Published:Updated:

`எஸ்டேட் மீட்டிங்; நேருக்கு நேர் விவாதம்; பட்டம் இழப்பு!'- ஹாரியின் முடிவுக்கு ராணி சம்மதம்!

ஹாரி -மேகன்
ஹாரி -மேகன்

`இவை, எனது குடும்பத்தினருக்கு தீர்க்கவேண்டிய சிக்கலான விஷயங்கள். இன்னும் சில வேலைகள் செய்யப்பட உள்ளன'.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளனர். ``சுதந்திரமாக வேலை செய்ய நினைக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம். இதன் காரணமாகவே நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளோம்” என்று ஹாரி-மேகன் தம்பதி விளக்கம் கொடுத்திருந்தனர். இவர்களின் `திடீர்' அறிவிப்பு, இங்கிலாந்து அரச குடும்பத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹாரி- மேகன்
ஹாரி- மேகன்

ஹாரி - மேகன் முடிவு தொடர்பாக இங்கிலாந்து ராணி எலிசபெத் குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ராணியின் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் இந்த மீட்டிங் நடந்துள்ளது. ராணி எலிசபெத், இளவரசர்கள் சார்லஸ், வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, ஹாரியிடம் ராணி நேருக்கு நேர் விவாதம் நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விவாதத்தின் முடிவில் ஹாரி - மேகன் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் ராணி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எனது பேரன் மற்றும் அவரது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து இன்று எனது குடும்பம் மிகவும் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தியது.

`தனியுரிமை; மேகனின் நட்பு; கனடா கலாசாரம்!’- இங்கிலாந்து இளவரசரின் வட அமெரிக்கப் பின்னணி?

ஓர் இளம் குடும்பமாக ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க ஹாரி மற்றும் மேகனின் விருப்பத்தை நானும் எனது குடும்பமும் முழுமையாக ஆதரிக்கிறோம். அரச குடும்பத்துக்காக முழுநேரம் உழைக்கும் உறுப்பினர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பியிருந்தாலும், ஒரு குடும்பமாக மீதமுள்ள பகுதியை இன்னும் சுதந்திரமாக வாழ விரும்பும் அவர்களின் விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம், புரிந்துகொள்கிறோம்.

ஹாரி-மேகன், தங்கள் புதிய வாழ்க்கையில் பொது நிதியை விரும்புவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, அவர்கள் தங்களது மாற்றத்துக்கான கால அவகாசத்தை கனடா மற்றும் இங்கிலாந்தில் செலவிடுவார்கள்.

இங்கிலாந்து ராணி
இங்கிலாந்து ராணி

இதில், எனது குடும்பத்தினருக்குத் தீர்க்கவேண்டிய சிக்கலான விஷயங்கள், இன்னும் சில வேலைகள் செய்யப்பட உள்ளன. ஆனால், வரவிருக்கும் நாள்களில் இறுதி முடிவுகளை எட்டுமாறு நான் கேட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ஹாரியின் முடிவுக்கு ராணி சம்மதம் தெரிவித்தாலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையைவைத்து தற்போது விவாதம் தொடங்கியுள்ளது.

மேகனை ஹாரி திருமணம் செய்தபிறகு, அவர்களுக்கு `The Duke and Duchess of Sussex' என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார் ராணி. இதுநாள் வரை இந்தப் பட்டத்தில் இருவரும் அழைக்கப்பட்டுவந்தனர். இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தப் பட்டத்தைத் தவிர்த்துள்ளார் ராணி.

`மனைவி, குழந்தையால் இந்த முடிவெடுத்திருப்பார்?’ - ஹாரியின் முடிவுக்குக் காரணம் கூறும் நண்பர்

அரச குடும்பத்தை விட்டு வெளியேற எடுத்த முடிவின் காரணமாகவே, அவர்களின் பட்டத்தை ராணி தவிர்த்துள்ளார் என்று விவாதம் நடந்துவருகிறது. ஆனால், இளவரசர் ஹாரிக்கு இந்தப் பட்டத்தை விட்டுக்கொடுப்பதில் மனமில்லை என்றும் இங்கிலாந்து ஊடகங்கள் கூறியுள்ளன. கனடாவில் தங்களுக்கென நிதி ஆதாரங்கள் திரட்டும்வரை இந்தப் பட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்று ஹாரி விரும்பியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டத்தின் மூலம், இங்கிலாந்து அரச குடும்ப டிரஸ்ட்டான காமன்வெல்த் டிரஸ்ட்டில் இருக்கும் சொத்து மதிப்பில் 400 மில்லியன் யூரோ சொத்து இளவரசர் ஹாரியின் பங்காக இருக்கும்.

`எஸ்டேட் மீட்டிங்; நேருக்கு நேர் விவாதம்; பட்டம் இழப்பு!'- ஹாரியின் முடிவுக்கு ராணி சம்மதம்!

இதை ஆதாரமாக வைத்து, கனடாவில் வணிகம் மேற்கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் பட்டத்தை இன்னும் சில காலங்கள் வைத்திருக்க வேண்டும் என்று ஹாரி விரும்பியதாக கூறப்படுகிறது. இதை, நேற்று நடந்த கூட்டத்தில் ஹாரி சொன்னபோது, `இது அரச குடும்பத்தை சேதப்படுத்தாது என்பதற்கான உத்தரவாதங்களை ராணி கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரச குடும்பத்திலிருந்து வெளியேறும் ஹாரியின் முடிவு தொடர்பாக அதிகம் வருத்தப்படுபவர், அவரது தந்தை சார்லஸ்தான் என்று கூறப்பட்டுள்ளது.

27 லட்ச ரூபாய்க்கு அன்பளிப்புகள்...அரச குடும்பத்துக்கு ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!
அடுத்த கட்டுரைக்கு