Published:Updated:

எரிமலைக் குழம்பிலிருந்து கட்டுமான கற்கள்... அசத்தும் பிலிப்பைன்ஸ் அரசு!

மக்கள் தங்கள் சுற்றங்களில் கிடக்கும் எரிமலை சாம்பல் திட்டுகளை சேகரித்து வாகனங்களில் அரசின் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு சாம்பல்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஒயிட் சான்ட் போன்றவற்றைக் கொண்டு கட்டுமான கற்களைத் தயாரிக்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் பேரழிவின் பூர்வீகம் என்றும் சொல்லலாம், சூறாவளிகள், நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், சுனாமி, எரிமலை வெடிப்பு என எண்ணிலடங்கா பேராபத்துகளை ஆண்டுதோறும் சந்திக்கும் ஒரு நாடு. எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் சமீபகாலத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் நடந்த வெடிப்பு, ரஷ்யாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 35,000 அடி உயரத்துக்கு வெடித்துச் சிதறிய ஷிவெலுச் எரிமலை, நியூ கினியாவில் வெடித்த உலாவுன் என்று உலகளவில் எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள டால் எரிமலையும் வெடித்துள்ளது.

எரிமலைக் குழம்பிலிருந்து கட்டுமான கற்கள்... அசத்தும் பிலிப்பைன்ஸ் அரசு!
twitter

கடந்த 12-ம் தேதி வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலையால் ஏற்பட்ட சேதங்கள் மிகவும் அதிகம். அந்தச் சேதங்களோடு நிற்காமல், மேலும் சீற்றத்தோடு காணப்படும். அதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து, அந்த இடத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றனர். டால் எரிமலையிலிருந்து வெளியாகும் கனமான சாம்பல் திட்டுகள் சுமார் 9 மைல்கள் வரை பரவுகிறது. எரிமலைக்கு மிக அருகில் இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தும் இதன் விளைவால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்தச் சாம்பல் திட்டுகளால் அந்நாட்டின் இயற்கை வளங்களும் அழிந்து எங்கும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கண் எரிச்சல், சுவாசக் கோளாறுகள் மற்றும் தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

1 கி.மீ உயர சாம்பல் புகை; 6,000 பேரை பலிகொண்ட வரலாறு..பிலிப்பைன்ஸை மீண்டும் பதறவைக்கும் டால் எரிமலை!

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, தற்போது டால் எரிமலையின் சீற்றத்தால் சேதமடைந்த வீடுகளை அந்த எரிமலையின் சாம்பலைக்கொண்டே கற்களைத் தயாரித்து, மீண்டும் கட்டடங்களை எழுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த முயற்சியில் முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 5,000 கற்களை தயாரித்து வருகின்றனர். பிலிப்பைன்ஸ் மேயர் வால்பிரேடோ, அந்நாட்டு மக்களை எரிமலைச் சாம்பல் துகள்களைச் சேகரித்து அரசிடம் அளிக்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி மக்கள் தங்கள் சுற்றங்களில் கிடக்கும் எரிமலைச் சாம்பல் திட்டுகளை சேகரித்து வாகனங்களில் அரசின் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கு சாம்பல்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஒயிட் சான்ட் போன்றவற்றைக் கொண்டு கட்டுமான கற்களைத் தயாரிக்கின்றனர்.

எரிமலைக் குழம்பிலிருந்து கட்டுமான கற்கள்... அசத்தும் பிலிப்பைன்ஸ் அரசு!
twitter

இதுபற்றி பிலிப்பைன்ஸ் மேயர் கூறுகையில், ``எரிமலை குழம்பை மூலப் பொருளாகக் கொண்டு நெகிழி கழிவுகள் மற்றும் ஒயிட் சான்ட் கொண்டு தயாரிக்கப்படும் இவ்வகை கற்கள், பொதுவாக நாம் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தும் களிமண் கற்களை விடவும் திடமானது. பிலிப்பைன்ஸ் மக்கள் இந்த டால் எரிமலையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இது இயற்கையின் செயல். நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றாலும் நாங்கள் எரிமலை சீற்றத்தால் இழந்த எங்கள் வீடுகளை இதன் மூலம் மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக 5,000 கற்களை ஒரு நாளைக்கு நாங்கள் உற்பத்தி செய்து அவற்றைப் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறோம். வரும் நாள்களில் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களும் மிகச் சிறந்த முறையில் இந்தத் திட்டத்துக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு