அலசல்
அரசியல்
Published:Updated:

பிரதமர் கைது... ராணுவ ஆட்சி.. மக்கள் போராட்டம்! - என்ன நடக்கிறது சூடானில்?

சூடான்
பிரீமியம் ஸ்டோரி
News
சூடான்

முன்னதாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே சூடானில் இடைக்கால ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டது ராணுவம்.

2021-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மியான்மர், சாட், கினியா என மூன்று நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது அந்தந்த நாடுகளின் ராணுவம். இந்தப் பட்டியலில் தற்போது இணைந்திருக்கிறது சூடான். இந்த நான்கு நாடுகளில் மியான்மர் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கின்றன. சூடானில் என்ன பிரச்னை... அங்கு என்ன நடக்கிறது?

30 ஆண்டுகள்... ஒரே பிரதமர்!

வட கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் சூடான், ஆப்பிரிக்கக் கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடு. சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். 1989-ல் சூடான் ராணுவத் தளபதியாகப் பணியாற்றிவந்த ஒமர் அல்-பஷீர், படை திரட்டிக்கொண்டு அப்போதிருந்த பிரதமர் சாதிக் அல்-மஹ்தியை (Sadiq Al-Mahdi) கைதுசெய்தார். தொடர்ந்து, அரசியல் கட்சிகளைக் கலைப்பது, பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளைக் கைதுசெய்வது ஆகிய நடவடிக்கைகளில் இறங்கியது அல்-பஷீரின் படை. இதன் மூலம் நாட்டின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னகத்தே கொண்டுவந்தார் அல்-பஷீர். அக்டோபர் 16, 1993 அன்று சூடான் அதிபராகத் தன்னைத்தானே முடிசூட்டிக்கொண்டார். 1989 முதல் 2019 வரை, 30 ஆண்டுக்காலமாக சூடானின் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார் அவர்.

அல்-பஷீர் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழ, கூடவே நாட்டில் நிலவிய பொருளாதாரப் பிரச்னைகள், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அல்-பஷீரின் ஆட்சிமீது சூடான் நாட்டு மக்களுக்கு அதிருப்தி எழுந்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடிக்க, ராணுவத்தின் உதவியோடு அல்-பஷீரை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தினர் சூடான் மக்கள். ஏப்ரல் 14, 2019 அன்று அல்-பஷீரைக் கைதுசெய்து வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். தொடர்ந்து, ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்டார் அல்-பஷீர்.

அப்தல்லா ஹாம்டோக் - அப்தெல் ஃபட்டாஹ் அல்-புர்கான்
அப்தல்லா ஹாம்டோக் - அப்தெல் ஃபட்டாஹ் அல்-புர்கான்

இடைக்கால ஆட்சி!

இதையடுத்து ராணுவத்தைச் சேர்ந்தவர்களும், குடிமக்களின் பிரதிநிதிகளான தலைவர்களும் இணைந்து இறையாண்மைக்குழு ஒன்றை உருவாக்கி, இடைக்கால ஆட்சியமைத்தனர். 2019 ஆகஸ்ட்டில் சூடானின் இடைக்காலப் பிரதமராக அறிவிக்கப்பட்டார் அப்தல்லா ஹாம்டோக் (Abdalla Hamdok). அப்போதே 2023, ஜூலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

இடைக்கால ஆட்சி தொடங்கிய சில காலம் தொட்டே ராணுவத்துக்கும், ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தலைவர்களுக்கும் நிர்வாகம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. சூடானின் ஆட்சிப் பொறுப்பை முழுவதுமாகக் குடிமக்கள் பிரதிநிதியான தலைவர்களிடம் இன்னும் ஒரு மாத காலத்தில் ஒப்படைக்கவிருந்தது ராணுவம். இந்நிலையில், கடந்த அக்டோபர் 25-ம் தேதி ராணுவத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர், சூடானின் இடைக்காலப் பிரதமர் அப்தல்லா ஹாம்டோக்கைக் கைதுசெய்தனர். அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் சிறைப்பிடித்தது ராணுவம்.

ஆட்சிக் கலைப்பு!

சூடானின் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத் தளபதி அப்தெல் ஃபட்டாஹ் அல்-புர்கான் (Abdel Fattah Al-Burhan), ``ஆளும் இறையாண்மைக்குழுவும், பிரதமர் தலைமையிலான அரசும் கலைக்கப்பட்டுவிட்டன. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சண்டைகள், நிர்வாகத் தவறு காரணமாக ராணுவம் தலையிடவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. 2023 தேர்தல் வரை சூடான், ராணுவ ஆட்சியிலேயே இருக்கும்’’ என்று அறிவித்தார்.

முன்னதாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே சூடானில் இடைக்கால ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டது ராணுவம். அதற்கு எதிராக, ‘பொதுமக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்த’ பிரதமர் அப்தல்லா ஹாம்டோக் மக்களுக்கு அழைப்புவிடுத்தார். அதையேற்று கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராடிவந்தனர்.

மக்கள் போராட்டம்!

இந்த நிலையில், இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்த ராணுவத்துக்கு எதிராக, சூடான் தலைநகர் கார்டோம் (Khartoum) உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்திருக்கிறது. பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்தியிருக்கிறது ராணுவம். போராட்டக்காரர்கள் பலரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டு தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அக்டோபர் 27-ம் தேதிவரை 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 150 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

பிரதமர் கைது... ராணுவ ஆட்சி.. மக்கள் போராட்டம்! - என்ன நடக்கிறது சூடானில்?

உலக நாடுகள் கண்டனம்!

ராணுவத்தின் இந்த முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, சூடானுக்கு வழங்கவிருந்த 700 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிறுத்திவைத்திருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், சீனா உள்ளிட்ட நாடுகளும் சூடான் ராணுவத்துக்குக் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன.

அடுத்து என்ன?

``அல்-பஷீர், தன் ஆட்சிக்காலத்தில் சூடானில் இஸ்லாம் சட்டங்களை அமல்படுத்தி, இஸ்லாமை அரச மதமாக அறிவித்தார். கிறிஸ்தவத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர், தேவாலயங்கள் தகர்க்கப்பட்டன. ஆனால், அப்தல்லா ஹாம்டோக் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு இந்தச் சட்டங்களை ரத்துசெய்து, `அனைவருக்குமான அரசு’ என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. தற்போது மீண்டும் ராணுவ ஆட்சியில் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுமோ என்கிற அச்சம் அங்கு வாழும் சிறுபான்மையினரான கிறிஸ்தவ மக்களிடம் எழுந்திருக்கிறது’’ என்று கவலை தெரிவிக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

``தேர்தலைத் திட்டமிட்டபடியே நடத்துவோம் என்று ராணுவத் தளபதி உறுதியளித்திருந்தாலும், அல்-பஷீர்போல இவரும் தன்னை அதிபராக அறிவித்துக்கொள்வாரோ என்கிற அச்சம் சூடான் மக்களிடம் இருக்கிறது. உலக நாடுகளின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும்’’ என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்குமா சூடான்?