Published:Updated:

``இரானின் புராதனச் சின்னங்களை அழியுங்கள்!’’ –பென்டகனிடம் மூக்குடைபட்ட ட்ரம்ப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இரான் நாட்டின் பாரசீக மன்னர்களின் சிதிலமடைந்த அரண்மனை
இரான் நாட்டின் பாரசீக மன்னர்களின் சிதிலமடைந்த அரண்மனை

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுக்கு அடி பணிய மறுத்தது பென்டகன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரானின் புரட்சி ராணுவத்தளபதி சுலைமானியை, சமீபத்தில் இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றது. இதனால், அமெரிக்கா - இரான் நாடுகளுக்கிடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு தக்க தருணத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று இரான் கொந்தளித்துள்ளது. இதற்கிடையே, சர்வதேச விதிகள் தெரியாமல் இரான் நாட்டின் கலாசார மற்றும் புராதனச் சின்னங்கள்மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டதாகவும், அதற்கு ராணுவத் தலைமையகமான பென்டகன் ஒத்துழைக்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'அதிபரே உத்தரவிட்டாலும் பென்டகன் விதிகளை மீறிச் செயல்படாது' என்று பென்டகன், ட்ரம்ப்புக்கு உணர்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

ஏற்கெனவே, 'அமெரிக்க மக்கள் மற்றும் தூதரகங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இரானின் புராதானச் சின்னங்களைத் தாக்கி அழித்துவிடுவோம்' என இரு முறை ட்ரம்ப் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மார்க் எஸ்பர் கூறுகையில், ''சர்வதேச போர் விதிமுறைகளை மீறி எங்களால் செயல்பட முடியாது. குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில், 'சில ஆண்டுகளுக்கு முன்னதாக 52 அமெரிக்கர்களை இரான் பிணையக் கைதிகளாக கடத்திச்சென்று அடைத்து வைத்திருந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், இரானின் 52 இடங்கள் மீது டார்கெட் வைத்துள்ளோம்' என்று பேசினார். மேலும், 'எங்கள் மக்களை அவர்கள் கொல்கிறார்கள். சாலையோரத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அமெரிக்கர்களைப் பிடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் கலாசார சின்னங்கள்மீது வெடிகுண்டு வீசக்கூடாதா?’ என்று கேள்வி எழுப்பினார். கடந்த 1945- ம் ஆண்டு ஹேக் நகரில் நடந்த மாநாட்டில், 'எந்த ஒரு நாட்டின் கலாசார சின்னங்கள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது' என்ற போர் விதி வகுக்கப்பட்டுள்ளது. விதி தெரியாமல் ட்ரம்ப், பென்டகனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

'கலாசார சின்னங்களை அழிப்பேன் 'என்று கூறிய ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு, நியூயார்க் மெட்ரோபாலிட்டன் மியூசியம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''இந்த இக்கட்டான சூழலில், ஒவ்வொரு நாட்டின் கலாசார மற்றும் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. புராதனச் சின்னங்களை அழிப்பது அருவருப்பான பேச்சு'' என்று நியூயார்க் மியூசியம் கண்டித்துள்ளது.

அதேவேளையில், வெள்ளை மாளிகை ஆலோசகர் கெல்லியானே கானே கூறுகையில், ''அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலாசார பகுதிகளைத் தாக்க உத்தரவிடவில்லை. நாங்கள் ஏன் தாக்கக்கூடாது என்ற கேள்வியை மட்டுமே எழுப்பினார். இரான், தங்கள் கலாசார பகுதிகளுக்குள் ராணுவ முகாமையும் அமைத்துள்ளது ''என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா -இரான் மோதல் எப்போது, எதற்காகத் தொடங்கியது? - ஒரு விரிவான அலசல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை, இரான் கலாசார பெருமை வாய்ந்த நாடு. இரானில் 100- க்கும் மேற்பட்ட பழம்பெருமை வாய்ந்த கலாசார மற்றும் புராதனச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் 12 புராதனச் சின்னங்கள் யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டவை. புராதனச் சின்னங்கள்மீது குண்டு வீசினால், போர்க் குற்றமாகக் கருதப்படும். கலாசார சின்னங்களைத் தாக்கினால், பாமியான் சிலைகளைத் தகர்த்த தலிபான்களுக்கும் அமெரிக்க ராணுவத்துக்கும் என்ன வித்தியாசம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஷாரி, `` `கலாசார சின்னங்களை அழிப்பேன்' என்று கூறும் அமெரிக்க அதிபருக்கும் ஐஎஸ் இயக்கத்தினருக்கும் வித்தியாசமில்லை. குணநலன்கள் இருவருக்கும் ஒத்துப் போகின்றன’’ என்று கொந்தளித்துள்ளார்.

பாரசீக கட்டடக் கலை
பாரசீக கட்டடக் கலை

'கடந்த 1972-ம் ஆண்டு ஐ.நா ஒப்பந்தப்படி, கலாசார மற்றும் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் இரான் மற்றும் அமெரிக்க நாடுகள் கையொப்பமிட்டுள்ளன' என்று யுனெஸ்கோ அமைப்பு இரு நாடுகளுக்கும் நினைவுபடுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு