இஸ்ரேலிய பிரதமர் நாப்தலி பென்னட் (Naftali Bennett) மீது அவரது சொந்த வீட்டின் ஆடம்பரமான செலவுகள் அரசின் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக இனி எனது வீட்டின் உணவு செலவுகள் என்னுடைய தனிப்பட்ட பணத்தில் இருந்தே செய்யப்படும் என தெரிவித்துள்ளார் நாப்தலி. மாதத்திற்கு 26,400 அமெரிக்க டாலர் செலவிடப்படுவதாகவும் அதில் குறிப்பாக 7,400 டாலர் உணவுக்காக எனவும் தெரிவிக்கப்படுகிறது.
``நமது நடைமுறை வழக்கங்கள் விதிகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும், மக்களிடம் இது எப்படியாக எதிரொலிக்கும் என்பதை நான் அறிவேன். அதனாலேயே அலுவலக பணியாளரிடம் இப்போதிருந்து எனது குடும்பத்தின் உணவு செலவுகள் தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்யபப்ட வேண்டும் என கூறியுள்ளேன்" என்கிறார் நாப்தலி. இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மில்லினியர் தான். அவர் உருவாக்கிய இரண்டு டெக் நிறுவனங்களை 250 மில்லியன் டாலர்களுக்கு விற்றிருக்கிறார். மாத ஊதியமாக அவருக்கு கிடைப்பது 16,500 டாலர்கள் மட்டுமே. இஸ்ரேலின் சராசரி வருமானம் 3,400 டாலர்கள்.
"நான் பணத்திற்காகவோ மதிப்பிற்காகவோ இந்த பதவிக்கு வரவில்லை, இஸ்ரேலிய மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்துள்ளேன், தொடர்ந்து சேவை செய்வேன்" என்கிறார் நாப்தலி.

நாப்தலி பென்னட் மக்களின் கண்களில் மண்ணை தூவுகிறார். அவரது சொந்த வீடு புதுப்பிக்கப்பட்ட செலவு அமெரிக்க டாலர்களில் 15 மில்லியன்கள் இருக்கும். அதனை அரசின் செலவிலேயே செய்துள்ளார் என குற்றம்சாட்டுகின்றனர் முன்னாள் பிரதமர் நெடயான்ஹுவின் (Netanyahu) Likud கட்சியினர். பெஞ்சமின் நெடயான்ஹு பிரதமராக இருந்தபோது இப்போது செலவிடப்படுவதைவிட மூன்று மடங்கு அதிகமாக 84,300 டாலர் செலவழிக்கப்பட்டன என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாப்தலி பென்னட்டுக்கும் அவரது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. துப்பாக்கி குண்டு ஒன்று தபாலில் அனுப்பப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் சொந்த நாட்டுக்குள்ளே பிரிவினைகூடாது என அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
