பொதுவாகத் தலைவலி என்றால் யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை சிறுது நேரத்தில் சரியாகிவிடும் என்று விட்டு விடுவோம், ஆனால் சாதாரண தலைவலி இல்லாமல் நெடுநாட்களாகவே தலைவலி இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒருவேளை தலையில் கட்டி போன்ற ஏதேனும் பெரிய பிரச்னைகள் இருந்தால் பின் நாட்களில் அதுவே ஆபத்தாகவும் அமைந்துவிடக்கூடும். அதுபோல் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு புல்லட் ஒன்று மண்டையில் 20 ஆண்டுகளாக இருந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த 28 வயதான சியாவோ சென் (Xiao Chen) என்பவர் தொடர் தலைவலியை அனுபவித்து வந்தார். சரியாக தூங்காமல் இருப்பதால்தான் இந்த தலைவலி உள்ளது என்று கண்டுகொள்ளாமல் பல நாட்கள் விட்டுவிட்டார். பின்னர் ஒருநாள் தலைவலி அதிகமானதால் சந்தேகமடைந்து இறுதியாக மருத்துவரை அணுகினார்.

எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த 'Shenzhen University General Hospital'-ன் மருத்துவர்கள் சியாவோ சென்னின் மண்டையோட்டின் இடது பக்கத்தில் ஒரு விசித்திரமான பொருள் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர் நெருக்கமான ஆய்வு செய்து பார்த்தபோதுதான் அது ஒரு சிறிய உலோக புல்லட் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அவரது மண்டையில் அந்த புல்லட் சிக்கிக்கொண்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சியாவோ சென்னிடம், "இந்த புல்லட் எப்போது எப்படி வந்தது என்று ஏதாவது நினைவிருக்கிறதா" என்று கேட்டனர்.
சரியாக நினைவில்லாத அவர் தனக்கு 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரரும், தானும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்கக் கூடும் என்று தெரிவித்தார். அப்போது அவருக்குத் தன் தலையில் புல்லட் பாய்ந்துள்ளது என்று தெரியாமல் சிறு காயம் என்று நினைத்து அவர் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துவிட்டதாகவும் கூறினார்.
இதுபற்றிக் கூறும் மருத்துவர்கள் " 28 வயதான அவர் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம், தோட்டா உண்மையில் அவரது மண்டை ஓட்டிற்கு நெருக்கமாக இருந்தது , ஆனால் முழுமையாக மண்டை ஓட்டை ஊடுருவவில்லை எனவே மூலையைத் தாக்கவில்லை. மேலும் சுமார் 1 செ.மீ நீளம் மற்றும் சுமார் 0.5 செ.மீ விட்டம் கொண்ட 20 வயதான தோட்டா வெற்றிகரமாக அகற்றப்பட்டது" என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.