Published:Updated:

`ஒரு வருடத்துக்கு 8 லட்சம் பேர்; ஆண்களே அதிகம்!'-தற்கொலை அறிக்கையை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்

சத்யா கோபாலன்

உலகம் முழுவதும் ஒரு வருடத்துக்கு எத்தனை பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்.

Suicide
Suicide

ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதி சர்வதேச தற்கொலை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வருடத்துக்கு 8,00,000 பேர் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Suicide
Suicide

விபத்து, கேன்சர், பிற வியாதிகள் போன்றவற்றால் இறப்பதைவிட தற்கொலை செய்துகொண்டு இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தற்கொலை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் ஆனாலும் உலக அளவில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறப்புகளின் எண்ணிக்கை சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

``உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். ஒருவரின் தற்கொலையால் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (General Tedros Adhanom Ghebreyesus ) கூறியுள்ளார்.

Gun shot
Gun shot

2016-ம் ஆண்டு இறுதியில் தற்கொலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது . அப்போது ஒரு லட்சம் பேருக்கு 10.5 சதவிகிதமாக இருந்த தற்கொலை விகிதம் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், சீனா, மியான்மர் போன்ற சில நாடுகளைத் தவிர பிற அனைத்து நாடுகளிலும் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

Vikatan

45 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கிறார்கள். வருவாய் குறைவாக உள்ள மற்றும் நடுத்தர குடும்பத்தினரே அதிகம் இந்த முடிவை எடுக்கிறார்கள். தூக்கு மாட்டிக்கொள்வது மற்றும் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது இவை இரண்டிலும்தான் அதிக தற்கொலைகள் நடக்கின்றன. குறிப்பாகக் கிராமங்களில் இந்த நடைமுறை அதிகமாக உள்ளது.

Suicide
Suicide

இந்தியா, இலங்கை, ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 13 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும், ரஷ்யா, குயானா போன்ற நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 26 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. `அனைத்து நாடுகளிலும் தற்கொலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்' எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.