Published:Updated:

யு.எஃப்.ஓ மர்மங்கள்... என்ன சொல்லப் போகிறது பென்டகன்?

யு.எஃப்.ஓ மர்மங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
யு.எஃப்.ஓ மர்மங்கள்

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றிய தரவுகள் எகிப்து பிரமிடுகளில் தொடங்கி ஆஸ்திரேலியா குகை ஓவியங்கள் வரை இருக்கின்றன.

நூற்றாண்டுகளாகத் தொடரும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தேடலுக்கான பதிலை நெருங்கிவிட்டதாகப் பரபரக்கின்றன அமெரிக்க ஊடகங்கள். இதுநாள் வரை அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (Unidentified Flying Object) குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிடக் கூடாது என்று அமெரிக்க அரசு ரகசியம் காத்துவந்த நிலையில், இதன் மீதான விசாரணை அறிக்கையை, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், ஜூன் மாதத்துக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதே இந்த பரபரப்புக்கான காரணம். இதையடுத்து, ‘வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மையா, பறக்கும் மர்ம விமானங்கள் அவர்களுடையதுதானா?’ என்பது போன்ற கேள்விகளும் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றிய தரவுகள் எகிப்து பிரமிடுகளில் தொடங்கி ஆஸ்திரேலியா குகை ஓவியங்கள் வரை இருக்கின்றன. 2014-ல் இந்தியாவிலும் சத்தீஸ்கர் மாநிலம், கன்கேர் மாவட்டத்தின் சராமா பகுதியில் பத்தாயிரம் வருடங்கள் பழைமையான குகை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், அடையாளம் தெரியாத சில குள்ள உருவங்களும், பறக்கும் விமானங்களும் வரையப்பட்டதைப் பார்த்த சத்தீஸ்கர் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள், பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் விசாரித்தனர். ஓவியங் களிலுள்ள குள்ள மனிதர்களை ‘ரொகேலா மனிதர்கள்’ என்று தங்கள் மூதாதையர்கள் அழைத்ததாகவும், வானத்திலிருந்து பெரிய தட்டு போன்ற விமானங்களில் அவர்கள் இறங்கியதாகவும் அந்தப் பெரியவர்கள் கூறியதைக் கேட்டு அதிகாரிகள் ஆச்சர்ய மடைந்தனர். இதையடுத்து, அதுபற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ மற்றும் நாசாவுக்குக் கடிதம் எழுதியது சத்தீஸ்கர் அரசு. இப்படி இங்கொங்கும் அங்கொன்றுமாக உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் யு.எஃப்.ஓ மர்மத்துக்கு, விரைவில் விடை கிடைக்கப்போகிறது என்பதுதான் சர்வதேச அளவில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது.

யு.எஃப்.ஓ மர்மங்கள்... என்ன சொல்லப் போகிறது பென்டகன்?

ரூஸ்வெல் சம்பவம்... ரூட்டை மாற்றிய சி.ஐ.ஏ

1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் உச்சத்திலிருந்தது. இருதரப்புகளுமே நவீன ரக ஆயுதங்களைத் தயாரிக்கும் போட்டியில் மும்முரமாகியிருந்தன. அமெரிக்காவைவிட தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்களை சோவியத் யூனியன் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் பரவின. இந்தச் சூழலில்தான் 1947, ஜூன் இறுதியில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் ரூஸ்வெல் கிராமத்தில், வானத்திலிருந்து ஒரு பொருள் விழுந்து நொறுங் கியதாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள், தட்டு போன்ற ஒரு பொருளை மீட்டதாக ஜூலை 8-ம் தேதி அறிவித்தனர். ஆனால், மறுநாளே இந்தத் தகவலை அமெரிக்க விமானப்படை தலைமையகம் மறுத்தது. “சோவியத் யூனியனின் அணுகுண்டு பரிசோ தனையை வேவு பார்க்க, மைக்ரோபோனுடன் கூடிய பலூன்களைப் பறக்க விட்டிருந்தோம். அதில் ஒரு பலூன்தான் ரூஸ்வெல்லில் விழுந்தது” என்று விளக்கமும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், 1948-ல் யு.எஃப்.ஓ தொடர்பாக ஆராய்வதற்காக ‘புராஜெக்ட் சைன்’ என்கிற கமிட்டியை அமைத்தது அமெரிக்கா. யு.எஃப்.ஓ ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட முதல் கமிட்டியும் இதுதான்.

யு.எஃப்.ஓ மர்மங்கள்... என்ன சொல்லப் போகிறது பென்டகன்?

புராஜெக்ட் ப்ளூ புக் - பெல்ஜியம் வேவ்

1949-ம் ஆண்டு தொடக்கத்தில், ‘அடையாளம் தெரியாத வகையில் பறப்பவை விமானங்கள் என்றே தெரிகிறது. ஆனால், அவற்றின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அறிக்கை அளித்தது ‘புராஜெக்ட் சைன்’ கமிட்டி. சில மாதங்களிலேயே, அந்த கமிட்டியைக் கலைத்துவிட்டு, ‘புராஜெக்ட் க்ரூட்ஜ்’ என்ற கமிட்டியை அமைத்தது அமெரிக்க அரசு. அதுவும் 1951-ம் வருடம் கலைக்கப்பட்டு, மார்ச் 1952-ல் ‘புராஜெக்ட் ப்ளூ புக்’ என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் யு.எஃப்.ஓ பற்றிய காட்சிகள், சம்பவங்களை ஆவணப் படுத்தியது ப்ளூ புக் கமிட்டி. டிசம்பர் 1969 வரை செயல்பட்ட இந்த கமிட்டி, ‘யு.எஃப்.ஓ-க்களை அமெரிக்க விமானப்படை நேரடியாக எதிர் கொள்ளவில்லை. அவை நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. அவை வேற்றுகிரகவாசிகள் பயன்படுத்தும் விமானங்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை’ என்று அறிக்கை அளித்தது. அந்த கமிட்டியில் வந்த 12,618 யு.எஃப்.ஓ தொடர்பான ஃபைல்களில், 701 ஃபைல்கள் விடைதெரியாமலேயே மூடப்பட்டன. இந்த கமிட்டி கலைக்கப்பட்ட பிறகு, எந்த கமிட்டியும் அமைக்கப்படவில்லை.

1980-க்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக, உலகின் பல்வேறு இடங்களில் யு.எஃப்.ஓ-க்கள் தென்பட்ட சம்பவங்கள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக, 1989 நவம்பர் முதல் 1990 ஏப்ரல் வரை பெல்ஜியம் நாட்டில் சுமார் 13,500 பேர் யு.எஃப்.ஓ-க்களைப் பார்த்ததாக சாட்சியம் அளித்தனர். 2004 நவம்பரில் பசிபிக் கடலில், அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ் நிமிட்ஸ்’ விமானம் தாங்கிக் கப்பலுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ‘ப்ரின்ஸ்டன்’ கப்பலின் ரேடார் ஆபரேட்டர் கெவின் டே, சில அடையாளம் தெரியாத பொருள்கள் பறப்பதை உறுதி செய்தார். ‘நொடிப் பொழுதில் 80,000 அடி உயரத்திலிருந்து வெறும் 50 அடி உயரத்துக்கு அவை கீழே இறங்கி மீண்டும் மேலே பறக்கின்றன. இவ்வளவு வேகத்தில் செல்ல நம்மிடம் தொழில்நுட்பம் இல்லை’ என்று ரிப்போர்ட் அனுப்பினார்.

யு.எஃப்.ஓ மர்மங்கள்... என்ன சொல்லப் போகிறது பென்டகன்?

உடனடியாக, யு.எஃப்.ஓ-க்கள் தென்படும் பகுதிக்கு ‘யு.எஸ்.எஸ் நிமிட்ஸ்’ கப்பலிலிருந்து இரண்டு விமானங்கள் பறந்தன. டேவிட் பிராவர், அலெக்ஸ் டெய்ட்ரிக் ஆகிய இரண்டு விமானிகளுடன், ஆயுத ஆபரேட்டர்களும் உடன் பறந்தனர். அப்போது பசிபிக் கடலின் நடுவே, வானத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் பறப்பதை அவர்கள் பார்த்தனர். ஐந்து நிமிடங்கள், அமெரிக்க போர் விமானங்களுடன் சேர்ந்து பறந்து விளையாடிய யு.எஃப்.ஓ, நொடியில் மறைந்தது. தொடர்ந்து கன்ட்ரோல் ரூமை டேவிட் பிராவர் உஷார்படுத்தியபோது, ‘உங்களுடன் இருந்த அந்த யு.எஃப்.ஓ, 60 மைல்களுக்கு அப்பால் பறப்பதாக ரேடார் காட்டுகிறது’ என்றனர். அதாவது, ஒலியின் வேகத்தைவிட மும்மடங்கு வேகத்தில் பறந்திருக்கிறது அந்த யு.எஃப்.ஓ. 2017-ம் ஆண்டு, இந்தச் சம்பவத்தின் வீடியோ ஆதாரங்களை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டபோதுதான், அமெரிக்க ராணுவம் முதல்முறையாக யு.எஃப்.ஓ-க்கள் பற்றிய தகவலை ஒப்புக்கொண்டது.

பின்னாளில் செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் பிராவர், “அவை நம்முடைவை அல்ல. இயற்பியலின் கோட்பாட்டை தகர்க்கும் அளவுக்கு அந்தப் பறக்கும் பொருள்கள் செயல்படுகின்றன” என்றார். இதன் தொடர்ச்சியாக மூன்று யு.எஃப்.ஓ வீடியோக்களை அதிகாரபூர்வமாக வெளியிட்ட பென்டகன், ‘யு.எஃ.ஓ-க்களை ஆராய் வதற்காக ஒரு குழுவை நியமித் திருக்கிறோம்’ என்று 2020, ஆகஸ்ட்டில் அறிவித்தது. இதை யடுத்து, தனது பதவிக்காலம் முடிவடையும் நேரத்தில், உளவுப்பணி தொடர்பான சட்டம் ஒன்றில் கையெழுத்திட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘யு.எஃப்.ஓ-க்கள் பற்றிய தகவல்களை சரிபார்த்து, 180 நாள்களுக்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன், எஃப்.பி.ஐ, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு தான், யு.எஃப்.ஓ பற்றிய மர்மங் களுக்கு விடையளிக்கப் போகிறது என்கிறார்கள்.

அலெக்ஸ் டெய்ட்ரிக் - டேவிட் பிராவர்
அலெக்ஸ் டெய்ட்ரிக் - டேவிட் பிராவர்

அமெரிக்க ராணுவமே ‘ஏதோ ஒன்று இருக்கிறது’ என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டிருப்பதால், பரபரப்பின் உச்சத்திலிருக் கின்றன சர்வதேச ஊடகங்கள். ஒருவேளை, ‘அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருள்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வந்திருக்கின்றன’ என்று அறிக்கை அளிக்கப்பட்டால், இயற்பியல் மட்டுமல்ல, மனிதனின் கடவுள் பற்றிய பார்வையும், மதங்களின் கோட்பாடுகளுமே பெரும் மாற்றத்தைச் சந்திக்கும் என்கிறார்கள் வேற்றுக்கிரகவாசிகள் தேடல் ஆர்வலர்கள்.

“அமெரிக்க ராணுவம் ‘ஏரியா 51’ உட்பட பல்வேறு ராணுவ மையங்களில் ஏலியன்களுடன் சேர்ந்தே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த ரகசியத்தை அம்பலப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது’’ என்கிற குரல்களும் ஒலிக்கின்றன. ஆனால், சமூக வலைதளங்கள் ஆக்கிரமித்திருக்கும் உலகில், எந்த உண்மையையும் சில நிமிடங்களுக்கு மேல் பூட்டி வைக்க முடியாது. இந்த நெருக்கடியே, பென்டகனின் வாயை முதல்முறையாகத் திறக்க வைத்திருக்கிறது. நூற்றாண்டுகளாகத் தொடரும் மர்மத்துக்கான விடை கிடைக்குமா என்பது இம்மாதத்துக்குள் தெரியும்!