Published:Updated:

`அதை விடாதே கொன்றுவிடு’‍- நண்பனின் மகிழ்ச்சிக்காக அரியவகை உயிரினத்தைக் கொடூரமாகக் கொன்ற அதிகாரி

Waylon Johncock
Waylon Johncock

ஆஸ்திரேலியாவில் உள்ள வோம்பட் வகை உயிரினத்தை ஒரு காவல் அதிகாரி கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் விலங்குகள், தாவரங்கள், இயற்கை போன்றவற்றுக்கு முழு முதல் எதிரி மனிதன்தான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு, தன் சொந்தத் தேவைக்காகப் பிற உயிரினங்கள் மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகிறது. கொம்பு, தந்தம், தோல் போன்ற பல விலங்குகளின் உடல் உறுப்புகளுக்காகப் பாரபட்சமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்டு வருகின்றன.

Wombat
Wombat
Wikipedia

இதுவரையில் வணிக ரீதியில் விலங்குகள் கொல்லப்பட்டுவந்த நிலையில், தற்போது சில மனிதர்களின் மகிழ்ச்சிக்காக ஓர் உயிரினம் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. சிறிய கால்கள், ஒரு மீட்டர் நீளம், தாவர உண்ணி வகையைச் சேர்ந்த வோம்பட் (Wombat) என்ற உயிரினம் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் வசிக்கக் கூடியவை. பார்ப்பதற்கு முள் இல்லாத முள்ளம்பன்றி போன்ற தோற்றத்துடன் இருக்கும். இந்த விலங்குதான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரெ தீபகற்பத்தில் (Eyre Peninsula) காவல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருபவர் வேலோன் ஜான்காக் (Waylon Johncock). இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தன் நண்பர்களுடன் இணைந்து விடுமுறை நாளை மகிழ்ச்சியாகக் கழித்துள்ளார். அதே நாள் இரவு இவர்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது அந்த வழியாக வோம்பட் உயிரினம் ஒன்று தனியாக வந்துள்ளது.

அதைப் பார்த்த அந்தக் கும்பல் காரை நிறுத்தித் துன்புறுத்துகிறது. பின்னர் காவல் அதிகாரி வேலோன், காரிலிருந்து இறங்கி அந்த விலங்கைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடுகிறார். இதையடுத்து, சாலையில் கிடக்கும் கற்களைக் கொண்டு, வோம்பட்டின் தலையில் பலமாக வீசுகிறார். இரண்டு மூன்று கற்களை அதன் தலையில் வீசியதால் வோம்பட் ஓட முடியாமலும், அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாமலும் தவிக்கிறது. `அதை அடி, அடி, விடாதே கொன்றுவிடு’ என்று காரில் இருக்கும் நண்பர்கள் வேலோனை உற்சாகப்படுத்துகின்றனர்.

70 குண்டுகள்; தந்தத்துக்கான வேட்டை! - கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆண் யானை

அவர், மீண்டும் ஒரு பெரிய கல்லை அதன் மீது வீசுகிறார், வோம்பட் தெறித்துக்கொண்டு ஓடுகிறது. அப்போதும் விடாத அவர்கள், அதைத் துரத்திக்கொண்டு சென்று மீண்டும் கல்லால் தாக்குகிறார். இறுதியில் வோம்பட் ஓட முடியாமல் அங்கேயே சுருண்டு விழுகிறது. பின்னர் தான் ஏதோ சாதித்தது போல இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக தன் நண்பரிடம் ஓடி வருகிறார் வேலோன்.

Video
Video

இந்தச் சம்பவங்கள் அடங்கிய 1.58 விநாடிகள் ஓடும் வீடியோவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது வோம்பட் விழிப்புணர்வு அமைப்பு. அதனுடன், ``மிகவும் கொடுமையான விஷயம். இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று கூறியே நான் சோர்வாகி விட்டேன். இது பொழுதுபோக்கு அல்ல, இதை நிறுத்த வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வோம்பட் அடித்துக் கொல்லப்படும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் போலீஸ் அதிகாரியின் செயலை கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். வீடியோவில் உள்ள வேலோன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

Video
Video

வோம்பட் மிகவும் அரியவகை உயிரினம். அதைப் பாதுகாக்கவும், இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் பல அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த நிலையில், தன் மகிழ்ச்சிக்காக ஒரு ஆரோக்கியமான வோம்பட் கொல்லப்பட்டுள்ளது, வோம்பட் பாதுகாவலர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

பின் செல்ல