Published:Updated:

`இந்தச் சூழலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ -அதிக உயிரிழப்புகளால் தலைமை மருத்துவர் எடுத்த விபரீத முடிவு

மருத்துவர் லோர்னா
மருத்துவர் லோர்னா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணிபுரிந்துவந்த தலைமை பெண் மருத்துவர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

உலகிலேயே அமெரிக்காவில்தான் மிக அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அங்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில்தான் 50,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, நியூயார்க் நகரம் சுக்குநூறாகச் சிதைந்துபோயுள்ளது.

நியூயார்க்
நியூயார்க்
AP

நியூயார்க் நகரில் மட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,144 -ஆக உள்ளது. நியூயார்க்கின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் இந்த நேரத்தில், அங்குள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் அலென் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ இயக்குநராகப் பணியாற்றிவந்த மருத்துவர் லோர்னா ப்ரீன் (Lorna Breen), கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

“22 ஆயிரம் மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு!“- உலக சுகாதார நிறுவனம் கவலை

49 வயதாகும் பெண் மருத்துவர் லோர்னா, தன் குடும்பத்தினருடன் வெர்ஜீனியாவில் வசித்துவந்துள்ளார். கொரோனா பரவலுக்குப் பிறகு, மருத்துவமனையில் முதன்மை நிலை மருத்துவராகப் பணியாற்றிய லோர்னாவுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு வார சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளார். உடல்நிலை சரியானதும், மீண்டும் அவர் தன் மருத்துவ வேலைகளைத் தொடர்ந்துள்ளார். அப்போதுதான் இந்தச் சோகமான சம்பவம் நடந்துள்ளது.

மருத்துவமனை
மருத்துவமனை

லோர்னாவுக்கு எந்தவிதமான மனநோய் அல்லது பிரச்னைகள் இல்லை என்று அவரது தந்தையும் மருத்துவருமான பிலிப் ப்ரீன், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார்.

“ என் மகள் கொரோனாவை எதிர்த்துப் போராடும் முதன்மைப் பணியாளர்களில் ஒருவர். அவர் ஒரு ஹீரோவைப்போல புகழப்பட்டார். கொரோனா பாதிப்புக்குப் பிறகு லோர்னா வீட்டுக்கு வரவேயில்லை. அவளை வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்தபோது, காவல்துறையினர் லோர்னாவின் உடலை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டனர். லோர்னா தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன், இறுதியாக என்னிடம் தான் போனில் பேசினார். அப்போது எதிலும் ஈடுபாடு இல்லாததுபோல பேசினார்.

மரணிக்கும் மருத்துவர்கள்... மரித்துப் போன மனிதம்... கொரோனாவால் தமிழகத்தின் முகம் மாறுகிறதா?

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸில் இருந்து மருத்துவமனைக்குள் கொண்டு செல்வதற்கு முன்பாகவே இறந்துவிடுகிறார்கள் எனப் பலமுறை என்னிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். லோர்னா, தன் வேலையை மிகவும் நேசித்தார். ஆனால், அதுவே அவரைக் கொன்றுவிட்டது” என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார் அவரின் தந்தை.

நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் அலென் மருத்துவமனையில், 12-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் தினமும் உயிரிழந்து வந்துள்ளனர். லோர்னாவுடன் பணியாற்றிய சக மருத்துவர்களும் காவல் துறையினரும் அவரை ஹீரோ என்றே புகழ்ந்துள்ளனர்.

மருத்துவர் லோர்னா
மருத்துவர் லோர்னா

`தற்போதைய சூழலில், முதன்மைப் பணியாளர்களான மருத்துவர்கள் அதிக நெருக்கடியால் உடலளவிலும் மனதளவிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். சூழலை எதிர்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. தினமும் தாங்கள் சந்திக்கும் உயிரிழப்புகள் மற்றும் இடைவிடாத வேலைச் சுமையால், அவர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். தற்போதைய சூழல்தான் அவர்களைக் கடுமையாக்கியுள்ளது' என நியூயார்க் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு