Published:Updated:

`மனைவி, குழந்தையால் இந்த முடிவெடுத்திருப்பார்?’ - ஹாரியின் முடிவுக்குக் காரணம் கூறும் நண்பர்

ஹாரி -  மேகன்
ஹாரி - மேகன்

தான் சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் தன் குடும்பத்துக்காகவுமே ஹாரி இந்த முடிவை எடுத்திருப்பார் என அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் என்னதான் கட்சிகளின் ஆட்சி நடந்தாலும் அரசு எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகளிலும் அரச குடும்பத்தின் பங்கு இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாகவே கருதப்படுகிறார்கள். இந்தச் சூழலில் இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

ஹாரி -  மேகன்
ஹாரி - மேகன்

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருந்த பதிவில், ``நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளோம். சுதந்திரமாக வேலை செய்ய நினைக்கிறோம். அதேநேரம் இங்கிலாந்து அரசுக்கும் ராணிக்கும் தேவையான எங்களது உதவிகள் தொடரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்” என்று குறிப்பிட்டிருந்தனர். இவர்களின் திடீர் முடிவு இங்கிலாந்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

`ஹாரியின் முடிவு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மாறுபட்ட சூழலில் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஆசையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இது நிறைய சிக்கலைத் தரும். இதைச் செயல்படுத்துவதற்கு நிறைய காலம் எடுக்கும்' என பக்கிங்காம் அரச குடும்பம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அரச குடும்பம்
அரச குடும்பம்

ஹாரி - மேகன் தம்பதி எடுத்த இந்த முக்கிய முடிவு குறித்து இங்கிலாந்து ராணியிடம்கூட விவாதிக்கவில்லை, அவர்கள் இருவரும் கனடாவில் தங்கள் வாழ்வைத் தொடரவுள்ளனர் போன்ற பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே இளவரசி மேகன் கனடாவுக்குச் சென்றுவிட்டார். தற்போது அவருக்கும் அவரின் மகனும் மட்டும் கனடாவில் உள்ளனர். இளவரசர் ஹாரி இங்கிலாந்தில் உள்ளார்.

இதையடுத்து நாளை இங்கிலாந்து ராணி, ஹாரி விவகாரம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராணி எலிசபெத், ஹாரியின் தந்தை சார்லஸ், அவரின் அண்ணன் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். கான்ஃபரன்ஸ் கால் மூலம் மேகனும் பங்கேற்கவுள்ளார்.

`அரச குடும்பத்திலிருந்து வெளியேறுகிறோம்!’ - இங்கிலாந்து ராணிக்கு அதிர்ச்சி கொடுத்த இளவரசர்

இவர்கள் அரச குடும்பத்தை விட்டு விலக இதுவே காரணமாக இருக்கும் என இந்தத் தம்பதியின் நண்பர் சால்மர்ஸ் என்பவர் பிபிசி ஊடகத்தின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இளவரசர் ஹாரி இங்கிலாந்து ராட்டின் ராணுவத்தில் பயிற்சி பெற்றபோது சால்மர்ஸும் ஹாரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

ஹாரியின் முடிவு குறித்துப் பேசியுள்ள சால்மர்ஸ், ``ஹாரி எடுத்த முடிவைப் பார்க்கும்போது அவருடைய குடும்பத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். ஏனெனில், அதுதான் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு தந்தையாக ஒரு கணவனாக இந்த முடிவை எடுத்திருப்பார் ஹாரி.

ஹாரி -  மேகன்
ஹாரி - மேகன்

அனைத்து தந்தை மற்றும் கணவருக்கும் தன் குழந்தை, மனைவியைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பார்கள். அதிலும் ஹாரி மிகுந்த கொள்கை உடைய ஒரு நபர். மீடியாக்கள் அவரைப் பற்றி விவாதிப்பதை ஹாரி விரும்பவில்லை, பிற்காலத்தில் தன் மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் தான் அரச குடும்பத்தில் உள்ள காரணத்தாலேயே நடப்பதாக ஹாரி கருதுகிறார். அதனால்தான் குடும்பத்திலிருந்தும் மீடியாக்களிடமிருந்தும் தன்னை விலக்கி சராசரி அப்பாவாக, கணவராக வாழ முடிவெடுத்திருப்பார்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஒரு இங்கிலாந்து ஊடகம், ஹாரியின் மனைவி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்தை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிட்ட காரணத்தினால் அந்த நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் ஹாரி.

ஹாரி -  மேகன்
ஹாரி - மேகன்

``சில ஊடகங்களின் செயல்பாடுகள் எங்களை மனதளவில் கொடுமைப்படுத்துவதாக உள்ளது. என் மனைவியின் தந்தை உட்பட நாங்கள் எங்குச் சென்றாலும் ஊடகங்கள் அதைச் செய்திகளாக மாற்றிவிடுகின்றன. ஊடகங்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக நாங்கள் எங்கள் நிம்மதியை இழந்துகொண்டிருக்கிறோம். ஊடகங்கள் பல வதந்திகளைக் கிளம்பியதால்தான், நான் என் அம்மா டயானாவை இழந்தேன். அரச குடும்ப வாரிசாக இல்லாமல், தனிப்பட்ட ஒரு மனிதனாக இருக்க விரும்புகிறேன்'’ என ஹாரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு