Published:Updated:

`ஜோ பிடன் வெற்றி பெறுவதே சீனாவின் பெரும் ஆசை!’ - எதிர்க்கட்சிகளையும் சேர்த்து விமர்சிக்கும் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவதே சீனாவின் ஆசையாக உள்ளது என அந்நாட்டை விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.

உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில்தான் மிக அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,91,991- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94,994-ஆகவும் உள்ளது. வைரஸால் அமெரிக்கா உட்பட மொத்த உலகமும் கடுமையான விளைவுகளைச் சந்தித்திருப்பதற்கு சீனா மட்டுமே காரணம் என ஆரம்பம் முதல் அந்நாட்டை விமர்சித்து வருகிறார் அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

அந்த வகையில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துவருகிறார். அதன் வரிசையில் தற்போது, ``சீனாவின் செய்தி தொடர்பாளர்கள் அந்நாடு சார்பாக மிகவும் முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள். தங்கள் நாட்டினால் உலகம் முழுவதும் பரவியிருக்கும் வேதனைகளையும் உயிரிழப்புகளையும் திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். வைரஸ் பரவல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது தவறான பிரசாரம் செய்கிறார்கள். இது பெரும் அவமானம். இவை அனைத்தும் மேல் (சீன அதிபர்) இருந்து வருகிறது. அவர்கள் வைரஸ் பரவாமல் எளிதில் தடுத்திருக்கலாம் ஆனால், அவ்வாறு செய்யவில்லை” என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு விமர்சித்துள்ளார் ட்ரம்ப்.

`சீனா நினைத்திருந்தால் கொரோனாவை அழித்திருக்க முடியும், ஆனால்..!’ - சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், `சீனா ஒரு பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஏனெனில் அவர்கள், தூங்கி வழியும் ஜோ பிடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்களால் அமெரிக்காவை எளிதாக துண்டிக்க முடியும். நான் பதவிக்கு வருவதற்கு முன்பு வரை பல ஆண்டுகளாக சீனா இதைதான் செய்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் பரவல் விவகாரத்தில் ட்ரம்ப் மற்றும் சீனாவுக்கு இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது.

இது ஒரு புறம் என்றால் அமெரிக்காவில் வைரஸ் பரவல் பற்றிய ட்ரம்பின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. `கொரோனா பரவலில் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. ஏனெனில் நாங்கள் மற்றவர்களைவிட மிக அதிகமாகச் சோதனை நடத்துகிறோம். எனவே, எங்களுக்கு நிறைய கேஸ்கள் பதிவாகின்றன. நான் இதை ஒரு மோசமான விஷயமாகப் பார்க்கவில்லை. எங்களிடம் வைரஸ் சோதனை சிறப்பாக இருப்பதால் பாதிப்பு அதிகரிப்பை நல்ல விஷயமாகவே கருதுகிறேன். இதை ஒரு கௌரவமாகவே நினைக்கிறேன். வைரஸ் சோதனை போன்ற பல பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்’ எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் ட்ரம்ப்.

`உங்கள் திறமையின்மையாலேயே இவ்வளவு மரணங்கள்!’ - தொடரும் அமெரிக்கா - சீனா வார்த்தைப் போர்
அடுத்த கட்டுரைக்கு