அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், திங்கள்கிழமை அன்று அதிபர் ஜோ பைடனின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் நேரத்தில் அறையைவிட்டு வெளியேறுகையில் அதிபர் ஜோ பைடனிடம், அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தின் பத்திரிகையாளர் ஒருவர், அமெரிக்காவின் பணவீக்கம் குறித்து `பணவீக்கம் என்பது அரசியல் பொறுப்பா?' என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு ``இது மிகப்பெரிய சொத்து, அதிக பணவீக்கம்” என பதிலளித்த ஜோ பைடன் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை மோசமான வார்த்தைகளில் முணுமுணுப்பது போன்று திட்டியுள்ளார். இந்த நிகழ்வு அருகில் படம்பிடித்துக்கொண்டிருந்த நிருபரின் வீடியோ கேமராவிலும் பதிவாகியுள்ளது.

பத்திரிகையாளரை ஜோ பைடன் திட்டிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. ஜோ பைடனின் இந்தச் செயல் மக்கள் மத்தியில் அவர்மீதான மதிப்பைக் குறைக்கும்விதமாக மாறியுள்ளது.
இதற்கிடையே அதிபர் ஜோ பைடன் தரப்பினர், முறையான தரவுகள் இல்லாமல் கேள்வி கேட்டதால், கேள்வியைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, அதிபர் அந்த நிருபரை அழைத்து `தனிப்பட்ட முறையில் உங்களைக் குறிப்பிட்டுப் பேசவில்லை’ என்று பேசியதாகவும் கூறப்படுகிறது.
