இரும்பு மனிதர் மைக் டைசன் முன்னாள் குத்துசண்டை வீரர். 'உலகத்தின் மிக மோசமான மனிதன்' என இவரைச் சொல்பவர்களும் உண்டு. காரணம் அத்தனை சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.
தற்போது, விமானத்தில் சக பயணி ஒருவரை மைக் டைசன் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் சான் ப்ரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ப்ளோரிடா செல்லவிருந்த JetBlue விமானத்தில் நடந்துள்ளது.
55 வயதான மைக் டைசன் முன்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்திருக்க, அவரது பின் இருக்கையில் இருந்து சக பயணி ஒருவர், அவரை எரிச்சல்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக பேச முயன்றதாகவும் இதனால் கோபமடைந்த மைக் டைசன் அந்த சக பயணியை தாக்கியுள்ளார் என்றும் விமானத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மைக் டைசன் உடன் செல்பி எடுத்து கொண்ட பயணி, மைக் உடன் தொடர்ச்சியாக பேச முயன்று கொண்டிருக்கிறார். நடுவில் வீடியோவுக்கு சமிக்ஞைகள் வேறு தருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
Cool என சொல்லியவாறு இருந்த மைக் திடீரென கோபமாகி தன் இருக்கையில் இருந்தவாறே பின்புறம் திரும்பி அங்கு அமர்ந்திருந்த பயணியின் முகத்தில் மாறி மாறி தாக்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 'மைக் டைசன் கூடவே வம்பிழுக்க தனி தைரியம் வேணும்' என்பது போன்ற கமென்டுகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த பயணி போதையில் இருந்ததாகவும் மைக்கிடம் வேண்டுமென்றே தகராறு செய்ய முயன்றதாகவும் சிலர் பதிவிட்டிருக்கின்றனர். மைக் டைசன் விமானம் புறப்படும் முன்பே இறங்கி சென்றுவிட்டார். இந்த நிகழ்வை குறித்து சான் ப்ரான்சிஸ்கோ காவல்துறை விசாரித்து வருகிறது.