அலசல்
Published:Updated:

பாலஸ்தீன் எரிகிறது!

பாலஸ்தீன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலஸ்தீன்

யூதர்களின் நிலப்பசி அடங்கப்போவதில்லை என்பது பாலஸ்தீனர்களுக்குத் தெரியும். இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக மேற்குக் கரையையும், காசா முனையையும் ஆக்கிரமித்தார்கள்.

உலகமே கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போரிட்டுவரும் நிலையில், கடந்த சில தினங்களாக ஜெருசலேமில் நிலத்துக்கான போர் முன்னுரிமை பெற்றிருப்பது கொடுமையானது மட்டுமல்ல, அவலமானதும் கூட. ஆனால், இஸ்ரேலையும் பாலஸ்தீனையும் அறிந்தவர்களுக்கு இதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. உலகம் இதுவரை கண்டதில் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் போர் இது. 20-ம் நூற்றாண்டைத் தொடக்கப்புள்ளியாக வைத்துக்கொண்டால், இது ஒரு நூற்றாண்டுப் போர். பகைக்கான வேரைத் தேடத் தொடங் கினால் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலம்வரை போக வேண்டியிருக்கும். 2,000 ஆண்டுகளாகத் தொடரும் பகையை, ஒரு கிருமி தடுத்து நிறுத்திவிடுமா என்ன?
பாலஸ்தீன் எரிகிறது!

தற்சமயம் இரண்டு இடங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. ஒன்று, ஜெருசலேமில். இரண்டாவது, எல்லையில். இப்படி நம் வசதிக்குப் பிரித்துக்கொண்டாலும் அடிப்படையில் நடந்துகொண்டிருப்பது ஒரே பெரும் போர்தான்.

1967-ம் ஆண்டு ஜெருசலேமின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்த கையோடு, ‘முழு ஜெருசலேமும் எங்களுக்குத்தான் சொந்தம்’ என்று பிரகடனப்படுத்தியது இஸ்ரேல். ஆனால், இதை உலகம் ஏற்கவில்லை என்பதால், இன்றுவரை சர்ச்சைக்குரிய ஒரு பகுதியாகவே ஜெருசலேம் நீடிக்கிறது. ஜெருசலேமில் ஒரு மலைக்குன்றின் மீது அமைந்திருக்கும் அல் அக்சா மசூதியை இஸ்லாமியர்கள் தங்களுடைய புனிதத் தலமாகக் கருதுகிறார்கள். யூதர்களுக்கும் இதுவே புனிதத் தலம். அவர்கள் இந்தப் பகுதிக்கு வைத்திருக்கும் பெயர், ‘டெம்பிள் மவுன்ட்.’ கடந்த சில தினங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருப்பது இந்த இடம்தான்.

என்ன நடந்தது என்று பார்ப்போம். கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றிய நிகழ்வைக் கொண்டாடும் வகையில் இஸ்ரேல் ஆண்டுதோறும் ‘ஜெருசலேம் தினம்’ கொண்டாடுவது வழக்கம். சரியாக ரமலான் மாத இறுதியில்தான் இந்தக் கொண்டாட்டமும் நடைபெறும். ஆரவாரமாகவும், வெற்றிக் களிப்போடும் யூதர்கள் அணிவகுப்பு நடத்துவார்கள். பாலஸ்தீன இஸ்லாமியர்களின் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதியைக் கடக்கும்போது மட்டும் அவர்கள் குரல் மேலும் உயரும், முழக்கத்தின் தீவிரம் அதிகரிக்கும். ‘இது எங்கள் ஜெருசலேம். எங்கள் புனித இடம். எங்கள் இஸ்ரேல்’ என்று முழங்குவார்கள். ‘இது எங்களுக்கும் புனித இடம். எனவே எங்கள் ஜெருசலேமும்கூட’ என்பார்கள் பாலஸ்தீனர்கள்.

இதை யூத அடிப்படைவாதிகளால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடிந்ததில்லை. இஸ்ரேலில் மட்டும் சுமார் 2,50,000 இஸ்லாமியர்கள், அதுவும் தங்களை பாலஸ்தீனர்களாக உணரும் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ‘இவர்கள் ஏன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்? பாலஸ்தீன இஸ்லாமியர்கள் நம் எதிரிகள் என்றால், நம் நாட்டுக்குள் இருக்கும் இஸ்லாமியர்களும் எதிரிகள்தான், இல்லையா? அகண்ட இஸ்ரேலியப் பெருங்கனவு நிறைவேற வேண்டுமானால் ஜெருசலேம் தொடங்கி நம் நிலத்துக்குள் இருக்கும் அத்தனை அந்நியர்களையும் சேர்த்தே அல்லவா நாம் வெளியேற்ற வேண்டும்’ என்பது அவர்களின் நினைப்பு.

