Published:Updated:

தீவிரவாதி ஹபீஸ் சையத் திடீர் கைது! - என்ன காரணம்?

மலையரசு

தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவாத் உள்ளிட்ட அமைப்புகளுக்கு விதிகளை மீறி நிதி திரட்டியதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹபீஸ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹபீஸ் சையத்
ஹபீஸ் சையத்

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி 10 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மும்பைக்குள் நுழைந்து தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் 'சி.எஸ்.டி' ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள், காவல்துறை அதிகாரிகள், வெளிநாட்டவர்கள் என 164 பேர் பலியானார்கள். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ஜமாத்-உத்-தவாத் தலைவர் ஹபீஸ் சையத் என்பவர் மூளையாகச் செயல்பட்டார் எனத் தெரியவந்தது.

ஹபீஸ் சையத்
ஹபீஸ் சையத்

இதையடுத்து தேடப்படும் முக்கியத் தீவிரவாதி பட்டியலில் ஹபீஸ் சையத் இடம்பெற்றார். பின்னர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட ஹபீஸ் சையத்தை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இருப்பினும் ஹபீஸ் சையத்தை விடுவிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. மேலும் அவரின் தலைக்கு ரூ.55 கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தது. இதேபோல் ஐநா சபையும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்தது.

இருப்பினும் பல கட்டங்களுக்குப் பிறகு அமெரிக்க நெருக்கடிக்கு பயந்து கடந்த வருடம் ஹபீஸ் சையத்தை தீவிரவாதியாக அறிவித்து, ஜமாத்-உத்-தவாத் உள்ளிட்ட 27 அமைப்புகளுக்குத் தடையும் விதித்தது பாகிஸ்தான் அரசு. இந்த நிலையில், தீவிரவாதி ஹபீஸ் சையத்தை அதிரடியாக இன்று கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்புத்துறையினர், பஞ்சாப் மாகாணத்தில் இருந்த ஹபீஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு ஏழு நாள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹபீஸ்
ஹபீஸ்
Vikatan

முன்னதாக தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவாத் உள்ளிட்ட அமைப்புகளுக்கு விதிகளை மீறி நிதி திரட்டியதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹபீஸ் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தது தீவிரவாத தடை பிரிவு. இந்தப் பிரச்னை தொடர்பாகத்தான் தற்போது அவரை கைது செய்துள்ளது. இதே பிரச்னையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துவரப்படும் நிலையில் இந்தக் கைது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.