Published:Updated:

‘ஊரடங்கை மதிக்கின்றனர் இங்கிலாந்து மக்கள்!’ -வாசகரின் ரிப்போர்ட்

இங்கிலாந்து பிரதம மந்திரி  'போரிஸ் ஜான்சன்'
இங்கிலாந்து பிரதம மந்திரி 'போரிஸ் ஜான்சன்'

சுதந்திரக் காற்றை சுவாசித்துவந்த மக்களை, ஒட்டுமொத்தமாக முகக் கவசம் அணியவைத்துவிட்டது இந்த கொரோனா என்னும் அரக்கன். கொரானா வைரஸ் குறித்து, இங்கிலாந்திலிருந்து நமது ‘விகடன் வாசகர்’ என்.சுபாஷினி அங்கு நடக்கும் நிலவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து சுபாஷினி, ‘கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் இங்கிலாந்தையும் ஒரு வழியாக்கிவிட்டது. குறிப்பாக, இங்கிலாந்து நாட்டின் பிரதம மந்திரியான போரிஸ் ஜான்சன், அந்நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் நாட்டின் பலம் பொருந்தியவர்களையும் ஒரு கை பார்த்துவிட்டது. கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவே அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இந்நிலை இப்படியே தொடர்ந்தால், பிரதமருக்குப் பதிலாக அவரது பணியை, வெளியுறவுத்துறை செயலாளர் ‘டோம்னிக் ராப்’ தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

‘ஊரடங்கை மதிக்கின்றனர் இங்கிலாந்து மக்கள்!’ -வாசகரின் ரிப்போர்ட்

‘கம்யூனிட்டி ஸ்பேர்ட்’ என்று சொல்லக்கூடிய நோய்த் தொற்றின் நிலை, அதீத விகிதத்தில் இங்கிலாந்தில் பரவியுள்ளது. தற்போது, ஒரு நாளைக்குக் குறைந்தது 1,000 நபர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். கொரோனா வைரஸ் முதன்மை நிலை பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்தில் தொடங்கியது. ஒற்றை இலக்க எண்களில், கொஞ்சம் கொஞ்சமாக ஒன்னரை மாதத்தின் இறுதி நிலையில் தற்போது 20,000 பேருக்கு கொரோனா தோற்று இருக்கிறது. தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 2000-க்கும் மேல் தாண்டிவிட்டது.

‘நோய்த் தொற்றின் ஆரம்ப நிலையிலேயே, இங்கிலாந்து அரசு துரிதமான நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கவில்லை. மார்ச் 20-ம் தேதி முதல் நர்சரி பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இருப்பினும் ‘கீ வொர்க்கர்ஸ்’ என்று சொல்லக்கூடிய NHS staff (மருத்துவப் பணியாளர்கள்), காவல்துறை, அத்தியாவசிய பொருள்கள் விநியோக ஓட்டுநர்கள் (குழந்தைகள் கவனிக்க ஆள் இல்லாதவர்களுக்கு) மற்றும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு மட்டும் பாதுகாப்புடன் பள்ளிகள் . இலவச மதிய உணவுடன் செயல்படுகிறது.

சூப்பர் மார்கெட்டில் இடைவெளி விட்டு நிற்கும் இங்கிலாந்து மக்கள்
சூப்பர் மார்கெட்டில் இடைவெளி விட்டு நிற்கும் இங்கிலாந்து மக்கள்

இங்கிலாந்தில் அதிகமாக நோய் பரவும் இடமாக மத்திய லண்டன் நகரம் இருக்கிறது. அங்குதான் மக்கள் அதிக அளவில் ஒன்றுகூடுகிறனர். இதன் பொருட்டு சென்ற வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மற்றும் உடற்பயிற்சி செய்ய மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

கொரோனா தாக்குதலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து செயல்களையும் முன்னெடுக்கிறது இங்கிலாந்து அரசாங்கம். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டுமென அன்போடு வலியுறுத்தியுள்ளது. அதேபோன்று, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், புற்று நோயாளிகள், மற்றும் பிற நோயாளிகள் யாரும் 12 வாரங்களுக்கு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இடம் பற்றாக்குறையால், தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. பிற அரசு வளாகங்களையும் மருத்துவ மனைகளாக மாற்றிவருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்து பன்னிரண்டு வாரங்களில் கோவிட்-19னை கட்டுப்படுத்திவிடலாம் என்று மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துவருகிறார்.

அதோடு, நோய்த் தொற்றை எப்படிக் கையாள்வது என்று ட்விட்டரில் சில வழிமுறைகளைப் பதிவிட்டுவருகிறார். பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு, இங்கிலாந்து மக்களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் ஊரடங்கைக் கடைப்பிடித்துவருகின்றனர். அதேபோன்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர். மொத்தத்தில் ஊரடங்கை மதிக்கின்றனர், இங்கிலாந்து மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு