Published:Updated:

`பொருளாதாரத் தடை; கடுமையான பட்டினி’ - ஆமை, தேநீரை பரிந்துரைக்கும் வடகொரிய அதிபர்

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

வடகொரியாவில் கடுமையான பொருளாதார பற்றாக்குறை நிலவுவதால் ஆமை மற்றும் ஒரு வகை தேனீரை பருக அந்நாட்டு அரசு பரிந்துரைத்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளுக்கும் பரவி மொத்த மனிதக்குலத்தின் இயல்பு வாழ்க்கையையும் வெகுவாகப் பாதித்துள்ளது. இதன் தடுப்பு நடவடிக்கையாகப் பெரும்பாலான நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன. சில நாடுகள் இதுவரையில் தங்கள் எல்லையைத் திறக்கவில்லை அந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது வடகொரியாதான். அங்கு கொரோனா எந்த நிலையில் உள்ளது என்பது தற்போதுவரை தெரியவில்லை, இப்படி இருக்கையில் அந்நாட்டுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
AP

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொண்டு வந்த தொடர் அணு ஆயுத நடவடிக்கைகளால் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதித்தது ஐக்கிய நாடுகள் சபை. மேலும், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையை நீக்க மறுத்துவிட்டது. இதனால் ஏற்கெனவே வடகொரியா பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனாவால் அந்நாட்டு எல்லை முற்றிலும் மூடப்பட்டுள்ளதால் பொருளாதார நெருக்கடி மிகக் கடுமையாக அதிகரித்து, மக்கள் வறுமையிலும் பசியிலும் வாடும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பற்றாக்குறையால் வடகொரிய மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே உணவு உண்பதாகவும் அதுவும் இல்லாத சமயத்தில் வெறும் சோளத்தை மட்டுமே சாப்பிடுவதாகவும் சிலர் பட்டினியாகவே தங்கள் நாள்களைக் கழிப்பதாகவும் ஐ.நா உலக உணவுத்திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் எலிசபெத் பைர்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமார் 10 மில்லியன் வடகொரியர்கள் அதாவது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாகவும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் மிகக் கடுமையான சூழலை எதிர்கொள்வதாகவும் அவர் தெரித்துள்ளார்.

ஆமை
ஆமை

இந்நிலையில் வடகொரியாவில் அரிசி, கோளம், பழங்கள், இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் டெராபின் (Terrapin) வகை ஆமைகளை வேட்டையாடி உண்ணலாம் என மக்களுக்கு அரசு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. டெராபின் ஆமையின் சுவை மற்றும் அதில் இருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துகளால் அது பழைய காலத்திலிருந்தே உணவாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் இது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆமையில் புரதம், வைட்டமின், அமினோ அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருப்பதாகவும் இதை பச்சையாக, குழம்பு மற்றும் சூப் ஆகியவை வைத்து உண்ணலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

`பேனா வாங்கினால் கிறுக்கிப் பார்ப்பதுபோல், துப்பாக்கி வாங்கினால்..!' - கிம் ஜாங் உன்னின் கலாய்பீடியா

இது மட்டுமல்லாமல் தங்கள் நாட்டு மக்களின் பசியைப் போக்குவதற்காக விஞ்ஞானிகள் புதிதாக மருந்து கண்டுப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டு அரசு மருத்துவர்கள் பசியைப் போக்கும் தேநீரைத் தயாரித்துள்ளனர். ஆனால், இதை பருகுவதால் 40 நாள்களில் 10 கிலோ வரை எடை இழப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தங்கள் நாட்டு மக்கள் பசியில் வாடினாலும் அதிபர் கிம் ஜாங் உன், நல்ல ராஜபோக உணவுகளையே உண்பதாகவும் கேவியர் உணவு இறால் மீன் போன்றவை கிம்மின் அரண்மனையில் ஒரு பகுதியாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு