Published:Updated:

`உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது!’ - நேபாள பிரதமரின் பேச்சால் சர்ச்சை

`கடவுள் ராமர் எங்களது நம்பிக்கையைச் சார்ந்த ஒருவர். அதில் விளையாட நேபாள பிரதமராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்’ - பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிசாய் சோங்கர் சாஸ்திரி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில்தான் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், ராமர் தெற்கு நேபாளில் உள்ள தோரியில்தான் பிறந்தார் என்றும் தெரிவித்தார். தனது இல்லத்தில் நடந்த கவிஞர் பானுபக்தா பிறந்தநாள் விழாவின்போது இந்தக் கருத்தை நேபாள பிரதமர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,``கலாசார ரீதியாக நாங்கள் சற்றே ஒடுக்கப்பட்டுள்ளோம். உண்மைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இன்னமும் சீதையை நாங்கள்தான் இந்திய இளவரசர் ராமருக்குக் கொடுத்தோம் என்று நம்புகிறோம். ஆனால், நாங்கள் அயோத்தியில் இருந்த இளவரசருக்குத்தான் சீதையைக் கொடுத்தோம். இந்தியாவில் இருந்தவர்க்கு அல்ல.

நேபாளம்
நேபாளம்
AP

அயோத்தி என்பது பிர்குஞ்சுக்கு சற்றே மேற்கே உள்ள கிராமமாகும். இப்போதுள்ள இந்தியாவில் உள்ள அயோத்தி அல்ல அது. அந்தக் காலகட்டத்தில் எந்தத் தொடர்பும், போக்குவரத்து வசதியும் இல்லாத சமயத்தில் அவ்வளவு தொலைவில் உள்ள இருவருக்கும் கல்யாணம் நடப்பது என்பது சாத்தியமில்லை" என்றார். தசரத் நேபாளத்தின் அரசர் என்பதால், அவர் மகன் ராமனும் இங்குதான் பிறந்திருப்பார் என்ற வாதத்தையும் முன்வைத்தார்.

ஏற்கெனவே இந்தியா, நேபாளிடையே கடந்த சில நாள்களாகவே பதற்றமான நிலையே நீடித்து வருகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே 8 -ம் தேதி அன்று லிபுளேக் பாதை மற்றும் உத்தரகாண்டில் உள்ள தார்சுலாவை இணைக்கும் 80 கி.மீ சாலையைத் திறந்து வைத்தார். நேபாளத்தில் உள்ள சில பகுதிகளையும் இந்தச் சாலை ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி நேபாள அரசு எதிர்த்தது. ஆனால், இது இந்தியாவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இருப்பதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், நேபாள அரசியலமைப்பு திருத்தம்படி இந்தியாவில் உள்ள மூன்று முக்கிய பகுதிகளையும் இணைத்து தங்களது வரைபடைத்தை மாற்றி அமைத்துக் கொண்டது. இதற்கு இந்தியா கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. இந்நிலையில்தான் நேபாள பிரதமர் ஒலி ராமர் பற்றிய இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

இவரின் கருத்துக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. இதைப் பற்றி முன்னாள் பிரதமர் பிரசாந்தா கூறுகையில் "இந்தியாவுக்கு எதிரான ஒலியின் கருத்தானது, அரசியல் ரீதியாகவும் சரி, ராஜ தந்திர ரீதியாகவும் சரியானதல்ல என்றார். பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் தலைவர்களில் பிரசாந்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிசாய் சோங்கர் சாஸ்திரி கூறுகையில், ``இந்திய மக்களின் நம்பிக்கையோடு இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சியினர் விளையாடி வந்தனர். இதே போல் நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்ட்களையும் அவர்களின் கருத்தையும் மக்கள் நிராகரித்துவிடுவர். கடவுள் ராமன் எங்களது நம்பிக்கையை சார்ந்த ஒருவர். அதில் விளையாட நேபாள பிரதமராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார். நேபாள பிரதமரின் ராமர் பற்றிய இந்தக் கருத்து சமூக வலைதளங்களிலும் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு