Published:Updated:

அமெரிக்கா: `இராக் - சிரியா எல்லையில் வான்வழித் தாக்குதல்’ - ஜோ பைடன் அதிரடிக்குக் காரணம் என்ன?!

பைடன்
பைடன் ( Evan Vucci )

இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவப்படையினர் மீது ஆளில்லா ட்ரோன்கள் மூலம் இரான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இராக் எல்லையில் இருக்கும் அமெரிக்க ராணுவப் படையினர் மீது, இரான் பயங்கரவாத அமைப்புகள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரான் மீது தாக்குதல் நடத்த அதிரடியாக உத்தரவிட்டார். அதன் பேரில், இராக் - சிரியா எல்லைப்பகுதியில் இருக்கும் இரான் பயங்கரவாதிகளின் பகுதிகளில் அமெரிக்க ராணுவப்படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் அமெரிக்கா - இரான் இடையே பரபரப்பு நிலவியுள்ளது.

நடந்து முடிந்த டொனால்டு ட்ரம்ப் ஆட்சியில், அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கைகளில் சரமாரியாக அடிபட்டது. சீனா உள்ளிட்ட நாடுகள்மீது ட்ரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்தார். பிறகு, ஆட்சிமாற்றத்தின்போது அமெரிக்கா - சீனா இடையில் ஏனோ முன்னேற்றங்கள் தென்பட்டாலும், கொரோனா விவகாரங்களில் அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்த வண்ணமே உள்ளன. அதேபோல்தான் இரான் விவகாரமும். ஆரம்பகாலம் முதலே, அமெரிக்கா - இரான் இடையிலான தீராப் பகையானது புகைந்துவருகிறது. கடந்த ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது இரான் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்

அதைத் தொடர்ந்து, தற்போது ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்ற பின்பு இரான் இடையிலான அணு ஆயுதக் கொள்கைகளில் சுமுகமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இருநாட்டினருக்கும் இடையில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவப்படையினர் மீது ஆளில்லா ட்ரோன்கள் மூலம் இரான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இரான் பயங்கரவாத அமைப்புகளின் மீது தாக்குதல் நடத்த பென்டகனுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். அதையடுத்து நேற்று இராக் - சிரியா எல்லையில் இருக்கும் பயங்கரவாதிகளின் ஆயுதக் கூடங்களிலும், முகாம்களிலும் அமெரிக்க ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த F15 மற்றும் F 16 ரக போர் விமானங்கள் இராக் - சிரியா எல்லைப்பகுதிகளில் பதுங்கியிருந்த இரான் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதும், அவர்களின் ஆயுதக் கிடங்குகளின் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

ஜோ பைடன்
ஜோ பைடன்

இது தொடர்பாக பேசியுள்ள பென்டகனின் செய்தித்தொடர்பாளரான ஜான் கிர்பி, “அமெரிக்க ராணுவத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இரானிடமிருந்து தற்காத்துகொள்வதற்கு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நாட்டின் பாதுகாப்புக்காக, அதிபரின் உத்தரவின்படி இது நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு இது இரான் மீது நடத்தப்படும் இரண்டாம் கட்ட தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். நாட்டின் இறையாண்மைக்கும், நாட்டு மக்களுக்கும் இதன் மூலம் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்கள் அதிபர் ஜோ பைடனிடம் கேள்வியெழுப்பியபோது, அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு