கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் இந்த கோவிட் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேபோல் இங்கிலாந்தும் தீவிர கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் அனைவரும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்பதும் அறிந்ததே! இதில் என்ன இருக்கிறது உலகளவில் பின்பற்றப்படும் நடவடிக்கைதானே என நினைக்கலாம். விஷயம் என்னவென்றால் அணிந்திருந்த மாஸ்க்கை ஒரு 16 விநாடிகள் கழட்டி வைத்ததற்காக ரூ 2 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது இங்கிலாந்து காவல் துறை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஓ'டூல் என்பவர் ஜனவரி 27 அன்று ப்ரெஸ்காட்டில் உள்ள பி அண்ட் எம் (B&M) என்ற கடையில் நுழைந்தபோது மாஸ்க் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தார். பின்னர் கடைக்குள் சென்று உடல்நிலை சற்று சரியில்லாமல் உணர்ந்த காரணத்தால் சிறிது நேரம் போட்டிருந்த மாஸ்க்கை கிட்டத்தட்ட ஒரு 16 விநாடி கழற்றி வைத்து பின்னர் மறுபடியும் அணிந்துள்ளார். இந்த நேரத்தில் கடைக்குள் நுழைந்த காவல் துறையினர் அவர் மாஸ்க் அணியாமால் இருந்ததுப் பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு கிறிஸ்டோபர், தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சில விநாடிகள் மட்டுமே மாஸ்கை கழட்டியதாக காவல் துறையினரிடம் விளக்கியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரது விளக்கம் காவல்துறைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை. காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறார் என நினைத்து விட்டனர் காவல்துறையினர். பின்னர் சில நாட்கள் கழித்து ACRO குற்றப் பதிவு அலுவலகத்திலிருந்து கிறிஸ்டோபருக்கு 100 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு ஒரு கடிதம் வந்துள்ளது. அதனை ஏற்க மறுத்த கிறிஸ்டோபர், `தான் எந்த தவறும் செய்யவில்லை 16 விநாடிகள் மாஸ்க் அணியாததற்கெல்லாம் அபராதம் செலுத்த முடியாது!' என விளக்கி மெயில் அனுப்பியுள்ளார்.
சரி விஷயம் இதோடு முடிந்தது என்று நினைத்த கிறிஸ்டோபருக்கு அதன்பின் தான் அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 16 விநாடிகள் மாஸ்க் அணியாததற்காக 2 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சொல்லி காவல்துறை மறுகடிதம் அனுப்பியிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிறிஸ்டோபர், பேசாமல் முதலில் விதித்த 100 டாலர் அபராதத்தையேக் கட்டியிருக்கலாம் தற்போது விதித்துள்ள இந்த ($2000) 2 லட்சம் அபராதத்தை, தனது முழு சம்பளத்தையும் வைத்துகூட இந்த அபராதத் தொகையை ஈடுகட்ட முடியாது என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். ஒரு 16 விநாடிகள் மாஸ்க் அணியாமல் இருந்ததற்கா 2 லட்சம் ருபாய் அபராதம் என நெட்டிசன்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இந்த செய்தியைப் பகிர்ந்து வருகின்றனர்.