Published:Updated:

ஈக்வடார்: 100 பேர் பலி; கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தால் பயங்கரம்!

சிறை மற்றும் சிறை சார்ந்த பகுதிகளுக்குப் போதைப் பொருள் வழங்குவதில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தான் கலவரத்திற்குக் காரணமென கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள லிட்டோரல் சிறையில் கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிறையின் வெளியே கைதிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடற்கரை நகரமான குவாயாக்வில் இந்த சிறை அமைந்துள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை கைதிகள் மூர்க்கமாகச் சண்டையிட்டுக் கொண்டதில் சிறைச்சாலையின் 9 மற்றும் 10-ம் பெவிலியன்கள் முழுவதும் இரத்தக்காடாகின. கிட்டத்தட்ட 400 காவல்துறையினர் திரண்டு பல மணி நேர முயற்சியால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

திருச்சி: மூடியே இருந்த சிறை கதவு; ஜன்னல் கம்பிகளை அறுத்து தப்பிய பல்கேரிய கைதி! - நடந்தது என்ன?
சிறை
சிறை

சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்ட கைதிகளின் உறவினர்கள் தங்கள் கணவர், மகன், தந்தை சிறையிலிருக்கும் அச்சத்தில் சிறையின் முன் கூடி கதறி அழுதனர். சிறையின் வாசலில் காத்திருந்த பெண், `` உள்ளே நடப்பதை நாங்கள் பார்க்க வேண்டும். என் மகன் உள்ளே இருக்கிறான்" எனக் கதறி அழுதார். சிறையில் நடந்த கலவரம் மற்றும் வெளியில் காத்திருக்கும் குடும்பத்தினரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. காத்திருக்கும் உறவினர்களுக்கு உணவு, பாதுகாப்பு மற்றும் உளவியல் உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குவாயாக்வில் சிறையில் இருக்கும் பல கைதிகள் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள். சிறை மற்றும் சிறை சார்ந்த பகுதிகளுக்குப் போதைப் பொருள் வழங்குவதில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தான் கலவரத்திற்குக் காரணமெனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் லிட்டோரல் சிறையில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் ஓரளவு தண்டனை அனுபவித்துவிட்ட கைதிகளை விடுதலை செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. கலவரத்தில் ஐந்து பேர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற கைதிகள் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுக்கொண்டனர். வெடி குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறை காவல்துறையினர் உள் நுழைந்து கலவரத்தைத் தடுத்துள்ளனர். சுற்றிலும் பிணங்கள் சிதறிக்கிடக்க சிறை போர்க்களம் போலக் காட்சியளிப்பதாக அவர்கள் கூறினர்.

உடனடியாக கலவரத்தைக் கட்டுப்படுத்த அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து உள்ளூர் காவல் துறையினரையும் சிறைச் சண்டையைக் கட்டுப்படுத்த அனுமதித்தார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ. பத்திரிக்கையாளர்களிடம், ``குற்றவாளிகளின் அதிகாரத்தை நிரூபிக்கச் சண்டையிடும் இடமாகச் சிறைச்சாலை மாறி உள்ளது வருத்தமளிக்கிறது, வன்முறையைக் கட்டுப்படுத்துவதுடன் மற்ற சிறைச்சாலைகளுக்குப் பரவாமல் தடுப்போம்" என உறுதியளித்தார் லசோ.

ஈக்வடாரின் தேசிய மறுவாழ்வு கழகத்தின் முன்னாள் தலைவர் லெடி ஜைகா,``நாட்டின் வரலாற்றில், இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது இல்லை" எனக் கூறினார். அவ்வப்போது ஈக்வடார் சிறைகளில் கலவரம் நடப்பது தொடர்கதையாகியிருந்தாலும் இதுதான் பெரிய கலவரமாகக் கருதப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் மூன்று சிறைகளில் நடந்த கலவரத்தில் 79 பேர் இறந்தனர். தொடர்ந்து ஆகஸ்டில் லிட்டோரல் சிறையில் 22 பேர் உயிரிழந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு