கடலில் கொடிகட்டிப் பறக்க உருவாக்கப்பட்ட கப்பல் காயலாங்கடைக்குப் போவது என்ன மாதிரியான டிசைன் என கப்பல் வல்லுநர்கள் தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான். ஜெர்மனி பால்டிக் கடற்கரையில் பாதி கட்டப்பட்ட நிலையில் 'Global Dream 2' என்று பெயரிடப்பட்ட மாபெரும் கப்பல் இப்போது உபயோகமற்ற கழிவுகள் எடுக்கப்படும் விலைக்குத்தான் விற்கப்பட்ட உள்ளது.
கப்பல் கட்டுமான நிறுவனமான MV Werften இந்தக் கப்பலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்கள். கோவிட் நேரத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிறுவனம், ஜனவரி 2022-ல் திவால் அறிக்கையைப் பெற விண்ணப்பித்துள்ளனர்.
பாதி கட்டப்பட்ட நிலையில் இருக்கும் Global Dream 2 கப்பலை வாங்கத் தகுந்த வாடிக்கையாளர்கள் யாரும் முன்வரவில்லை. அதனால் பார்ட் பார்ட்டாகப் பிரித்து விற்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் MV Werften நிறுவனத்தினர்.

கப்பலின் உடற்பகுதி (Hull) ஸ்கிராப் விலையில் கொடுக்கப்பட உள்ளது. கப்பல் சாய்ந்துவிடாமல் இருக்க அதன் அடித்தளத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பாகத்தை (Keel) ஏற்கெனவே விற்றுவிட்டனர். அதுவும் ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம் என்கிற கணக்கில்தான்.
இந்தக் கப்பலின் கொள்ளளவு உங்களை ஆச்சரியப்படச் செய்யலாம். இதில் 9,000 பேர் இதில் பயணிக்கலாமாம். அதற்காக 2,500 கேபின்கள் இடம்பெற இருந்தன. இந்தக் கப்பலின் சகோதர கப்பல் 'Global Dream' என்ற பெயரில் 2018-ல் கட்டப்பட்டு வந்தது. அதன் பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்ட நிலையில் அந்தக் கப்பலாவது கடலைப் பார்க்குமா என்ற கேள்வி தற்போது நிலவுகிறது.
Global Dream 2 கப்பலின் கட்டுமானப் பணிகள் 2019-ல் தொடங்கின. இதன் மொத்தத் தாங்குதிறன் 2,08,000 டன்கள். ஒருவேளை இந்தக் கப்பல் நிறைவடைந்திருந்தால் உலகின் ஆறாவது மிகப்பெரிய கப்பலாக உருவாகியிருக்கலாம். முதல் 5 இடத்தில் ராயல் கரீபியனின் Oasis கப்பல்கள் இருக்கின்றன.
