முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் மது அருந்துவதும், விற்பனை செய்வதும் சட்டவிரோதமாகும். பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் வேகமாக வந்த கார் ஒன்றை மடக்கி போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. உடனே காரில் இருந்த மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்ய முயன்றனர். உடனே காரில் இருந்த முஷா மகேனா என்பவர், `நான் யார் தெரியுமா?' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தன் தாயார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மனைவி என்றும், தன்னை கைது செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் போலீஸாரை மிரட்டினார். ஆனாலும், போலீஸார் காரில் இருந்த முஷா உட்பட மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தனர். அடுத்த சில மணி நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போலீஸ் தலைமை அதிகாரிக்கு மேலிடத்தில் தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே முஷாவை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து மேற்கொண்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், முஷா உட்பட மூவரும் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் உத்தரவாதம் கொடுத்தனர். அதோடு சில சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்ட பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். முஷா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மூன்றாவது மனைவி புஷ்ரா பிபுவின் மகனாவார். புஷ்ராவுக்கு நடந்த முந்தைய திருமணத்தில் பிறந்தவர்தான் முஷா என்று கூறப்படுகிறது. முந்தைய திருமணத்தில் புஷ்ராவுக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர். இம்ரான்கானின் முதல் மனைவி ஜமீமா தன் மகனோடு இங்கிலாந்தில் வசித்துவருகிறார். இரண்டாவது ரேஹம் கானை திருமணம் செய்து ஒரு ஆண்டு மட்டுமே வாழ்ந்தார். கடைசியாக புஷ்ராவை கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.