Published:Updated:

`கொரோனா அலட்சியத்தின் விளைவு; ஊரடங்கிய பிரான்ஸ்!' - வாசகரின் நேரடி அனுபவம் #MyVikatan

Representational Image
Representational Image

கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து பிரான்ஸ் முழுவதும் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பிரான்ஸில் முதல்கட்ட ஊரடங்கு உத்தரவின்போது பல்பொருள் அங்காடிகள், மருந்துக்கடைகள் போன்ற அத்யாவசிய தேவைக்கான வியாபார நிறுவனங்கள் மட்டுமே இயங்கின. வேலைக்குச் செல்பவர்கள் அவர்களின் நிறுவனம் அளிக்கும் சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தவிர, அத்யாவசியப் பொருள்கள் வாங்குதல், மருத்துவ தேவை, எதிர்பாராத குடும்பச்சூழல் மற்றும் வசிப்பிடத்துக்கு அருகில் தனியே உடற்பயிற்சி செய்தல் ஆகிய காரணங்களுக்கு மட்டும், அதற்கென அரசு வெளியிட்டிருக்கும் பாரத்தில் காரணத்தைப் பூர்த்தி செய்து அல்லது வெற்றுத்தாளில் எழுதி கையொப்பமிட்டு, அடையாள அட்டையுடன்தான் வெளிவர முடியும். சோதனையின்போது சான்றிதழ் இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் 138 யூரோ டாலர்கள் அபராதம்!

Representational Image
Representational Image
Credits : REUTERS/Benoit Tessier

தீவிரவாத தாக்குதல்களின்போதுகூட பிரான்ஸ் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவில்லை. மக்களும் பயமின்றி சகஜவாழ்க்கையை நிலைநாட்டினார்கள். அரசின் கணிப்பையும் மீறி சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறையவில்லை. ஆனால், கொரோனா கிருமி உலகிலேயே மிக அதிகமாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாட்டின் வீதிகளை வெறிச்சோட வைத்துவிட்டது. புகழ்பெற்ற லூவர் மியூசியம் முதல்முறையாகத் தன் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டது. கொட்டும் பனியிலும் கூட்டம் மொய்க்கும் ஈபிள் கோபுரமும் உலகின் மிக அழகிய சதுக்கங்களில் ஒன்று எனப்போற்றப்படும் சாம்ஸ் எலிசே சதுக்கமும் வெறிச்சோடிவிட்டன.

ஹிட்லரின் நாஜி ராணுவ முற்றுகைக்குப் பிறகு, பாரீஸ் நகர மக்களின் சுதந்திரத்தை கொரோனா கிருமி சிறைப்படுத்திவிட்டது.

ரடங்கு சட்டத்தை அமல்படுத்த நேரிட்ட சூழலை விளக்க தொலைக்காட்சியில் பேசிய பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கொரோனா தொற்றை மனிதனுக்கும் கிருமிக்குமான சுகாதாரப்போர் எனக்கூறி, துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தால் நாடு முழுவதும் போர்க்கால அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.

தொற்றுபரவலைத் தடுக்கும் முயற்சிகளுடன், இயங்காத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அரசின் சம்பள உதவி, கடன் மற்றும் மின் கட்டண தள்ளுபடி எனப் பொருளாதார பாதிப்பை சரிக்கட்டும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

Representational Image
Representational Image

இத்தாலிய மருத்துவமனைகள் மிகவேகமாக நிரம்பியதால் ஏற்பட்டது போன்ற சிக்கல்களைத் தவிர்க்கும் முயற்சியாக ராணுவத்தின் மருத்துவப் பிரிவும் அழைக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் போர்க்கால உடனடி மருத்துவமனை ஒன்றினைக் கட்டமைக்கவும், தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளைப் பல்வேறு மருத்துவ மையங்களுக்கு விமானம் மூலமாகவும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கொண்டு செல்வதிலும் முதல்கட்டமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தினர், வரும் நாள்களில் மக்களைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கும் கோரப்படலாம்.

ப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நிகழும் பேரிடர்களும் தொற்றுநோய்களும் தங்களைப் பெரிதாக ஒன்றும் பாதித்துவிடாது என்பது ஐரோப்பியர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. அமெரிக்காவின் நிகழ்வுகளுக்கு அடுத்து வீட்டு பிரச்னைகளாக முக்கியத்துவம் கொடுப்பவர்கள், ஆப்பிரிக்க ஆசிய நிகழ்வுகளுக்கு செய்திகளின் கடைசிப் பக்கத்தில்தான் இடம் கொடுப்பார்கள்.

Representational Image
Representational Image

சீனாவில் நிகழ்ந்த முதல்கட்ட பாதிப்பின்போது, சீனாவிலிருந்து பாரீஸுக்கு வந்த முதியவரின் மூலம் பிரான்சின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து ஐரோப்பிய யூனியனின் மற்ற நாடுகளிலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டாலும், ஐரோப்பா முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவிரைவாகப் பரவியதற்கு முக்கிய காரணமாக விளங்கியது இத்தாலிதான்.

பெருந்தொற்று மூன்று கட்டங்களாகப் பரவும். ஒரு தனி மனிதனில் தொடங்கும் பாதிப்பு முதல் கட்டம். அவன் நெருங்கி பழகுபவர்களிடம் தொற்று பரவி, அவர்களின் மூலம் மேன்மேலும் பரவத்தொடங்குவது இரண்டாம் கட்டம். ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குடும்பத்திலோ, பணியிடத்திலோ நெருங்கியவர்களிடம் நோய் தொற்றும் இரண்டாம் நிலைக்கு ஆங்கிலத்தில் கிளஸ்டர் எனப் பெயர்.

முதலில் பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே அவரால் ஒரு சிலராவது பாதிக்கப்பட்டு இரண்டாம் கட்டமான கிளஸ்டர் ஏற்பட்டுவிடும். கிளஸ்டர் சூழலில், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதுடன், அவர்கள் நெருங்கிப் பழகியவர்களையும் கண்டுபிடித்து, இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துவதின் மூலம் நோய்ப் பரவலை தாமதப்படுத்தலாம். இன்குபேஷன் எனப்படும் கிருமி அடைகாக்கும் காலம் 14 நாள்கள் என்பதால்தான் இந்த இரண்டுவார தனிமை. சீனாவின் வுகான் நகரம் இரும்புக்கரத்துடன் தனிமைப்படுத்தப்பட்டதின் காரணம் இதுதான்.

Representational Image
Representational Image
Credits : boston globe

தீவிரமான கண்காணிப்புடன் செயல்பட்டாலும்கூட, இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் நிலைக்குச் செல்வதை தாமதப்படுத்த முடியுமே தவிர, நிறுத்த முடியாது. மூன்றாம் நிலையில் கிளஸ்டர் குழுக்களின் எண்ணிக்கை மென்மேலும் பெருகி, தொடர்கண்காணிப்பு சாத்தியமற்றதாகிவிடும். இந்த மூன்றாம் நிலையில் சுகாதார அமைப்புகளின் முழுக் கவனமும் தீவிரமாய் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் திரும்பிவிடும். பெருநோய்ப் பரவலை எந்த அளவுக்கு இரண்டாம் நிலையில் தாமதப்படுத்த முடிகிறதோ அந்த அளவுக்கு மருத்துவமனைகள் நோயாளிகளால் வேகமாய் நிரம்புவதை தாமதப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தலாம்.

இத்தாலி நாடு இரண்டாம் கட்ட கிளஸ்டர் சூழலில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அலட்சியமாக மேற்கொண்டதுதான் மிகவேகமான கொரோனா பரவலுக்கு காரணம். இதற்கு அரசு மற்றும் மக்களின் அலட்சியத்துடன் அரசியல் நிலைப்பாடும் ஒரு காரணம். கம்யூனிச நாடான சீனாவில் மக்களின் கட்டுப்பாடு அதிகம். அங்கு அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் இதற்கு நேர் மாற்றம். இத்தாலியில் கொரோனாவின் முதல் அறிகுறிகளை மக்களும் சரி, அரசும் சரி, ஒவ்வொரு குளிர்காலத்திலும் பரவும் ப்ளூ ஜுரமாகவே பாவித்தார்கள். கொரோனா தாக்கம் உறுதியான நிலையிலும், அது வேகமாகப் பரவிய நாட்டின் வடபகுதியிலிருந்து பயணிப்பவர்களைக் கட்டுப்படுத்த எந்த தீவிரமான முயற்சியும் எடுக்கப்படவில்லை.

Representational Image
Representational Image

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பிரான்ஸ் நாட்டின் நடவடிக்கைகள் அமைந்தாலும், பெருநோய் பரவல் தடுப்புக்கு எந்த ஐரோப்பிய நாடுமே தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனம். இப்படியான ஒரு சூழல் மூன்றே மாதங்களில் உலகம் முழுமைக்கும் ஏற்படும் அபாயம் புதிது என்றாலும், பெருநோய் பரவல் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே சாத்தியம் என்ற மேல்நாட்டு அலட்சியமும் காரணம்.

வளரும் நாடுகளிடம் சந்தையைப் பறிகொடுத்தது முதல் நிதி வெட்டு, தனியார்மயமாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் முகமூடிகள் முதல் செயற்கை சுவாச உபகாரணங்கள் வரை அனைத்துக்கும் தட்டுப்பாடு. இத்துடன் அரசியல் கட்சிகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகள்.

து எப்படி போனாலும் பேரிடர்களின் போதெல்லாம் வேற்றுமைகள் மறந்து தோள் கொடுப்பது சராசரி மக்கள்தான். அந்தச் சமயங்களில்தான் மனிதம் மலரும். இன்று பிரான்ஸிலும் மனிதம் மலரும் அற்புத தருணங்களைத் தரிசிக்க முடிகிறது.

தங்களின் குடும்பங்களை மறந்து, நோய்த்தொற்று அபாயத்தை புறந்தள்ளி, இரவுபகல் பாராமல் சேவை புரியும் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய ஒற்றை ட்விட்டர் கோரிக்கை வலுப்பெற்று, ஒவ்வொரு நாளும் மாலை 8 மணிக்கு நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களிலிருந்து கரகோஷம் எழுப்புகின்றனர். மருத்துவப் பணிக்கு செல்பவர்களின் குழந்தைகளை அண்டைவீட்டினர் கவனித்துக் கொள்கிறார்கள்.

ஆடை மற்றும் தோல்பொருள் தயாரிப்பாளர்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டு முகமூடிகளைத் தயாரித்து உள்ளூர் மருத்துவமனைகளுக்கும் சேவை மையங்களுக்கும் இலவசமாக அனுப்புகின்றனர். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களும் ராணுவமும் தங்களிடமுள்ள முகமூடி சேமிப்பை மருத்துவமனைகளுக்கும் சேவை மையங்களுக்கும் கொடுத்து வருகின்றன.

Representational Image
Representational Image

தொழில்துறையில் முன்னேறிய ஒரு வல்லரசு நாட்டின் இயந்திர வாழ்க்கை ஸ்தம்பித்ததால் மனிதம் பூக்கும் தருணங்களைக் காண நேரம் கிடைத்திருக்கிறது.

ரண்டாம் உலகப்போர் நிகழ்ந்ததே மூன்றாம் உலகப்போர் இன்னும் தோன்றாமல் இருப்பதற்கான காரணம் என்பார்கள். இந்த கிருமிப்போர் வந்தது போலவே மறைந்து, இதன் மூலம் கற்ற பாடங்களால் மற்றொரு பெருந்தொற்று தோன்றாமல் தவிர்க்கும் வழிமுறைகள் மனிதகுலத்துக்கு கைகூட பிரார்த்திப்போம்.

- காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு