கொலம்பியா நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும், துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை இருக்கிறது. இந்தச் சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்திருக்கிறது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சிறைக் கைதிகள், ஒரு கட்டத்தில் சிறைச்சாலை அறைகளுக்கு தீ வைத்திருக்கின்றனர். அதிகாரிகள் விரைந்துவந்து தீயை அணைப்பதற்குள் தீ சிறைச்சாலை முழுவதும் பரவியிருக்கிறது.

அதையடுத்து சிறை அதிகாரிகள் உடனடியாகக் கைதிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால், துரதிஷ்டவசமாக 50-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முயன்றுவருகின்றனர்.