யூதர்களின் நிலப்பசி அடங்கப்போவதில்லை என்பது பாலஸ்தீனர்களுக்குத் தெரியும். இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக மேற்குக் கரையையும், காசா முனையையும் ஆக்கிரமித்தார்கள். அடுத்து ஜெருசலேம். அதன் பிறகு இஸ்ரேலுக்குள் இருக்கும் இஸ்லாமியக் குடியிருப்புகளுக்கு வந்து, மக்களை வெளியேற்றிவிட்டு அவர்கள் இருப்பிடங்களைக் கைப்பற்றிக்கொள்வார்கள். இந்தத் திட்டத்தில் அரசும், யூத அடிப்படைவாதிகளும் ஒரே அணியில் நிற்பதையும் பாலஸ்தீனர்கள் அறிவார்கள். அதனால் ஜெருசலேம் தினம் நெருங்கும்போது தங்களைத் தற்காத்துக்கொள்ள அல் அக்சா மசூதியில் பாலஸ்தீனர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அஞ்சியதுதான் நடந்தது. கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய காவல்துறையினர் புயல்போல் மசூதி பகுதிக்குள் நுழைந்து பாலஸ்தீனர்களைத் தாக்கத் தொடங்கினர். கற்கள் தவிர வேறு ஆயுதங்கள் இல்லாத நிலையில் 300 பாலஸ்தீனர்களும், 21 இஸ்ரேலியர்களும் காயமடைந்தனர்.

பாலஸ்தீன் எரிகிறது!

அல் அக்சா தாக்குதலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளும் பாலஸ்தீனை மறைமுகமாக ஆளும் ஹமாஸை விழிக்கச் செய்தபோது மோதல் அடுத்தகட்டத்துக்குச் சென்றது. காசா முனையிலிருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தது ஹமாஸ். பெருஞ்சீற்றத்தோடு இஸ்ரேல் திருப்பியடித்தது. இஸ்ரேலிய ஏவுகணைகள் காசாவின் வானத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. காசாவில் ஊடக அலுவலகங்கள் இருக்கும் கட்டடத்தை தரைமட்டமாக்கியது இஸ்ரேல். ஹமாஸ் தலைவர் வீடும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அதிகாரபூர்வமாக ஞாயிறு வரை 188 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸின் தாக்குதலால் இஸ்ரேலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஓர் இந்தியப் பெண்ணும் அவர்களில் அடக்கம்.

ஹமாஸை ஒழிக்காமல் மறுவேலை பார்க்கப்போவதில்லை என்று சூளுரைக்கிறார் இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு. ஆனால், அது சுலபமல்ல என்பது அவருக்கும் தெரியும். ராணுவத் தொழில்நுட்பத்திலும், ஆய்வுகளிலும் முன்னணியில் இருக்கும் நாடு, இஸ்ரேல். அவர்களுடைய உளவுத்துறையான மொசாட், எதிரி சுவாசிப்பதற்கு முன்பே அவன் மூச்சுக்காற்றை மோப்பம் பிடிக்கும் சக்தி படைத்தது. தவிரவும், பல ஆண்டுக்கால உழைப்பில் அயர்ன் டோம் (இரும்புக் குவிமாடம்) என்னும் அதி நவீன ரேடார் வான் பாதுகாப்புக் கருவியொன்றை இஸ்ரேல் கண்டுபிடித்திருக்கிறது. இஸ்ரேலிய வானத்துக்குள் ஊடுருவும் எந்த ஓர் ஏவுகணையையும் செயலிழக்கச் செய்யும் திறன் இதற்கு இருக்கிறது. இதை வைத்துத்தான் ஹமாஸ் செலுத்திய பல ஏவுகணைகளை இஸ்ரேல் வீழ்த்தியது. அதையும் மீறி ஒன்றிரண்டு ஊடுருவி வந்து மக்களைக் கொன்றிருக்கின்றன.

இஸ்ரேலைச் சலிப்படையவும் வெறிகொள்ளவும் செய்வது இதுதான். ‘நான் யானை என்றால் ஹமாஸ் ஒரு கொசு’ என்பது அதற்குத் தெரியும். 2014-ம் ஆண்டுகூட ஏழு வாரங்கள் இடைவிடாமல் கடும் தாக்குல்களை ஹமாஸுக்கு எதிராக நடத்திப் பார்த்துவிட்டது இஸ்ரேல். எதுவும் நடக்காததுபோல் இப்போது எழுந்து வந்ததோடு நில்லாமல், 1,800 ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவியிருக்கிறது. பாலஸ்தீனர்களின் உரிமைகளைக் காக்க ஹமாஸ் போரிடலாம் என்றால், இஸ்ரேலியர்களின் நலன் காக்க நெதன்யாகு போரிடக் கூடாதா? தவிரவும், பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கெனவே ஊழல் வழக்குகளில் சிக்கிக் கடுமையாகத் திணறிக் கொண்டிருக்கிறார். தன்மீது படிந்திருக்கும் கறையை அழித்து, புனிதப்படுத்தும் மகத்தான சக்தி போருக்கு மட்டுமே இருக்கிறது என்பதை வேறெவரையும்விட அவர் நன்கு அறிவார்.

இந்தமுறை இஸ்‌ரேலுக்குள்ளும் இரண்டு இனங்களுக்குள் மோதல் பரவியது வேதனை. தலைநகர் டெல் அவிவ் அருகில் அராபியர்போல் தோற்றமளித்த ஒரு நபரை தீவிர வலதுசாரி யூத இளைஞர்கள் சிலர் மூர்க்கத்தனமாகத் தாக்கிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். இங்கு மட்டுமல்ல, இஸ்ரேலின் பல பகுதிகளில் கையில் தடியோடு இப்படிப்பட்டவர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். தேசபக்தியின் பெயரால், இனப்பற்றின் பெயரால், பெரும்பான்மைவாதத்தின் பெயரால் இப்படி வன்முறையில் ஈடுபடும் யூதர்களால் யூதர்களுக்கே ஆபத்து நேரலாம் என்பதை உணர்ந்த அரசு, காவலர்களையும் பாதுகாப்புப் படையினரையும் இறக்கிவிட்டிருக்கிறது. இருந்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், சில பகுதிகளில் அவசரநிலைப் பிரகடனம் செய்திருக்கிறது. கிட்டத்தட்ட உள்நாட்டுக் கலகத்துக்கான விதைகள் தூவப்பட்டிருக்கின்றன. இயலாமையும், கோபமும், வெறுப்பும், பகையும் உந்தித் தள்ள, ‘போர் தவிர வேறு வழியில்லை’ என்னும் நிலையில் இஸ்ரேல் மேலதிக வெறியோடு காசா முனைக்கு எதிராகத் திரும்பிக்கொண்டிருக்கிறது. தாக்குதல்களும் மூர்க்கமடைந்துள்ளன. ஏவுகணை வேறுபாடு பார்ப்பதில்லை என்பதால் ஆண்களும், பெண்களும், முதியோர்களும் மட்டுமல்ல... பாலஸ்தீனக் குழந்தைகளும் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீன் எரிகிறது!

ஹமாஸுக்கும் இது மிகவும் நெருக்கடியான காலகட்டம். இன்று அது வெறும் ஆயுதக்குழு மட்டுமல்ல, அரசாங்கமும்கூட. காசா முனையும் மேற்குக் கரையும் 2007 முதல் ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் எதிர்க்க வேண்டிய நெருக்கடி அவர்களுக்கு இருக்கிறது. ஒரு பக்கம் இஸ்ரேலின் தாக்குதல்; இன்னொரு பக்கம், ‘ஏன் நீ எதுவும் செய்யவில்லை’ என்று ஆதங்கப்படும் பாலஸ்தீன மக்கள். மற்றொரு பக்கம் சிறு ஆயுதக்குழுக்கள். ‘உன்னால் முடியாவிட்டால் விலகிக்கொள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று ஆயுதங் களை ஏந்தியபடி அவர்கள் முழங்குகிறார்கள்.

ஒரு விலங்கைப்போல் போர் ஊளையிட்டுக்கொண்டிருக்கிறது. வெற்றி கிடைக்கப்போவதில்லை என்று இருவருக்கும் தெரியும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்டு செல்லும் ஒரு போர் இன்றோ, நாளையோ முடிவடைந்துவிடாது. இருந்தாலும், இன்னொரு போர் எல்லோருக்கும் தேவையாக இருக்கிறது. இந்த இருவருக்கும் இடையில் நூற்றாண்டுகளாகச் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் பெருந்திரளான சாமானிய மக்கள். அவர்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. போரில்லா நிலம். குண்டு பொத்துக்கொண்டு விழாத வானம். சத்தமில்லாப் பெரும் அமைதி. எத்தனை இழப்பு வந்தாலும் இந்தக் கனவை மட்டும் அவர்கள் விட்டுவிடாமல் ஏந்திக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் மரிக்கலாம். கனவுக்கு மரணமில்லை.