Published:Updated:

வடகொரிய அரசியலில் கோலோச்சும் முதல் பெண்... யார் இந்த கிம் யோ ஜாங்?

கிம் யோ ஜாங்
பிரீமியம் ஸ்டோரி
கிம் யோ ஜாங்

`கொரோனா தொற்றை எதிர்த்து வடகொரியா வெற்றிபெற்றுவிட்டது’ என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது கே.சி.என்.ஏ ஊடகம்

வடகொரிய அரசியலில் கோலோச்சும் முதல் பெண்... யார் இந்த கிம் யோ ஜாங்?

`கொரோனா தொற்றை எதிர்த்து வடகொரியா வெற்றிபெற்றுவிட்டது’ என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது கே.சி.என்.ஏ ஊடகம்

Published:Updated:
கிம் யோ ஜாங்
பிரீமியம் ஸ்டோரி
கிம் யோ ஜாங்

வடகொரியா ஒரு மர்மதேசம். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது வெளி உலகுக்குத் தெரியாது. எப்போதாவது வடகொரிய அரசுச் செய்தி ஊடகமான `கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி’ (கே.சி.என்.ஏ) வெளியிடும் காணொளிகளையும் செய்திகளையும் வைத்துத்தான் அங்கு என்ன நடக்கிறது என்பதை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும். இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங்-கின் உரை குறித்து கே.சி.என்.ஏ வெளியிட்டிருக்கும் செய்திகள், உலகம் முழுக்க கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. கிம் யோ ஜாங் யார்... வடகொரிய அரசியலில் அவரது பங்கு என்ன?

வடகொரிய அரசியலில் கோலோச்சும் முதல் பெண்... யார் இந்த கிம் யோ ஜாங்?

தென்கொரியாவுக்கு எச்சரிக்கை!

சமீபத்தில், `கொரோனா தொற்றை எதிர்த்து வடகொரியா வெற்றிபெற்றுவிட்டது’ என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது கே.சி.என்.ஏ ஊடகம். இது குறித்து அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங், “தென்கொரியா, எல்லையைத் தாண்டி பலூன்கள் மூலம் துண்டுப்பிரசுரங்கள் அனுப்பி (தென்கொரிய ஆர்வலர்கள், வடகொரியாவுக்கு எதிரான பிரசாரங்களை பலூன்களில் கட்டி, அந்த நாட்டுக்குள் அனுப்புவது வழக்கம்) வடக்கில் கோவிட் தொற்றைப் பரப்பியிருக்கிறது. தொற்று உள்ள பொருள்களை பலூன் மூலம் அனுப்புவது மனிதகுலத்துக்கு எதிரான செயல். இதற்கு வடகொரியா தக்க பதிலடி கொடுக்கும்” என்று தனது உரையில் கூறியிருப்பதாக கே.சி.என்.ஏ தெரிவித்திருக்கிறது.

மேலும், “அதிபர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தும், இந்தத் தொற்று நோய்க்கு எதிரான போர் முடியும் வரை, அவர் மக்களைப் பார்த்துகொள்ளவேண்டிய அவசியம் இருந்ததால், ஒரு நிமிடம்கூட ஒய்வெடுக்கவில்லை” என்றும் கிம் யோ ஜாங் குறிப்பிட்டதாகவும் கே.சி.என்.ஏ கூறியிருக்கிறது.

இந்த உரை மூலம் கிம் யோ ஜாங் உலக கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார். இதற்கு முன்பாகவும் சில முறை அவர்மீது உலக வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. 2020-ம் ஆண்டே அவர்தான் அடுத்த வடகொரிய அதிபர் என்ற பேச்சுகளும் எழுந்தன.

வடகொரிய அரசியலில் கோலோச்சும் முதல் பெண்... யார் இந்த கிம் யோ ஜாங்?

யார் இந்த கிம் யோ ஜாங்?

முன்னாள் வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல்-லின் இளைய மகள்தான் கிம் யோ ஜாங். 2007 முதல் வடகொரியத் தொழிலாளர் கட்சியில் இணைந்து செயல்பட்டுவரும் இவருக்கு, தற்போது 34 வயது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கிம் யோ ஜாங்கை, இந்த உலகுக்கு முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியது தென்கொரியாவில் நடந்த வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிதான். 2018-ல், தென்கொரியாவில் நடந்த வின்டர் ஒலிம்பிக்ஸில் வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து கலந்துகொண்டன. இதன் காரணமாக வடகொரியா சார்பில் தென்கொரியாவுக்குச் சென்றிருந்தார் கிம் யோ ஜாங். அங்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், முன்னாள் அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ், முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரோடு கிம் யோ ஜாங் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகப்பெரிய வைரலானது.

இதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்-கைச் சந்தித்ததன் மூலம், வடகொரியாவின் மற்றுமொரு அரசியல் முகமாக மாறினார் கிம் யோ ஜாங். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மூன்று முறை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்தபோதும் தனது சகோதரருடன் இருந்தார் கிம் யோ ஜாங். பல முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சந்திப்புகளில் கிம் யோ ஜாங் இடம்பெற்றிருந்ததால், சர்வதேச அரங்கில் கவனம்பெற்றார். பின்னர், அதிபர் கிம் ஜாங் உன்னின் முக்கிய அரசியல் ஆலோசகராகவும் மாறினார்.

2020-ல், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. அந்தச் சமயத்தில், தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் ``கிம் ஜாங் உன் இறக்கவில்லை. ஆனால், கோமாவில் இருக்கிறார். ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தும் அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன’’ என்று கூறியிருந்தார். அப்போதே `கிம் யோ ஜாங்தான் வடகொரியாவின் அடுத்த அதிபராக இருப்பார்’ என்ற செய்திகள் உலவின.

வடகொரிய அரசியலில் கோலோச்சும் முதல் பெண்... யார் இந்த கிம் யோ ஜாங்?

தொடர்ந்து 2021 அக்டோபரில், வடகொரியாவின் `மாநில விவகார ஆணையக் குழு’வின் உறுப்பினராக்கப்பட்டார் கிம் யோ ஜாங். வடகொரிய அரசின் உயர்மட்டக் குழுவான, மாநில விவகார ஆணையக்குழுதான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. 2021-ம் ஆண்டின் மத்தியில், இந்தக் குழுவின் உறுப்பினர்கள் சிலர் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெற்றனர். சிலர் முறையான காரணங்கள் சொல்லப்படாமல் நீக்கப்பட்டனர். இதையடுத்து, இந்தக் குழுவில் புதிதாக எட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் கிம் யோ ஜாங். இந்த உயர்மட்டக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண் இவர் மட்டுமே.

கடந்த ஓரிரு ஆண்டுகளில், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான சில எச்சரிக்கை அறிக்கைகள் கிம் யோ ஜாங்கின் பெயரோடு வெளியாகியிருக்கின்றன. இது, அவர் வடகொரிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருப்பதை உணர்த்துகிறது. தென்கொரியா, தொடர்ந்து கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறிவருவதால், வடகொரியாவின் அடுத்த அதிபர் கிம் யோ ஜாங்தான் என்ற பேச்சுகள் தற்போது அதிகமாகியிருக்கின்றன. ``ஆண்கள் ஆதிக்கம் செலுத்திவந்த வடகொரிய அரசியலில், ஒரு பெண் அதிபரானால் அங்கு பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது’’ என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

முரட்டுத்தனமான, முட்டாள்தனமான, பிற்போக்குத்தனமான திட்டங்களையும் விதிகளையும் அறிவித்துவரும் கிம் ஜாங் உன்னின் இடத்துக்கு, கிம் யோ ஜாங் வருவாரா... அப்படி வந்தால் வடகொரியாவில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதற்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்!