Published:Updated:

`பச்சைநிற உடை.. டயானா `டச்'சில் கேத் மிடில்டன்'- பாச மழை பொழியும் பாகிஸ்தானியர்கள்!

அக்டோபர் 14ஆம் நாள் பாகிஸ்தான் வந்திறங்கும் போது இளவரசி கேத் மிடில்டன் பாகிஸ்தான் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார் என்றே கூறலாம்.

டயானா & கேத் மிடில்டன்
டயானா & கேத் மிடில்டன்

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியமும் அவருடைய மனைவி கேத் மிடில்டன்னும் அக்டோபர் 14 ல் தொடங்கி 18ம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் உடனான வரலாற்றுத் தொடர்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்றைய காலத்து பாகிஸ்தானை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையிலும் இந்தச் சுற்றுப்பயணம் அமையும் என்று அவர்களது அதிகாரபூர்வ பத்திரிகையான கென்விங்ஸ்டன் பேலஸில் சமீபத்தில் வெளிவந்தது.

வில்லியம் & கேத் மிடில்டன்
வில்லியம் & கேத் மிடில்டன்

இஸ்லாமாபாத்தில் தொடங்கி லாஹூர், வடக்குமலைகள் மற்றும் மேற்கு எல்லைகள் வரை சுமார் 1000 கி.மீ சுற்றுப்பயணம் நடைபெறும் என்று செய்திகள் வெளிவந்தன. இளைஞர்களை ஊக்குவித்தல், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு பற்றிப் புரிந்து கொள்ளுதல் எனப் பல்வகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், அக்டோபர் 14ஆம் நாள் பாகிஸ்தான் வந்திறங்கும் போது இளவரசி கேத் மிடில்டன் பாகிஸ்தான் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார் என்றே கூறலாம். அவர் பாகிஸ்தானில் இறங்கும்போது நீல நிறத்தில் பாகிஸ்தானின் பாரம்பர்ய உடையான சல்வார் கமீஸ் அணிந்திருந்தார். மேலும் ஒவ்வொரு நாளும் அதே போன்ற உடைகளை அணிந்து வருகிறார். இதனால் பாகிஸ்தானியர்கள் ட்விட்டரில் கேட் மீது அன்பைப் பொழிந்து வருகின்றனர். தங்கள் நாட்டு கலாசாரத்தை மதித்து தங்களுடைய பாரம்பர்ய உடையை அணிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பலர் பதிவிட்டனர்.

வில்லியம் & கேத் மிடில்டன்
வில்லியம் & கேத் மிடில்டன்

மேலும் சிலர் இளவரசி டயானாவின் உடைகளைப் போலவே கேத் அணிந்திருக்கிறார். இது தற்செயலாக நடந்ததா இல்லை தன் மாமியாரை கேத் பின்பற்றுகிறாரா என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் சுவாரஸ்யமான விஷயம், கேத் அணியும் சில ஆடைகள் பாகிஸ்தான் தயாரிப்புகள் என்று கூறப்படுகிறது. `இஸ்லாமாபாத் மாடல் பெண்கள் பள்ளி'க்குச் சென்ற போது கேத் அணிந்திருந்த கருநீல சல்வார், பாகிஸ்தானின் பிரபலமான டிசைனர் மஹீன் கானின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டதாகும். அவர்கள் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானைச் சந்தித்த போது கேத் பச்சை நிறத்தில் குர்தா போன்ற ஆடையை உடுத்தியிருந்ததால் அவர் பாகிஸ்தான் நாட்டிற்கு மரியாதை செலுத்துகிறார் என்றும் சிலர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

Vikatan

மேலும் இருவரும் பாகிஸ்தானின் நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்கு வரும்போது ஆட்டோ ரிக்ஷாவில் வந்திறங்கினர். அப்போது இளவரசர் வில்லியம் பச்சை நிற குர்தா அணிந்திருந்தார். பச்சை, பாகிஸ்தான் நாட்டுக்கொடியின் நிறம் என்பதாலே அவர்கள் இருவரும் நிறைய பச்சை நிற ஆடைகளை உடுத்திவருகிறார்கள் என்ற கோணத்திலும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

1991ஆம் ஆண்டு இளவரசி டயானா பாகிஸ்தான் சென்ற போது வரவேற்றது போலவே இளவரசருக்கும் இளவரசிக்கும் வரவேற்புகள் நடைபெறுகின்றன. டயானா சென்ற சித்ரால் என்ற இடத்திற்கு இருவரும் சென்ற போது டயானாவுக்கு அளிக்கப்பட்டது போலவே இவர்களுக்கும் சால்வையும் தொப்பியும் அணிவிக்கப்பட்டது. தற்போது கேத் பல விஷயங்களில் டயானாவைப் பின்பற்றி வருகிறார். அவ்வாறு அவர் பின்பற்றிய டயானாவின் ஆடை வகை, இன்று பாகிஸ்தானியர்களின் பாசத்தைப் பெற வைத்திருக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம்.