Published:Updated:

காலநிலை மாற்றம் ஏற்படுத்திய தாக்கம்! - நிஜமாகவே தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்

கடந்த வாரம் எழுந்த பெரும் அலைகளால் பெரும்பாலான வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல ஆண்டுகளைக் கடந்த தேவாலயங்கள், அருங்காட்சியங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன.

வெனிஸ்
வெனிஸ்

இத்தாலியின் வெனிஸ் நகரம் உலகப் புகழ்பெற்றது. `தண்ணீரில் மிதக்கும் நகரம்' என்னும் பெயரை பெற்றது இந்த வெனிஸ். காரணம் இந்த நகரம் 118 சின்ன சின்ன தீவுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தீவுகளை அழகான பாலங்கள் இணைத்திருக்கும். இங்கு வசிக்கும் மக்களின் பிரதான போக்குவரத்து படகுதான். அழகிய கட்டடங்களுக்கு மத்தியில் பயணிக்கும் படகை காண்பதே அத்தனை அழகாக இருக்கும்.

பாரம்பர்ய தேவாலயங்களும், அருங்காட்சியகமும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வெனிஸ் நகருக்கு அழைத்து வரும். பல்வேறு சிறப்புகளை தன்னுள் கொண்டிருக்கும் வெனிஸ், யுனெஸ்கோ அமைப்பின் அங்கீகாரம் பெற்ற நகரம் ஆகும். இத்தனை சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள இந்நகரம் தற்போது நிஜமாகவே தண்ணீரில் மிதக்கிறது.

கடந்த வாரம் எழுந்த பெரும் அலைகளால் பெரும்பாலான வெனிஸ் நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல ஆண்டுகளை கடந்த தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இந்த வெள்ளப் பெருக்கானது மோசமான வெள்ளப் பெருக்காக பார்க்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.87 மீட்டர் அளவுக்கு வெனிஸ் நகரின் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவது வெனிஸ் நகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வெனிஸ் நகர் மேயர், இந்தப் பெரும் அலைகள் நகரை பெரிய அளவில் தாக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும், சேதாரங்களைச் சரி செய்யக் குறைந்தது 100 மில்லியன் யூரோ தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மாநில எமர்ஜென்சியாக இந்த வெள்ளத்தை அறிவித்த இத்தாலி அரசு, சுமார் 20 மில்லியன் யூரோ நிதியும் வழங்கியுள்ளது. மேலும், உடனடியாக சீரமைப்புப் பணிகளை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னமும் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், உண்மையான சேதாரங்கள், தண்ணீர் முழுமையாக வடிந்த பின்னர்தான் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

வெனிஸ் மேயர் ப்ரூக்நேரோ, ``வெனிஸ் நகரம் இத்தாலி நாட்டின் பெருமை. பாரம்பர்யமிக்க நகரான வெனிஸ் பல தனிச் சிறப்புகளைக் கொண்டது. இது மீண்டு வருவதற்கு உதவும் அத்தனை பேருக்கும் நன்றி. வெனிஸ் மீண்டும் ஒளிரும்” என கூறியுள்ளார்.

வெனிஸ் நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கு கால நிலை மாற்றம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. முன்னதாகவே இது தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.