Published:Updated:

`வாட்ஸ்அப்' பயன்படுத்த வரி... என்ன நடக்கிறது லெபனானில்?

லெபனான் போராட்டம்
லெபனான் போராட்டம்

மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான லெபனான் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. நாட்டின் கடன் சுமை அதிகரித்ததால், அதை சாமான்யன் தலைமையில் இறக்கிவைத்திருக்கிறது லெபனான் அரசு. அதிக வரி விதிப்பால் நொந்த லெபனான் மக்கள், அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று லெபனான். பரப்பளவில், தமிழ்நாட்டைவிட ஏறத்தாழ 10 மடங்கு சிறிய நாடு. இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழும் லெபனானின் அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது. லெபனான் நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு இடஒதுக்கீடு உண்டு.

லெபனான் நாட்டின் அதிபர் பதவி அந்நாட்டின் மெரூனைட் கிறித்துவ சமூகப் பிரதிநிதிக்கும், பிரதமர் பதவி சன்னி முஸ்லிம்கள் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் பதவி ஷியா முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
லெபனான் போராட்டம்
லெபனான் போராட்டம்
EPA

லெபனான் நாட்டின் கடன் சுமை அதிகரித்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த ஆண்டின் முடிவில் லெபனான் நாட்டின் மொத்த உற்பத்தியைவிட, 150 சதவிகிதம் கடன் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் விளைவாக, மக்கள் பயன்படுத்தும் பொருள்கள், கல்வி, மருத்துவம் என அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களிடையே காணப்படுகிறது.

டாலருக்கு எதிராக லெபனான் பவுண்டின் மதிப்பு சரியத் தொடங்கியதால், லெபனான் அரசு அதிரடியான முடிவுகளை அறிவித்தது. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், பொதுத்துறைக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. அதன் நீட்சியாக, தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட `ஆப்'களின் சேவையைப் பயன்படுத்த அரசு வரி விதித்தது.

வாட்ஸ்அப்பில் போன் பேச விதிக்கப்பட்ட வரி, இந்திய மதிப்பில் 14 ரூபாய். அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் எதிர்ப்புகள் கிளம்ப, வரி விதிப்பு வாபஸ் வாங்கப்பட்டது. எனினும், மக்கள் போராட்டம் இந்த வரி விதிப்பு மீது மட்டும் எதிர்ப்பு என்ற கட்டத்தைத் தாண்டி, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
லெபனான் போராட்டம்
லெபனான் போராட்டம்
Getty Images

லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான திரிபோலி ஆகியவற்றில், மக்கள் பதாகைகள் ஏந்தி அமைதியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். லெபனான் மக்கள்தொகையில், பெரும்பான்மை மதங்களான சன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம், மெரூனைட் கிறித்துவம் ஆகியவற்றைப் பின்பற்றும் மக்கள் ஏறத்தாழ ஒரே எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த காலங்களில், இது மக்களிடையே மதப் பிரிவினையை உருவாக்கப் பயன்பட்டு வந்துள்ளது.

தற்போது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால், ஒரே பாதிப்பை எதிர்கொண்டுள்ள லெபனானின் சாமான்ய மக்கள், மத அடையாளங்களைப் பின்னுக்குத் தள்ளி, லெபனான் கொடியுடன் போராட்டத்தில் இறங்கியுள்ளது அந்நாட்டின் அரசியல்வாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மதத்தின் தலைவரும், போராட்டக்காரர்களோடு இணைந்து, ``நாங்கள் மக்களோடு இருக்கிறோம்!" என்று அறிவித்து, மத மோதல்கள் ஏற்படாதவாறு கவனித்து வருகின்றனர்.
லெபனான் போராட்டம்
லெபனான் போராட்டம்
Sky news

லெபனான் மக்கள் தினமும் மின்வெட்டு, அரசால் அளிக்கப்படும் குறைந்த அளவிலான குடிநீர், சுகாதாரமற்ற சாலைகள், மோசமான நிர்வாகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம், பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியபோது... காவல்துறை, போராடுபவர்கள் மீது ரப்பர் குண்டுகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கியது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.

``மக்களின் வலி புரிகிறது. ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் தவறானவர்கள் அல்ல!
லெபனான் அதிபர் மிஷேல் ஔன்

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி, நிலைமையைக் கட்டுப்படுத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 72 மணி நேர அவகாசம் கொடுத்து, பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கையில் இறங்குமாறு உத்தரவிட்டார். அதிபர் மிஷேல் ஔன், "மக்களின் வலி புரிகிறது. ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் தவறானவர்கள் அல்ல!" என்றார்.

லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி
லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி
Getty images

பிரதமர் அளித்த 72 மணி நேர அவகாசத்திற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொருளாதாரத்தை மீட்கத் திட்டங்களை முன்மொழிந்துள்ளனர். அதன்படி, தற்போதைய அதிபர், முன்னாள் அதிபர்கள், பிரதமர், அமைச்சர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலான அரசுப்பதவியில் இருப்பவர்களுக்கு அரசு அளிக்கும் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படும்.

இந்த ஆண்டு முடிவுக்குள் ஊழலுக்கு எதிரான கமிட்டி தொடங்கப்படும், 2020-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படாது, ஏழை மக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் போன்றவற்றை அறிவித்து, பொதுமக்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கோரியுள்ளது லெபனான் அரசு.

இந்த அரசு முழுமையாக ஊழல்மயமாகி உள்ளது. இந்த அரசு கவிழ்க்கப்பட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் லெபனான் மக்கள்.
லெபனான் போராட்டம்
லெபனான் போராட்டம்
Getty images

``இந்த அரசு முழுமையாக ஊழல்மயமாகி உள்ளது. இந்த அரசு கவிழ்க்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் பதவி விலக வேண்டும். மறு தேர்தல் வரும் வரை, லெபனான் அரசை நீதிபதிகள் குழு வழிநடத்த வேண்டும்" என்கின்றனர், போராடும் லெபனான் மக்கள். பிரதமர் ஹரிரியின் வார்த்தைகள் மீது நம்பிக்கையில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். லெபனான், மாபெரும் மக்கள் எழுச்சியில் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்கொள்ள காத்திருக்கிறது.

மெட்ரோ ரயில்கள் எரிப்பு... எமெர்ஜென்ஸி அறிவிப்பு... என்ன நடக்கிறது சிலி நாட்டில்? #ChileProtest
பின் செல்ல