பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு வறுமை, நோய், ஏற்றத்தாழ்வுகள் இவற்றுக்கு எதிராக உலகெங்கும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் இலாப நோக்கமற்ற நிறுவனம். இதன் இணை நிறுவனரான பில் கேட்ஸ்க்கு பாகிஸ்தானில் இந்த அமைப்பின் வழியாக முன்னெடுக்கப்படும் போலியோ மற்றும் காசநோய் ஒழிப்பு செயல்பாடுகளுக்காக பாகிஸ்தானின் இரண்டாவது உயரிய விருதான ஹிலால்-இ-பாகிஸ்தான் விருது வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டின் குடிமக்களுக்கான விருது என்ற போதும் நாட்டு வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் வெளிநாட்டு நபர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் 1983 ரொனால்ட் ஸ்பீர் தொடங்கி அமெரிக்க அதிபரான ஜோ பைடன் உள்ளிட்ட பல அமெரிக்கர்களுக்குப் பாகிஸ்தான் இந்த விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது. ஜோ பைடனுக்கு 2008-ம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவின் உதவியை விரிவுபடுத்த இருப்பதாக அப்போது அமெரிக்காவின் செனட்டராக இருந்த பைடன் திட்டங்களை வெளியிட்டார். அமெரிக்காவின் வெளியுறவு அதிகாரியாக பல நாடுகளில் பணியாற்றிய ரயான் கூருக்கருக்கு 2006-ம் ஆண்டும், அமெரிக்காவின் சட்ட அமலாக்க அதிகாரியாக இருந்த ரொனால்ட் நோபிளுக்கு 2011-ம் ஆண்டும் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

பில்கேட்ஸ், ஒரு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு வருகை தந்து போலியோ, கொரோனா கட்டுப்பாடு பணிகள் குறித்து பார்வையிட்டார். குறைவான வளங்களைக் கொண்டு பாகிஸ்தான் கொரோனாவிற்கு எதிராக திறனோடு போராடுவதாக பாராட்டினார். பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தானின் குடியரசு தலைவர் ஆரிப் அல்வி இந்த விருதைப் பில்கேட்ஸுக்கு வழங்கினார்.
