Published:Updated:

தான்சான்யாவில் நடக்கும் மனித வேட்டை - அதிர்ஷ்டத்தின் பெயரால் நடக்கும் கொடூரம்!

ராம் பிரசாத்

உறவுகளே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபடுவதற்கு வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடியே அவர்களை அந்தச் சூழலுக்குத் தள்ளுகிறது.

தான்சான்யா
தான்சான்யா

ஆப்பிரிக்கா நாடான தான்சான்யாவில் அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிருகங்களைப் போல வேட்டையாடப்படுகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கைகள், விரல்கள், உடல் உறுப்புகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட் நிர்ணயம் செய்துள்ளனர். அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் அதிர்ஷ்டத்தைத் தரும் என்ற மூடநம்பிக்கையே இந்த அப்பாவி மனிதர்கள் வேட்டையாடப்படுவதற்கு காரணமாக அமைகின்றன. குடும்ப உறவுகளே பணத்துக்கு ஆசைப்பட்டு இந்தச் செயல்களில் ஈடுபடுவது அவர்களுக்கு மேலும் வேதனையைத் தருகிறது. யாரை தான் நம்புவது என தெரியாமல் ஒவ்வொரு இரவையும் பயத்துடனே நகர்த்தி வருகின்றனர்.

தான்சான்யா மக்கள்
தான்சான்யா மக்கள்

இந்த நோயால் பாதிக்கப்பட்ட தான்சான்யா மக்கள் தங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயத்துடனே கடக்கின்றனர். அல்பினிசம் என்பது மரபணு குறைபாடு காரணமாக ஏற்படும் நோய். இந்த நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்மை நிறத் தோல் உருவாகிறது. அவர்களது தலைமுடியிலும் நிற மாற்றம் ஏற்படும். கண் பார்வைக் குறைபாடும் இருக்கும். நிலைமை இப்படி இருக்க அதிர்ஷ்டம் என்ற பெயரில் அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

கை மற்றும் விரல்கள் 3,000 முதல் 4,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுவதாகவும். மொத்த உடல் உறுப்புகளும் 50,000 முதல் 70,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுவதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 74 பேர் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் வெளிவராத சம்பவங்கள் ஏராளமாக உள்ளன. இதில் 56 நபர்கள் மட்டும் உயிருடன் உள்ளனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4 வயது குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் தந்தை மற்றும் உறவினரை சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளனர். அப்போது 1,300 டாலருக்கு ஆசைப்பட்டு குழந்தையை விற்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். ஆனாலும், இன்னும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தைக்கு என்ன ஆனது என்பதுகூட இன்னும் தெரியவில்லை.

தான்சான்யாவில் நடக்கும் மனித வேட்டை - அதிர்ஷ்டத்தின் பெயரால் நடக்கும் கொடூரம்!

38 வயது பெண் ஒருவர், தன் கணவனால் இந்தக் கொடுமைக்கு ஆளாகியுள்ளார். 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது, அந்தப் பெண்ணின் இல்லத்துக்கு அவரின் கணவர் மற்றும் நான்கு நபர்கள் வந்துள்ளனர். அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கி அவரது கைகளைத் துண்டித்து, அதை எடுத்துச் சென்றுள்ளனர். தன் அம்மாவின் கையை அப்பா துண்டித்து எடுத்துச் செல்வதை பெட்ரூமில் இருந்த 8 வயது குழந்தை பார்த்துள்ளது. ஒவ்வொரு நாளையும் மிகவும் சவாலாகத்தான் எதிர்கொள்கிறார்கள். உறவுகளே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபடுவதற்கு வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடியே அவர்களை அந்தச் சூழலுக்குத் தள்ளுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஜோசபட் டோர்ன் என்பவர் தான்சான்யா முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். மெயில் ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில். ``நாங்கள் என்ன விதமான போர்க்களத்தில் இருக்கிறோம் எனத் தெரியவில்லை. பெற்றோர்கள் குடும்ப உறுப்பினர்கள் இந்தச் செயல்களில் ஈடுபடும்போது நாங்கள் யாரை நம்புவது. உங்களுடைய எதிரி யார் என்றே தெரியாது. யாருக்கு எதிராக போரிடப்போகிறீர்கள்.

தான்சான்யா
தான்சான்யா

அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் உடல் உறுப்புகளுக்காக வேட்டையாடப்படுகின்றனர். செல்வந்தர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். நாங்கள் ஆபத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையில் உள்ளனர். சிலர், எங்களின் உடல் உறுப்புகளைப் பெற்று வேறு பல இடங்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஏன் இப்படி நடக்கிறது. இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள். எனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்திருக்கிறது. கடந்த 2012-ல் நான் தாக்கப்பட்டேன். இந்த விவகாரத்துக்குப் பின்னால் பெரிய மீன்கள் இருக்கின்றன. நான் பெரிய மீன்கள் எனக் கூறுவது பணபலம் படைத்த பெரிய மனிதர்களை. உடல் உறுப்புகளை மக்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள். அப்படி என்றால் எளிய மனிதர்கள் இதற்குப் பின்னால் இருக்க வாய்ப்பில்லை'' எனக் கூறுகிறார்.