Published:Updated:

`படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்; அழிப்பிலும் ஆபத்து!’ - பாகிஸ்தான் சொல்லும் சிம்பிள் யோசனை #Locust

இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் பல ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களை நாசம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல், உயிரிழப்பு, லாக்டௌனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஆம்பன் புயல், அதிக வெப்பநிலை, எல்லையில் சீனப் படைகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு பாதிப்பும் வந்துள்ளது. வடமேற்கு மாநிலங்களில் விளையும் பயிர்களை நாசம் செய்துவரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்தான் அது.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்கிய சூறாவளியால் அங்கு வெட்டுக்கிளிகளின் பெருக்கம் அதிகமானது. ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா, கென்யா ஆகியவை வழியாக இரான், அங்கிருந்து பாகிஸ்தான் வந்து தற்போது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளன கொடூரமான பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த வெட்டுக்கிளிகள் ஈரப்பதமான பகுதிகளில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும், இவை ஒரேநாளில் தங்கள் உடல் எடைக்கு நிகராக உணவு உண்ணக்கூடியவை.

மேலும் நாள் ஒன்றுக்கு 90 மைல் தூரம் இடம்பெயர்ந்து தங்களுக்கான உணவைத் தேடுகின்றன. பாலைவன வெட்டுக்கிளிகள் அளவில் பெரியவை. இது எப்போதும் கூட்டமாகவே இருக்கும். இதனால் பயிர்களுக்குப் பேராபத்து எனக் கூறப்பட்டுள்ளது. 35,000 பேருக்குத் தேவையான உணவை ஒரேநாளில் இவை உண்ணும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய வடமேற்கு மாநிலங்களில் நுழைந்துள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள பயிர்கள் அனைத்தையும் நாசம் செய்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. வைரஸ் தாக்குதலால் ஏற்கெனவே விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலும் விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. வெட்டுக்கிளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் பூச்சிமருந்து தெளிக்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளி அழிப்பிலும் ஆபத்து!

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் குளிர்காலத்தின்போது இந்த வெட்டுக்கிளிகள் வரத்தொடங்கியுள்ளன. அங்கு குளிர்காலத்தில் தங்கியிருந்து குஞ்சு பொறித்த பிறகு அதன் அடுத்த தலைமுறைதான் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த ஒரு தேசிய செயல் திட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அழித்தது. மேலும், சுமார் 3,00,000 லட்சம் லிட்டர் பூச்சிக்கொல்லியை வான்வழி மூலம் தெளிக்கும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்துக்குக் காலநிலை மாற்றம் காரணமாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான விஷயமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`பயிர்களுக்குப் பேரழிவு; 27 ஆண்டுகளில் இல்லாத தாக்குதல்’- இந்தியாவுக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருக்கும் ஹைதராபாத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் பருத்திப் பயிர்களை விளைவித்துள்ள பன்வார் என்ற விவசாயியின் பெரும்பாலான நிலங்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

“வெட்டுக்கிளிகள் என் பருத்தி பயிரை சில மணி நேரத்தில் மொத்தமாகக் காலி செய்வதைப் பார்த்தேன். இந்த மாத தொடக்கத்தில் என் பயிர்கள் இரண்டாவது முறையாக வெட்டுக்கிளிகளால் தாக்கப்பட்டுள்ளன. பகலில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல், இரவில் என் மா தோட்டத்தில் வௌவால்களின் தாக்குதல். இரவு பகல் என அனைத்து நேரத்திலும் கொரோனா அச்சம் என இவை அனைத்தும் எங்களை இறுக்குகின்றன. இனிமேல் நாங்கள் எங்குதான் செல்வது?” எனக் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

‘வெட்டுக்கிளிகளை அழிக்க அரசாங்கத்தால் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்கும் மற்றும் வனவிலங்குகள், கால்நடைகளுக்கு விஷமாக இருக்கும்’ என பெஷாவர் வேளாண் பல்கலைக்கழகத்தின் விலங்கு உயிரியலாளர் சோஹைல் அகமது எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாண பகுதிகளில் உள்ள சில விவசாயிகள், வெட்டுக்கிளிகளை அழிக்க தெளிக்கப்படும் பூச்சி மருந்தால் ஏற்படும் மாற்றத்தைக் கவனித்துள்ளனர். பழத்தோட்டங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்கெனவே கிளிகள் இறந்துவிட்டதாகவும் வெட்டுக்கிளிகளை உண்ண வரும் காகங்களும் தற்போது வருவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

`லோகஸ்ட்' வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்?

எளிய தீர்வு!

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளை யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அழிப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் ஒரு எளிய யோசனையைக் கூறியுள்ளனர். பாகிஸ்தானின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் ஊழியரான முகமது குர்ஷித் மற்றும் பாகிஸ்தான் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் உயிரி தொழில்நுட்பவியலாளர் ஜோஹர் அலி ஆகியோர்தான் இந்த யோசனையை வழங்கியுள்ளனர். இதன்படி வெட்டுக்கிளிகளைப் பிடித்து கோழிகளுக்கு உணவாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

இதைப் பற்றி குர்ஷித் பேசும்போது, ``கடந்த வருடம் மே மாதம் ஏமனிலும் இது போன்ற வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றது. அப்போது அந்த மக்கள் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழிப்பதற்கு முன்பாக அவர்கள் அதைப் பிடித்து விற்றனர். அதன் மூலம் ஈர்க்கப்பட்டுதான் பாகிஸ்தானிலும் இதே முறையைச் செயல்படுத்தலாம் எனத் திட்டமிட்டோம். வெட்டுக்கிளிகள் பகலில் மட்டுமே பறக்கின்றன, இரவு நேரங்களில் அவை மரங்கள் மற்றும் தாவரங்கள் இல்லாத திறந்த நிலத்தில் கொத்தாகத் தங்குகின்றன, சூரிய உதயம் வரும்வரை கிட்டத்தட்ட அவை அசைவில்லாமலேயே இருக்கின்றன. அந்த நேரத்தில் வெட்டுக்கிளிகளைப் பிடிப்பது எளிதான காரியம்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் திணறும் வட இந்தியா... தமிழகத்திற்கும் சிக்கல் ஏற்படுமா?

அதற்காக பஞ்சாப் மாகாணத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமப் பகுதியான ஒகாரா மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தோம். அங்கு பெப்லி பஹார் வனப்பகுதியில் 3 நாள்கள் ஒரு சோதனை திட்டத்தைச் செயல்படுத்தினோம். அந்தப் பகுதியில் பிப்ரவரி மாதத்தில் வெட்டுக்கிளிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. `வெட்டுக்கிளிகளைப் பிடித்து பணம் சம்பாதித்து, பயிர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கத்தை மக்கள் மத்தியில் அறிவித்தோம்.

ஒரு கிலோ வெட்டுக்கிளிகளுக்கு 20 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு இரவில் மொத்தமாக 7 டன் வெட்டுக்கிளிகள் வரை பிடிக்கலாம். விவசாயி ஒருவர் பிடித்துக் கொடுத்த வெட்டுக்கிளிகளை எங்கள் திட்டக்குழு எடைபோட்டு அருகில் உள்ள கோழி தீவன பண்ணைக்கு விற்றது. இதனால் அந்த விவசாயிக்கு 20,000 ரூபாய் வரை பணம் கிடைத்தது.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

ஒகாராவில் வெட்டுக்கிளிகளைப் பிடித்து பணம் சம்பாதிக்கும் விஷயத்தை சமூகவலைதளங்கள் மூலம் பரப்பினோம். முதலில் 10 -15 பேர் வெட்டுக்கிளிகளைப் பிடித்து வழங்கினர். மூன்றாவது நாளுக்குப் பிறகு 50-க்கும் மேற்பட்ட மக்கள் வெட்டுக்கிளிகளைப் பிடிக்கத்தொடங்கினர். வெட்டுக்கிளிகளைப் பிடிக்க விவசாயிகளுக்கு நாங்கள் உதவியும் யோசனையும்கூட வழங்கவில்லை. அவர்களே பிடித்து மூட்டையில் அடைத்துக் கொண்டுவந்தனர். நாங்கள் செய்ததெல்லாம் அந்த மூட்டையில் இருப்பது உண்மையிலேயே வெட்டுக்கிளிகளா என்பதைச் சோதனை செய்து பைகளை எடைபோட்டு, எடைக்கு ஏற்ப பணம் பெற்றுக் கொடுத்தோம். வெட்டுக்கிளிகளால் கோழிகளின் புரதச் சத்து அதிகரிக்கும். மேலும், பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி மருந்து தெளிப்பையும் நிறுத்தலாம்” எனக் கூறியுள்ளார்.

News Credits : The Thirdpole.net

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு