Published:Updated:

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது தொடரும் தடைகள்: உதவிகள் நிறுத்தப்படும் என ஐ.நா. எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் மனித உரிமைக்காக போராடும் பெண்கள்

தாலிபான்களின் உத்தரவால் கிட்டத்தட்ட தங்களுடைய அனைத்து வேலைகளையும் தன்னார்வ அமைப்புகள் நிறுத்திவிட்டன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது தொடரும் தடைகள்: உதவிகள் நிறுத்தப்படும் என ஐ.நா. எச்சரிக்கை!

தாலிபான்களின் உத்தரவால் கிட்டத்தட்ட தங்களுடைய அனைத்து வேலைகளையும் தன்னார்வ அமைப்புகள் நிறுத்திவிட்டன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Published:Updated:
ஆப்கானிஸ்தானில் மனித உரிமைக்காக போராடும் பெண்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தாலிபான் அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிவதை தடை செய்துள்ள நிலையில், இந்தப் போக்கு நீடித்தால் உதவிகள் நிறுத்தப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதை தடை செய்த தாலிபான் அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் பெண்கள் பணிபுரிவதற்கும் தடை விதித்துள்ளது. அங்குள்ள அனைத்து பெரிய அரசு சாரா உதவி நிறுவனங்களும், இம்முடிவை திரும்பப் பெறும்படி தாலிபான்களை கேட்டுக்கொண்டுள்ளதோடு, இதுகுறித்து குரல்கொடுத்து வருகின்றன. பேச்சுவார்த்தைகள் தொடரும் அதே வேளையில், தாலிபான்களின் உத்தரவால் கிட்டத்தட்ட தங்களுடைய அனைத்து வேலைகளையும் தன்னார்வ அமைப்புகள் நிறுத்திவிட்டன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தாலிபான் ஆட்சியில் பெண்கள்
தாலிபான் ஆட்சியில் பெண்கள்

இந்நிலையில், பெண் உதவிப் பணியாளர்கள் மீது தாலிபான் அரசு தடை விதித்துள்ளதால், பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இதுகுறித்து ஐ.நா. உதவித் தலைவர் மார்ட்டின் க்ரிஃபித்ஸ், ஐ.நா.வின் பல்வேறு முகமைகளின் தலைவர்கள் மற்றும் பல உதவிக் குழுக்களின் தலைவர்கள் புதன்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், ``பெண்கள் சமூகப்பணிகளில் பங்கேற்பது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல, அது தொடர வேண்டும். இந்த முடிவை தாலிபான்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். மனிதாபிமானப் பணிகளில் இருந்து பெண்களைத் தடை செய்வது அனைத்து ஆப்கானியர்களுக்கும் உடனடி உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே, பெண் பணியாளர்கள் பற்றாக்குறையால், சில நேரம் முக்கியமான நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு மனிதாபிமான சமூகமாக இப்போது நாங்கள் எதிர்கொள்ளும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை புறக்கணிக்க முடியாது. பெண் உதவிப் பணியாளர்கள் இல்லாமல் கொள்கை ரீதியான மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாது என்பதால், தாலிபான்களின் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா
ஐ.நா

தன்னார்வ உதவிக் குழுக்களின் பெண் ஊழியர்களைத் தடுக்கும் முடிவைத் திரும்பப் பெறுமாறு ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைமையிலான அரசாங்கத்தை, 12 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்கள் கூறுகையில், `தாலிபான்களின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான இந்த தடை, உயிர்வாழ்வதற்காக மனிதாபிமான உதவிகளை நம்பி இருக்கும் பல லட்சக்கணக்கான ஆப்கானியர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்று கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம்போஜ் கூறுகையில், `ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு மற்றும் பணிகளுக்கு செல்வதை தடை செய்துள்ளது கவலை அளிக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.