Published:Updated:

`ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழப்பு; விஸ்வரூபம் எடுத்த போராட்டம்!’ - கலைக்கப்படும் மின்னெபொலிஸ் காவல்துறை

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம் ( AP )

ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த மின்னெபொலிஸ் காவல்துறை கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகர் மின்னெபொலிஸில், மே 25-ம் தேதி 46 வயதான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், முன்னாள் காவல்துறை அதிகாரி டெரொக் சாவின் பிடியில் இருந்தபோது கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தார். ஜார்ஜைக் கீழே தள்ளி அவரின் கழுத்தைத் தன் கால் முட்டியால் சாவின் அழுத்தும் காட்சிகள் வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியாகி மொத்த அமெரிக்காவையும் அதிரவைத்தன.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

அமெரிக்காவில் இருக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதலுக்கு முடிவு கட்டவேண்டும், ஜார்ஜின் மரணத்துக்கு நீதி வேண்டும் மற்றும் அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் அதிகார வரம்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் கடந்த இரண்டு வாரங்களாகப் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. அமெரிக்கா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளிலும் இனவெறிக்கு எதிராகவும் ஜார்ஜின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் பெரும் போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போதே, ஜார்ஜ் கழுத்தின் மீது கால் வைத்து அழுத்திய முன்னாள் அதிகாரி சாவின் மற்றும் சம்பவத்தின் போது அந்த இடத்தில் இருந்த மேலும் 3 காவல் அதிகாரிகள் ஆகிய நால்வரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு, சாவின் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கும், மற்றவர்கள் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கப் போராட்டத்தில் பல இடங்களில் காவலர்கள், மக்கள் மீது அத்துமீறிய பல வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அமெரிக்கா - போராட்டம்
அமெரிக்கா - போராட்டம்
AP

இதனையடுத்து, காவல்துறையினர் மீதான மக்களின் எதிர்ப்பு மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் காவலர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டுமே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவை அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளியாக இருந்த மின்னெபொலிஸ் காவல்துறை முற்றிலும் கலைக்கப்படவுள்ளதாக அந்த நகரத்தின் கவுன்சிலர்கள் நேற்று அறிவித்துள்ளனர். “மின்னெபொலிஸ் நகரில் செயல்பட்டு வரும் காவல்துறை கலைத்துவிட்டு புதிதாகக் கட்டமைக்க முடிவு செய்துள்ளோம்.

`முதலில் ஜார்ஜ்; தற்போது முதியவர்’ - அமெரிக்காவில் பதற்றத்தை அதிகரிக்கும் போலீஸாரின் அத்துமீறல்கள்

எங்கள் சமூகம் மற்றும் மக்களுடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வரும் நாள்களில் உருவாக்கவுள்ள புதிய மின்னெபொலிஸ் காவல்துறை எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். தற்போது இருக்கும் காவல்துறையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது.” என்று அந்த நகரத்தின் கவுன்சில் தலைவர் லிசா பெண்டர், சி.என்.என் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார். இந்த அறிவிப்பு அமெரிக்க மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இருந்தும் இனவெறிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு