சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இது வெறும் டிரெய்லர் அல்ல!

Ikorodu Bois குழுவினர்
பிரீமியம் ஸ்டோரி
News
Ikorodu Bois குழுவினர்

தற்போதைய வைரல் கொரியன் தொடரான ஸ்குயிட் கேம்ஸின் விளையாட்டை, இவர்கள் விளையாடிக் காட்ட, மீண்டும் பரபரத்தது இணையம்.

நைஜீரியா என்றதும் நமக்குப் பொதுவாக சில விஷயங்கள் நினைவுக்கு வரலாம். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசக்கூடிய ஒரு நாட்டைப் பற்றிய நம் பொதுவான பிம்பங்கள் சராசரிக்கும் கீழானவை. உலகச் சுற்றுலா செல்பவர்களின் தேர்வில் ஆப்பிரிக்க நாடுகளெல்லாம் இருப்பதே இல்லை. ஆனால், நைஜீரியாவில் புதிதாக ஒரு குழு கிளம்பியிருக்கிறது. இன்ஸ்டா, ட்விட்டர் என சமூக வலைதள உலகில் சூப்பர் ஸ்டார்கள் இவர்கள். Ikorodu Bois என்கிற இந்தச் சமூக வலைதளக் கணக்கு உலக வைரல். ஹாலிவுட் படமோ, நம்ம ஜகமே தந்திரமோ இவர்கள் கண்ணில் சிக்காமல் எந்தப் படத்தின் டிரெய்லரும் வெளியாவதில்லை. டிரெய்லர் வெளியான சில தினங்களில் இச்சிறுவர்கள் அவர்களிடமிருக்கும் சின்னச் சின்னப் பொருள்களை வைத்து மீண்டும் அந்த டிரெய்லரை நடித்து வெளியிடுகிறார்கள். அது உலக ஹிட் அடிக்கிறது. அவர்களின் எளிமையும் வெள்ளந்தித்தனமும் அனைவரையும் ஈர்த்திருக்கிறது.

இது வெறும் டிரெய்லர் அல்ல!
இது வெறும் டிரெய்லர் அல்ல!
இது வெறும் டிரெய்லர் அல்ல!

தற்போதைய வைரல் கொரியன் தொடரான ஸ்குயிட் கேம்ஸின் விளையாட்டை, இவர்கள் விளையாடிக் காட்ட, மீண்டும் பரபரத்தது இணையம். வெளிநாட்டு கால் ரேட் குறித்த பயம் இருந்தாலும், ஆனது ஆச்சு என இகோரோடு குழுவை அலைபேசியில் அழைத்தேன். எப்படியும் ‘இந்தி மொழியா?’ என்று கேட்பார்கள் என நினைத்தால், ‘தமிழா... அங்க எனக்கு ஒரு பிரெண்டு இருக்கார்’ என ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இகோரோடு பாய்ஸின் பெரிய தலக்கட்டான பாபாடண்டே சன்னி.

“சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமான்னா அவ்ளோ பிடிக்கும். எங்க குடும்பத்துல நான்தான் மூத்த பையன். அப்துல் கனி, ஃபவாஸ், மாலிக், ஃபாரிதா, முயீஸ்னு நாங்க எல்லோரும் சகோதரர்கள். வீட்டுல இருக்குற பொருள்கள வச்சு, நாங்க பார்க்கிற டிரெய்லர எல்லாம் செஞ்சு பார்ப்போம். அப்புறம் கும்பலா உட்கார்ந்து அதப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டு இருப்போம். அப்பத்தான் ‘ஏன் இதை ஆன்லைன்ல போடக்கூடாது’ன்னு ஒரு நாள் தோணுச்சு. நமக்குச் சிரிப்பு வர்ற ஒரு விஷயம், எல்லோருக்கும் பிடிக்கும்லன்னு ஆரம்பிச்சது இப்படி வந்து நிக்குது’’ எனச் சிரிக்கிறார் பாபாடண்டே.

இது வெறும் டிரெய்லர் அல்ல!
இது வெறும் டிரெய்லர் அல்ல!
இது வெறும் டிரெய்லர் அல்ல!

தென்மேற்கு நைஜீரியாவில் இருக்கும் ஒரு நகரத்தில் ஆரம்பித்த இவர்களது பயணம், தற்போது இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோயர்கள் வரை எட்டியிருக்கிறது.

“கார் இல்லையா, கார் போன்ற சில விஷயங்களைப் பயன்படுத்துவோம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்வதாகக் காண்பிக்க, தள்ளுவண்டியில் ஷாட்டை எடுப்போம். டிரோன், ஹெலிகாப்டர் எல்லாம் நாங்க பார்த்ததுகூட இல்ல. அதுக்கெல்லாம் பொம்மைகளைப் பயன்படுத்துவோம். மக்கள் சிரிக்கவும், ரசிக்கவும், சந்தோஷமா இருக்கவும் ஜாலியா நாங்க இத பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்கிறார்கள் இவர்கள்.

நடிகர்கள் பேசும் வீடியோக்கள் டிரெய்லர்கள் என ஜாலிவாலி செய்து கொண்டிருந்த இந்த குட்டீஸுக்கு ‘Extraction’ படம் மூலம் அடித்தது ஜாக் பாட். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்த 2 நிமிட டிரெய்லரை மீள் உருவாக்கம் செய்து, இவர்கள் ட்விட்டரில் பதிவிட, ஒரு கோடிக்கும் மேல் பார்வை யாளர்களை ஈட்டியது. எங்கள் டிரெய்லரை விட நன்றாக இருக்கிறது என கிறிஸ் பாராட்ட, படத்தின் தயாரிப்பாளர்களான ரூஸோ பிரதர்ஸோ, அடுத்த பாகத்துக்கான ப்ரீமியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. நெட்பிளிக்ஸ் மூலம் கிடைத்த இந்த வரவேற்பு குறித்துப் பெருமை பொங்கப் பேசுகிறார் பாபாடண்டே. “நெட்பிளிக்ஸ்ல இருந்து எங்களுக்கு ஆப்பிள் ஐமேக் ஸ்டூடியோ எல்லாம் அனுப்பி எங்கள தொழில்ரீதியிலான ஒரு குழுவா மாத்திட்டாங்க. எங்களப் பத்தி ஒரு வீடியோவும் வெளியிட்டி ருக்காங்க. நெட்பிளிக்ஸ்ல எந்த டிரெய்லர் வந்தாலும், நாங்க அத ஜாலியா எடுத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சுடுவோம். உலகமே இப்போ எங்களப் பார்க்குது. எங்களால என்ன முடியும்னு நாங்க இப்ப இந்த உலகத் துக்குச் சொல்லிக்கிட்டு இருக்கோம். நைஜீரியாவுல நிறைய திறமையிருக்கு. எல்லாம் மாறும்’’ என நம்பிக்கை ததும்பப் பேசுகிறார் பாபாடண்டே சன்னி.