என்றார்.

திண்டாடும் மக்கள்... தீர்வின்றித் திணறும் அரசு! - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

பெரும் சரிவுக்கு முன்னோட்டம்?!

இலங்கையில் வாழும் பணக்காரர்கள் இந்த நெருக்கடியைச் சிரமத்துடன் எதிர்கொள்கிறார்கள். கஷ்டத்திலேயே பழகிய ஏழைகள், ‘எப்போதும் இதே கஷ்டம்தானே...’ எனக் கடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடுத்தட்டு வர்க்க மக்கள்தான் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள். போராட்டக் களத்திலிருக்கும் பெண்கள் முகத்தில் கடுமையான பதற்றமும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலையும் தென்படுகின்றன. இளைஞர்களிடம் ஆக்ரோஷமான எதிர்ப்பு மனநிலையைப் பார்க்க முடிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இலங்கையில் தற்போது நிலவிவரும் நெருக்கடி ஒரு பெரிய பஞ்சத்துக்கான முன்னோட்டமாகவே தெரிகிறது.

`இலங்கை எப்படி மீளப்போகிறது?’ என்ற கேள்விக்கு அந்த நாட்டுக்கே நேரடியாகச் சென்ற பின்னரும் நமக்கு விடை கிடைக்கவில்லை; அவர்களிடமும் இல்லை. டம்மியாக ஓர் அரசாங்கம் செயல்பட்டுவரும் இலங்கையில், எப்போது இயல்புநிலை திரும்பும் என்பதற்குக் காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்!

`ஐ லவ் யூ கோத்தபய!’

போராட்டக் களத்திலிருந்த பெண் ஒருவர் நம்மிடம் பேசத் தொடங்கியதுமே `ஐ லவ் யூ கோத்தபய’ என்றார். அதிர்ச்சியுடன் நாம் அவரைப் பார்க்க, சிரித்துக்கொண்டே தொடர்ந்த அந்தப் பெண், ``பல்வேறு பிரச்னைகளால பிரிஞ்சிருந்த தமிழர்கள், சிங்களர்கள், இஸ்லாமியர்களை ஒண்ணு சேர்த்ததுக்காக ஐ லவ் யூ சொன்னேன்’’ என்றார் நக்கலாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism