Published:Updated:

வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயர்! - சாலையில் இழுத்துச் சென்று தண்டனை வழங்கிய மக்கள்

மெக்ஸிகோவில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மேயர் ஜார்ஜ் லூயிஸை அப்பகுதி மக்கள் இணைந்து ஒரு டிரக்கில் கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

மேயர் ஜார்ஜ் லூயிஸ்
மேயர் ஜார்ஜ் லூயிஸ் ( Twitter )

மெக்ஸிகோவின் சியாபாஸ் ( Chiapas) மாகாணத்தில் உள்ளது லாஸ் மார்கரிட்டாஸ் (Las Margaritas) என்ற நகரம். இங்கு ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன் என்பவர் மேயராகப் பணியாற்றி வருகிறார். லாஸ் மார்கரிட்டாஸ் நகருக்குத் தேவையான அனைத்து வசதி மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு மேயரையே சேரும்.

 Las Margaritas
Las Margaritas

இந்நிலையில், மேயர் ஜார்ஜ் லூயிஸை ஒரு டிரக்கின் பின்னால் கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர் மார்கரிட்டாஸ் பகுதி மக்கள். நேற்று முன் தினம் இரவு, ஒரு மர்ம கும்பல் மேயரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்து வந்து தாக்கியுள்ளது.

`அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா;  சோதனை வேட்டையில் மெக்ஸிகோ!’ -  எக்ஸ்ரே மூலம் சிக்கும் அகதிகள்

பின்னர் மேயரின் கைகளை ஒரு டிரக்கில் கட்டி அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். அதற்குப் பின்னால் கம்பு மற்றும் குச்சிகளுடன் பல கிராம மக்கள் ஓடுகின்றனர். இந்தச் சம்பவங்கள் அடங்கிய வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் பகுதியில் சாலை, தண்ணீர் மற்றும் மின்சாரம் ஆகிய வசதிகள் முறையாக இல்லை என்றும் அதைச் சரி செய்துதருவதாக மேயர் அளித்த வாக்குறுதி, இன்னும் நிறைவேற்றப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

Viral Video
Viral Video

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த 40 போலீஸார் பொதுமக்களிடமிருந்து மேயரை மீட்டுள்ளனர். சிறிய காயங்களுடன் தப்பிய மேயர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், மேயர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு லாஸ் மார்கரிட்டாஸில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு வந்த மேயர் லூயிஸ், மக்கள் முன் சுமார் 8 மணி நேரம் பேசியுள்ளார். இந்தச் சம்பவத்தால் தான் பயந்துவிடவில்லை என்றும், நான்கு மாதத்துக்கு முன்னர் நடந்த ஒரு தனிப்பட்ட சம்பவத்துக்காகவே தற்போது தான் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

லாஸ் மார்கரிட்டாஸ் மேயர் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல. நான்கு மாதங்களுக்கு முன்னதாக சரியான சாலை வசதி ஏற்படுத்தித் தராததால் மக்கள் இவரைத் தாக்கியுள்ளனர். மெக்ஸிகோ முழுவதும் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பல், தங்கள் வழிக்கு வராத பல அதிகாரிகளை அலுவலகம் புகுந்து தாக்குவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. தற்போது மேயர் தாக்கப்பட்ட சம்பவமும் அவர்களின் தூண்டுதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.