Published:Updated:

`பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயைப் புதைத்த மகன்’ - 3 நாள்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட தாய்

புதைக்கப்பட்ட தாய்
புதைக்கப்பட்ட தாய்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வயதான தாயைப் பார்த்துக்கொள்ள முடியாத மகன் அவரை உயிருடன் புதைத்துள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ஜிங்பியன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மா (Ma). 58 வயதான இவர் கடந்த 2-ம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 79 வயதான தன் தாய் வாங்கை (Wang), சக்கர நாற்காலியில் அமரவைத்து வெளியில் அழைத்துச் சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பும்போது மா மட்டும் தனியாக வந்துள்ளார். வாங் பற்றி அவரது மனைவி கேட்டபோது அவரை உறவினர் வீட்டில் விட்டுவந்துள்ளதாகப் பொய் கூறியுள்ளார்.

Representational image
Representational image

3 நாள்கள் ஆகியும் வாங் திரும்பி வராததால் சந்தேகமடைந்த மாவின் மனைவி, தன் உறவினர்களை தொடர்புகொண்டு வாங் பற்றி விசாரித்துள்ளார். வாங் அங்கு இல்லாததை அறிந்த மாவின் மனைவி, ஜிங்பியன் காவலர்களிடம் தன் மாமியார் காணாமல் போனது தொடர்பாகப் புகார் கொடுத்து, இறுதியாக தன் கணவர்தான் அவரை வெளியில் அழைத்துச் சென்றார் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் காவலர்களுக்கு மா மீது சந்தேகம் வரவே அவரைக் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இதில் தன் தாயை உயிருடன் புதைத்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார் மா.

பிறகு அவர் கூறிய தகவலின் படி, சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள் வாங் புதைக்கப்பட்ட இடத்தை சோதனை நடத்தியுள்ளனர். அப்போது யாரோ முனகும் சத்தம் கேட்டு அந்த இடத்தைத் தோண்டி பார்த்தபோது, புதை குழியில் வாங் உயிருடன் இருந்துள்ளார். 78 வயதான அவர் சுமார் 3 நாள்கள் உணவு, தண்ணீர், காற்று போன்ற எதுவும் இல்லாமல் உயிருடன் இருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த காவலர்கள், உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

புதைக்கப்பட்ட தாய்
புதைக்கப்பட்ட தாய்

தொடர்ந்து மா மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மிகுந்த ஏழையான தன்னால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை வைத்துப் பராமரித்து அவருக்குத் தேவையான மருத்துவச் செலவுகளைச் செய்ய முடியவில்லை என்பதால் உயிருடன் புதைத்துவிட்டதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் மா. இந்த விவகாரம் சீனாவில் அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் வாங் மீட்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு