கோவிட் தொற்றின்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய வைத்தன. நோய்த் தொற்றின் தீவிரம் குறைந்த பின்னரும் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதையே விரும்புவதாகத் தெரிவித்தனர். பல நிறுவனங்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வர வேண்டும் எனத் தெரிவித்தாலும், சில நிறுவனங்கள் அவர்களின் உளவியல் சிக்கல்களைப் புரிந்து கொண்டு வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கி வருகின்றன.
இங்கிலாந்தில் அதிக வருமானத்தை ஈட்டும் முதல் 50 சட்ட நிறுவனங்களில் ஒன்று ஸ்டீபன்சன் ஹார்வூட். லண்டனில் உள்ள இந்நிறுவனத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். பாரிஸ், கிரீஸ், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இங்கு பணிபுரியும் வழக்கறிஞர்கள் மற்றும் பிற ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலிருந்து 20% குறைக்கப்படும் என்ற கண்டிஷனையும் விதித்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஜூனியர் வழக்கறிஞர் ஒருவரின் ஆரம்ப ஊதியம் சுமார் 90,000 பவுண்டுகள் எனில், ஒருவேளை அவர் வீட்டிலிருந்து பணிபுரிய தீர்மானிக்கும் பட்சத்தில் இவரின் ஊதிய தொகையில் இருந்து 18,000 பவுண்டுகள் பிடித்துக்கொள்ளப்படும். இந்தப் புதிய திட்டம் லண்டனில் உள்ள அலுவலகம் மற்றும் நிறுவனத்தின் சர்வதேச அலுவலகங்களுக்குப் பொருந்தும்.
லண்டனில் வாழ்க்கைக்கான செலவுகள் அதிகம் என்பதால், கொரோனா வைரஸ் நோய்ப் பரவலின்போது, லண்டனில் வசிக்காத வழக்கறிஞர்களை இந்நிறுவனம் வேலைக்கு எடுத்தது. சம்பளக் குறைப்புடனான வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவிப்புக்கு சில ஊழியர்கள் மட்டுமே சம்மதிப்பார்கள் என்றும், பலரும் வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் அலுவலகம் வந்து வேலை பார்ப்பது என இரண்டுக்கும் தயாராக இருப்பதாகவும் நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.