Published:Updated:

சர்ப்ரைஸ் காட்டினார்; சிரிப்பை அடக்க முடியவில்லை! - மனைவியின் கவலையைப் போக்கிய கணவர் செய்தது என்ன?

கர்ப்பிணியான தன் மனைவி வருத்தப்படுவது ஜாரெட் ப்ரூவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினார்.

maternity pictures
maternity pictures ( K.M.SmitherPhotography )

எப்போதே எடுத்த புகைப்படங்கள் பசுமையான நினைவுகளை மெல்ல மீட்டெடுக்கும். மொபைல்போன்களின் வரவு புகைப்படங்களை அடுத்த தளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. இதன்காரணமாக மக்களுக்கு புகைப்படங்களின் மீது ஆர்வம் அதிகமாகிவிட்டது. பீரோவில் எதையோ தேடியபோது பழைய போட்டோ ஆல்பம் ஒன்று கண்ணில்பட்டது. மிலிட்டரிக்கு ஆட்களை எடுப்பதுபோல் விரைப்பாக எல்லோரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். 90-களில் எடுத்த போட்டோக்கள்தான் அது. சில பெண்கள் நாணத்தில் முகத்தை மறைந்தபடி எடுத்த போட்டோக்களும் தென்பட்டன. இன்றைய தலைமுறை அப்படியில்லை. கேண்டிட் முதல் செல்ஃபி வரை வெளுத்துவாங்குகிறார்கள். வாழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான ஒவ்வொரு நிகழ்வையும் இப்போது படம் பிடிக்க விரும்புகிறார்கள்.

maternity pictures
maternity pictures
K.M.SmitherPhotography

அமெரிக்காவைச் சேர்ந்த கெல்சி மற்றும் ஜாரெட் ப்ரூவர் தம்பதி தம் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கர்ப்பிணியான கெல்சி இந்த அழகான தருணத்தை புகைப்படம் எடுக்க விரும்பினார். போட்டோஷூட்டுக்கும் ரெடியாகிவிட்டார். கெல்சிக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் கெல்சி வருத்தமடைந்தார். கர்ப்பிணியான தன் மனைவி வருத்தப்படுவது ஜாரெட்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதனால் தன் மனைவியை உற்சாகப்படுத்த விரும்பிய ப்ரூவர் கர்ப்பிணிபோல் புகைப்படம் எடுக்க நினைத்தார். உடனடியாகத் தன் உறவினரை அழைத்து போட்டோஷூட் எடுக்கும் திட்டம் குறித்து தெரிவித்தார். இருவரும் Elkhorn Creek பகுதியில் போட்டோஷூட் எடுத்தனர்.

maternity pictures
maternity pictures
K.M.SmitherPhotography

கர்ப்பிணிகள் எவ்வாறு புகைப்படம் எடுப்பார்களோ அதேபோல் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்களைத் தன் மனைவியிடம் சர்ப்பிரைஸாகக் காட்டியுள்ளார். இதைக்கண்ட கெல்சிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரது கவலைகள் எல்லாம் சில நிமிடங்களில் காணாமல்போனது. ஸ்மித்தர் போட்டோகிராபி என்ற முகநூல் பக்கத்தில் இந்தப் புகைப்படங்கள் மற்றும் எடுக்கப்பட்ட விதம் குறித்து பதிவிட்டுள்ளார். ஏராளமானவர்கள் இந்தப் புகைப்படங்களை லைக் செய்துள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறந்த கணவருக்கான விருது இவருக்குக் கொடுக்கலாம் எனச் சிலர் கமென்ட்ஸ் செய்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.