ஜெர்மனியைச் சேர்ந்த நபர் ஒருவர் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை 90 முறை செலுத்திக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் மெக்டபெர்க் (Magdeberg) நகரைச் சேர்ந்த 60 வயதான இந்த நபர் போலியாக தடுப்பூசிச் சான்றிதழ் தயாரித்துத் தரும் பணியைச் செய்துவந்திருக்கிறார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு இத்தகைய போலிச் சான்றிதழ்கள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் சான்றிதழ்களில் இருந்த வரிசை எண் உண்மையான எண்ணாக இருப்பதற்காக இவர், தானே 90 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார். அதில் கிடைக்கும் சான்றிதழ்களில் மற்ற விவரங்களை மாற்றி நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

சமீபத்தில் எலியன்பெர்க் (Elienberg) என்ற ஊரில் இருந்த தடுப்பூசி முகாமில் தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தற்போது பிடிபட்டிருக்கிறார். இவரிடமிருந்து சில தடுப்பூசிச் சான்றிதழ் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவரைப் பற்றிய வேறு விவரங்களைக் காவல்துறை வெளியிடவில்லை. ஆனால் முறையற்று, சட்டத்துக்கு எதிராகத் தடுப்பூசிச் சான்றிதழ்கள் வழங்கியதற்காக இவர் விசாரணையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் அந்த நபரின் உடல்நிலையும் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. வெவ்வேறு தடுப்பூசிகளைப் பலமுறை செலுத்திக்கொண்டதால் அவர் உடல்நிலையில் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என ஆய்வு செய்துவருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் ஜெர்மனியில் இது போன்ற பல போலி தடுப்பூசிச் சான்றிதழ்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பலர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்துவருகின்றனர். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே போலிச் சான்றிதழ்கள் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். பொது இடங்களான உணவகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும், பணியிடங்களிலும் தடுப்பூசிச் சான்றிதழ் கட்டாயமாகத் தேவைப்படுவதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.