எட்வர்டு ஜோசப் ஸ்னோடென் (39) அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் (தேசியப் பாதுகாப்பு முகமை) உளவுத்துறையில் ஊழியராகவும், ஒப்பந்ததாரராகவும் பணியாற்றிவந்த இவர், 2013 -ம் ஆண்டு பல ரகசியத் தகவல்களை வெளியிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டின் வழக்குகளிலிருந்து தப்பிக்க 2013-ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் வசித்துவருகிறார்.

இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமா, ஸ்னோடென்னுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
ஆஸ்திரியா, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சமடைய உதவி கோரினார் எட்வர்டு ஸ்னோடென். அனைத்து நாடுகளும் அவரின் கோரிக்கையை நிராகரித்தன. பின்னர்தான், ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.
2020-ம் ஆண்டில், கொரோனா தொற்று காரணமாகவும், மூடப்பட்ட எல்லைகளின் காரணமாகவும் தன் வருங்கால மகன் பிரிக்கப்படக் கூடாது என்பதற்காக, தானும் தன்னுடைய கர்ப்பமாக இருந்த மனைவியும் ரஷ்யக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதாக ஸ்னோடென் கூறினார். அதே ஆண்டு ரஷ்யா, நிரந்தர தங்கும் உரிமையை வழங்கியது. இதுவே தற்போது அவருக்கு ரஷ்யக் குடியுரிமை பெற வழிவகுத்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ( 26.09.2022) தற்போது அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறார்.
யார் இந்த எட்வர்டு ஸ்னோடென்?
நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக இராக் போரில் போரிட வேண்டிய கடமையை உணர்ந்து ஸ்னோடென் மே மாதம், 2004-ல் அமெரிக்காவின் ராணுவத்தில் சேர்ந்தார்.

பின்னர் 2006-ம் ஆண்டு உளவுத்துறை நிறுவனங்களை மையமாகக்கொண்ட வேலை முகாமில் கலந்துகொண்டு, சிஐஏ-வில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். ஏஜென்சி அவரை வர்ஜீனியாவின் லாங்கிலி நகரிலுள்ள சிஐஏ தலைமையகத்தில் உலகளாவிய தகவல் தொடர்புப் பிரிவில் பணியில் நியமித்தது. 2009-ல் ஸ்னோடென் பல அரசாங்க நிறுவனங்களுக்கான கணினி அமைப்புகளை நிர்வகிக்கும் டெல் (Dell) நிறுவனத்துக்கு ஒப்பந்ததாரராகப் பணிபுரியத் தொடங்கினார். அதன் பின்னர், அதாவது 2013-ம் ஆண்டு பல ரகசியத் தகவல்களை அவர் கசியவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.