Published:Updated:

மீட்புப் பணி; விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; 12 மணி நேரம் நீந்தி உயிர்பிழைத்த மடகாஸ்கர் அமைச்சர்!

மடகாஸ்கர் விபத்து
News
மடகாஸ்கர் விபத்து ( Andry Rajoelina / twitter )

இந்த எதிர்பாராத விபத்தில், கப்பலில் பயணம் செய்தவர்களில் 39 பேர் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர்.

மடகாஸ்கர் தீவில் கடந்த திங்கள்கிழமை அன்று, முறையாக அனுமதி பெறாமல் சுமார் 130-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, சரக்கு கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கப்பலில் பழுது ஏற்பட்டது. அதனால் கப்பலில் தண்ணீர் புகுந்து கப்பல் மூழ்கத் தொடங்கியது. இந்த எதிர்பாராத விபத்தால், கப்பலில் பயணம் செய்தவர்களில் 39 பேர் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர். 68 பேரின் நிலை என்னவெனத் தெரியாமல் இருந்துவந்தது. அதையடுத்து, பயணிகளை மீட்பதற்காக மடகாஸ்கர் தீவிலிருந்து மீட்புப்படை கிளம்பியது. அந்த மீட்புப்படையுடன், ஹெலிகாப்டரில் மடகாஸ்கர் அமைச்சர் கேலேவும் உடன் சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரெனப் பழுதானது.

விபத்து
விபத்து

அதனால், கடலில் குதித்த அமைச்சர் கேலே சுமார் 12 மணி நேரம் நீந்தி மஹாம்போ எனும் தீவை அடைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவரை மீட்ட மஹாம்போ தீவு மக்களிடம், தான் உயிருடன் இருப்பதாக வீடியோ பதிவு செய்யக் கூறிய கேலே, அதை அதிகாரிகளுக்கு அனுப்பி தகவல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``நான் திங்கள்கிழமை மாலை 7:30 மணிக்கு நீந்த ஆரம்பித்து, மறுநாள் காலை 7:30 மணி வரை நீந்தி இந்தத் தீவை அடைந்தேன். என் நாட்டு மக்களுக்கும், அரசுக்கும், என் குடும்பத்தினருக்கும், நான் உயிரோடு இருக்கிறேன் என்று சொல்லவே இந்த வீடியோவைப் பதிவுசெய்கிறேன். நான் இறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து மடகாஸ்கர் உயர் காவல்துறை அதிகாரி சபீஸ்சாம்பஸ்ட்ரா ரோவாவி தெரிவிக்கையில், ``கேலே தன்னுடைய ஒரு ஹெலிகாப்டர் இருக்கையை மிதக்கும் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவருக்கு இயல்பாகவே கூடுதல் ஸ்டாமினா உண்டு. இப்போதும் தன்னுடைய உடலை 30 வயது இளைஞரைப்போல வைத்திருக்கிறார். அதனால்தான் அவரால் இவ்வளவு தூரம் நீந்த முடிந்தது. அவரின் நரம்புகள் அனைத்தும் இரும்புபோல இருக்கின்றன" என்றார்.

கேலே கடந்த ஆகஸ்ட்டில் அமைச்சராகப் பதவி ஏற்கும் முன்னர், 30 வருடங்களாகக் காவல்துறையில் பணியாற்றினார். அவருடன் சென்ற இரண்டு அதிகாரிகளின் நிலை என்ன என்பது தெரியாமலிருந்த நிலையில், அவர்களும் தற்போது மீட்கப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து அந்த நாட்டின் தலைவர் ஆன்ட்ரி ரோஜோலினா தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் செர்ஜ் கேலேவைப் பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.