Published:Updated:

மக்களுக்குப் பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம்... கொடுத்து வைத்த மக்கள் வாழும் லக்ஸம்பர்க்!

லக்ஸம்பர்க் நாட்டில் போக்குவரத்து முற்றிலும் இலவசம்
லக்ஸம்பர்க் நாட்டில் போக்குவரத்து முற்றிலும் இலவசம்

லக்ஸம்பர்க்கில் 1,000 பேருக்கு 700 கார்கள் உள்ளன. இதனால், போக்குவரத்து நெருக்கடியும் அதிகம். போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு ஆலோசித்தது.

புவி வெப்பமயமாதல் இப்போது உலகம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னை. காற்றுமாசு காரணமாக மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வரை இந்தியாவில் உயிரிழக்கின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடப்படும் கார்பன் வாயு காரணமாக சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைகிறது. அதிகமான கார்பன் வெளியிடுவதால் உலகிலேயே மிக அதிக பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.

காற்று மாசு ஏற்படுத்தும் அனல் மின்நிலையங்கள்
காற்று மாசு ஏற்படுத்தும் அனல் மின்நிலையங்கள்

காற்று மாசு காரணமாக ஏற்படும் இழப்பீடு நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதத்துக்குச் சமமாக உள்ளது. உலகில், மோசமாகச் சுற்றுச்சூழல் பாதிப்படைந்த 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த 15 நகரங்களும் வடஇந்தியாவைச் சேர்ந்தவை. நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாரியா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இங்கு, வாழும் மக்களின் நிலையைப் பற்றி யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

காற்று மாசைத் தடுப்பதற்காக, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட ஷாங்காய், பெர்லின், லண்டன், பாரீஸ், மாட்ரிட், சியோல் போன்ற நகரங்களில் பொதுப் போக்குவரத்துத் திட்டம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் நகரில் 69 சதவிகித மக்கள் பணிக்குச் செல்ல பொதுப் போக்குவரத்து துறையைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், உலகிலேயே முதன்முறையாக ஒரு நாடு, பொதுப் போக்குவரத்து முழுவதுமே இலவசம் என்று அறிவித்துள்ளது. அந்த நாட்டின் பெயர் லக்ஸம்பர்க்!

ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளுக்கு மத்தியில் உள்ள குட்டி நாடு லக்ஸம்பர்க். மொத்தமே 6.50 லட்சம் மக்கள்தான் இங்கே வசிக்கின்றனர். தனிநபர் வருமானம் அதிகம். ஐரோப்பாவில் 1,000 பேருக்கு 700 கார்கள் வைத்திருக்கும் நாடு இது. கார்கள் வைத்திருக்கும் விஷயத்தில், இந்த நாட்டுக்குத்தான் ஐரோப்பாவில் முதலிடம். செல்வச்செழிப்பில் உள்ள லக்ஸம்பர்க்கில் இனி பேருந்து டிராம், ரயில் போன்றவற்றில் மக்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். லக்ஸம்பர்க்கைப் பொறுத்தவரை, எதற்கெடுத்தாலும் காரை எடுத்துக்கொண்டு கிளம்புவோர் அதிகம். வேலைக்குச் செல்ல 47 சதவிகிதம் பேர் காரைப் பயன்படுத்துகின்றனர். வேலை இல்லாத சமயத்தில் 71 சதவிகிதம் பேர், காரை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றுகின்றனர். 32 சதவிகித மக்கள் வேலைக்குச் செல்ல பேருந்தைப் பயன்படுத்துகின்றனர். 19 சதவிகிதம் பேர் ரயிலைப் பயன்படுத்துகின்றனர்.

லக்ஸம்பர்க் ரயில் போக்குவரத்து
லக்ஸம்பர்க் ரயில் போக்குவரத்து

மும்பையிலிருந்து சூரத் நகருக்கும் அங்கிருந்து மும்பைக்கும் தினமும் வேலைக்கு வந்து போவோர் அதிகம். அது போல, லக்ஸம்பர்க்குக்குப் பக்கத்து நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியத்திலிருந்து தினமும் 2,14,000 பேர் வேலைக்கு வருகிறார்கள். காரணம் லக்ஸம்பர்க்கில் சம்பளம் அதிகம். இவர்கள், அனைவருமே காரைப் பயன்படுத்துவதால் அந்தக் குட்டி நாட்டிலும் தினமும் போக்குவரத்து நெருக்கடிதான். அதோடு, லக்ஸம்பர்க்கில் பெட்ரோல், டீசல் விலையும் குறைவு. அதனால், இங்கு வேலைக்கு வருவோர்கள் இந்த நாட்டிலேயே பெட்ரோல் நிரப்பிக்கொண்டு தாராளமாக ஊர் சுற்றுகிறார்கள். அதிகமான சம்பளமும் குறைவான பெட்ரோல் விலையும் லக்ஸம்பர்க் மக்களை கார் வாங்கத் தூண்டும் காரணிகளாக உள்ளன. ஆனால், மக்கள் மீது வரி விதிக்க விரும்பாத அந்த நாட்டு அரசு, பொதுப் போக்குவரத்து இலவசம் என்று அறிவித்துள்ளது.

லக்ஸம்பர்க்கின் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில் வாகனப் போக்குவரத்து முதலிடத்தில் இருந்தது. வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது போக்குவரத்து முற்றிலும் இலவசமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகமான மக்கள் ரயில், பேருந்து, டிராம், போன்றவற்றைப் பயன்படுத்த முன்வருவார்கள். பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, ஆண்டு ஒன்றுக்கு 400 யூரோ கொடுத்து பாஸ் எடுக்க வேண்டியிருந்தது. இனிமேல் சாதாரண மக்கள் இந்த பாஸை எடுக்க வேண்டிய அவசியமிருக்காது.

லக்ஸம்பர்க் போக்குவரத்து துறை பஸ்
லக்ஸம்பர்க் போக்குவரத்து துறை பஸ்

அதே வேளையில், முதல் வகுப்புப் பயணிகள் ஆண்டுக்கு 660 யூரோ மதிப்பு கொண்ட பாஸ் எடுக்க வேண்டும். பக்கத்து நாடுகளிலிருந்து லக்ஸ்ம்பர்க் வருபவர்கள் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம். ரயில் போக்குவரத்தை இன்னும் நவீனப்படுத்த 4 பில்லியன் யூரோவை முதலீடு செய்யவும் அந்த நாடு முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை 20 சதவிகிதம் அதிகரிக்க லக்ஸம்பர்க் திட்டமிட்டுள்ளது.

லக்ஸம்பர்க் மட்டுமல்ல உலகம் முழுக்கவே காற்று மாசைக் குறைக்க பல நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. சிங்கப்பூரிலும் சாலையில் ஓடும் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 56 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள இந்த நாட்டில் 6 லட்சம் வாகனங்கள் சாலைகளில் ஓடுகின்றன. இதனால், கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பொதுப் போக்குவரத்து திட்டத்தை அந்த நாடு தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது. நான்கு நண்பர்கள் ஒரே இடத்தில் பணி புரிபவர்களாக இருந்தால், வாரத்துக்கு ஒருவரின் காரில் அலுவலகத்துக்குச் செல்கிறார்கள். மக்களே முன் வந்து தங்கள் கார்கள் பயன்பாட்டைக் குறைத்து அரசுக்கு உதவுகின்றனர். எஸ்டோனியா என்ற குட்டி நாட்டில் 4,20,000 மக்களே வசிக்கின்றனர். இந்த நாட்டின் தலைநகரமான டல்லின் நகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம் செய்யப்பட்டுள்ளது.

சிகாரி பஸ்
சிகாரி பஸ்

பெல்ஜியத்தில் உள்ள ஹசால்ட் நகரத்தில் 1997- ம் ஆண்டு முதலே பொதுப் போக்குவரத்து திட்டம் முற்றிலும் இலவசம்தான். கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து தார்வாட் வரை அரசு பஸ்கள் செல்ல தனி டிராக் ( bus rapid transit system) அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்கில் சிகாரி என்ற ரக பஸ்கள் மட்டுமே இயக்கப்படும். மற்ற வாகனங்களுக்கு இடமில்லை. இதனால், அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் மிக விரைவாக தாங்கள் சேர வேண்டிய இடங்களுக்குச் சென்று விட முடிகிறது. ஜெர்மனியின் Monheim நகரிலும் பொதுப் போக்குவரத்து இலவசம்தான். நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்குவது குறித்தும் ஜெர்மனி ஆலோசித்து வருகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய நகரங்களில் கன்ஸாஸ் சிட்டியும் ஒன்று. அந்நகரிலும் பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம்தான்.

அடுத்த கட்டுரைக்கு