Published:Updated:

`பிரதமராக இருந்தாலும் அதே ரூல்தான்!' -ஜெசிந்தாவுக்கு அனுமதி மறுத்த நியூஸி., உணவகம்; சுவாரஸ்ய சம்பவம்

பிரதமர் ஜெசிந்தா
பிரதமர் ஜெசிந்தா

உணவு உண்ணச் சென்ற நியூஸிலாந்து பிரதமருக்கு அனுமதி மறுத்து, காக்க வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளது. தற்போது, இந்தச் செய்தி வைரலாகிவருகிறது.

அனைத்து நாடுகளைப் போலவே நியூஸிலாந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,499 - ஆக உள்ளது. அதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 1,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் கொரோனா இல்லாத நியூஸிலாந்து உருவாகும் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

சீனாவில் வைரஸ் உறுதியான அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி இறுதியில், நியூஸிலாந்தில் முதல் வைரஸ் பரவல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தங்கள் நாட்டுக்குள் நுழையும் அனைவரும் கட்டாயமாக இரண்டு வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து அங்கு வைரஸ் பரவல் அதிகரிக்கவே, மார்ச் மாத மத்தியில் வெளிநாட்டு மக்கள் நியூஸிலாந்துக்கு வர தடை பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆரம்பம் முதலே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்ட ஊரடங்கில், மக்கள் வெளியில் நடமாடுவது முதல் பெரும் தொழிற்சாலை உற்பத்தி வரை என அனைத்துக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் அங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியிலிருந்து தற்போது வரை அங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளது. இதனால் நியூஸிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் முதல் கட்டமாக, கடுமையான விதிகளுடன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜெசிந்தா
பிரதமர் ஜெசிந்தா

சமூக விலகல் என்பதுதான் அந்நாட்டின் முக்கிய தாரக மந்திரமாக உள்ளது. எனவே, முதல்கட்ட தளர்வில் பொதுமக்கள் கட்டாய சமூக இடைவெளியுடன் வெளியில் நடமாடலாம், உணவகங்கள், போக்குவரத்து போன்றவற்றில் எண்ணிக்கையில் கட்டுப்பாடு, சில தொழில்கள் இயங்க அனுமதி, ஆகிய பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் நியூஸிலாந்து பிரதமர். கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்த குஷியில் உள்ளது நியூஸிலாந்து.

`5 வார கடும் ஊரடங்கு... கிடைத்தது பலன்!’ - கொரோனா போரில் நியூசிலாந்துக்கு கிடைத்த வெற்றி

இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் விதித்த கட்டுப்பாடுகளால் அவருக்கே ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், தன் வருங்கால கணவர் கிளார்க் கேஃபோர்ட் மற்றும் சில நண்பர்களுடன் அந்நாட்டு தலைநகரான வெல்லிங்டனில் இருக்கும் ஒரு கஃபேவுக்குச் சென்றுள்ளார். நியூஸிலாந்து அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே உணவகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், பிரதமர் ஜெசிந்தா அங்கு சென்றபோது அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்துள்ளன.

ஜெசிந்தா ஆர்டர்ன்
ஜெசிந்தா ஆர்டர்ன்

இதனால் பிரதமரை உள்ளே அனுமதிக்க முடியாது என அந்த கஃபே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த விதிமுறைகளையும் மீறாமல், எதையும் மாற்றாமல், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து பின் இருக்கை கிடைத்ததும் உணவு உண்டுவிட்டுச் சென்றுள்ளார் ஜெசிந்தா. அப்போது, அங்கிருந்த கஃபே ஊழியர்களிடம், ஊரடங்கு காலத்தில் அவர்கள் அனுபவித்த சிரமங்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

`ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமல்ல,  ஜெசிந்தாவும் வைரல்தான்!' இணையத்தைக் கலக்கும் நியூசிலாந்து பிரதமர்!

அந்த கஃபேயில் நடந்த அனைத்து சம்பவங்களையும் நேரில் பார்த்த ஒரு வாடிக்கையாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் அதைப் பதிவிட்டுள்ளார். இதற்கு, ஜெசிந்தாவின் வருங்கால கணவர் கிளார்க் பதில் அளித்துள்ளார். அதில், “ இந்தக் குழப்பத்துக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். சரியான முறையில் இதைக் கையாளத் தவறிவிட்டேன், முன்கூட்டியே இருக்கை புக் செய்யவில்லை. ஆனால், அவர்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து பிரதமரின் செயலைப் பாராட்டியும், அனைத்து ஆண்களும் இறுதியில் இப்படித்தான் செய்வார்கள் எனவும் ஜெசிந்தாவின் காதலரை கிண்டல் செய்தும் நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு