Published:Updated:

தாலிபன் வசமான ஆப்கன் முதல் பரபரப்பை ஏற்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் வரை! - 2021 Rewind

உலகை அதிர வைத்த சம்பவங்கள் 2021 ரீவைண்ட்
News
உலகை அதிர வைத்த சம்பவங்கள் 2021 ரீவைண்ட்

2021-ல் உலகை அதிரவைத்த சில சம்பவங்களின் தொகுப்பு...

நாடு கடத்தப்படலாம்!

பிரபல ஊடகவியலாளரும், விக்கிலீக்ஸ் தளத்தின் நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே லண்டன் பெல்மார்ஷ் சிறையிலிருக்கிறார். இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த ஜனவரியில் நாடு கடத்துவதற்கான அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்து அசாஞ்சே மன உளைச்சலில் இருப்பதால், தற்கொலை செய்யலாம், அதனால் உங்களது மனு நிராகரிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இவர் கடந்த 2010 - 2011 இடையே ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் ராணுவ மற்றும் போர் ரகசியங்கள் தொடர்பாக ஐந்து லட்சம் கோப்புகளை வெளியிட்டதால், அமெரிக்கா இவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

ஜூலியன் அசாஞ்சே
ஜூலியன் அசாஞ்சே

போயிங் 737 மேக்ஸ் விமான விவகாரம்!

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் வடிவமைப்பு தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்த குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் அமெரிக்க அரசுக்கு 250 கோடி டாலர் குற்றவியல் கட்டணமாகச் செலுத்த ஒப்புக்கொண்டது போயிங் நிறுவனம். இந்த நிறுவனம், வெளிப்படைத்தன்மையைவிட லாபத்தை முக்கியமாகப் பார்த்தது என்று அமெரிக்க நீதித்துறை கூறியது. இந்த போயிங் ரக விமானங்களின் மூலம், இரண்டு மோசமான விபத்துகள் இதுவரை நிகழ்ந்திருப்பதால், போயிங் அளிக்கவிருக்கும் தொகையில், சுமார் 500 மில்லியன் டாலர் பணம், விமான விபத்தில் இறந்த 346 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு நீதி கிடைத்தது!

கடந்த ஆண்டு மே மாதம் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து, அடித்துக் கொன்ற போலீஸ் அதிகாரி டெர்ரக் சவுவினுக்கு 270 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் 15 ஆண்டுகளுக்கு பரோல் பெறமுடியாது. அதன்பிறகு பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

ஜார்ஜ் பிளாய்ட்
ஜார்ஜ் பிளாய்ட்

பரபரப்பை ஏற்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் !

உலகளவில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் சட்டவிரோதமாகச் செய்த முதலீடுகளை வெளிக்கொண்டு அதை அம்பலப்படுத்துவதே பண்டோரா பேப்பர்ஸ். இந்த ஆவணங்களைச் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு வெளியிட்டது. இதில் ஏறக்குறைய 1.90 கோடி ரகசிய கோப்புகள் இருந்தன. இவை 2016-ல் பனாமா ஆவணங்கள் மற்றும் பாரடைஸ் ஆவணங்கள் போன்றது. இதில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா அல் ஜீசைன், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர், அவர் மனைபி செரி, ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் மட்டும் 380 பேர், அதில் அனில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், நிரவ் மோடி, நிரா ராடியா உட்பட 60 முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபன் ஆட்சியைக் கைப்பற்றியது

ஆகஸ்ட் 15-ல், ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலைத் தாலிபன் கைப்பற்றியது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்த காபூல் நகரையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இடைக்கால தலைவராக அலி அஹமத் ஜாலாலியை நியமித்தது தாலிபன். ஆயிரக்கணக்கான வெளிநாட்டார்வர்கள், ஆப்கானியர்கள் வெளியேற்றப்பட்டதால், விமான நிலையத்தில் கூட்டம் கூடியது.

தாலிபன்
தாலிபன்

டொனால்டு டிரம்ப்க்கு ஆதரவு :

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்தது, அதில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தேர்தல் அதிகாரிகளிடம் தன்னை வெற்றிபெறச் செய்யும்படியாகப் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது வன்முறை போராட்டமாக உருவமெடுத்து, ஒரு பெண் உயிரிழந்தார்.

லா பால்மா தீவு எரிமலை வெடிப்பு :

கடந்த செப்டம்பர் மாதம், ஸ்பெயினின் லா பால்மா தீவில் எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை வெளியேற்றியது.1971-ம் ஆண்டு இதே எரிமலையில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு ஏற்பட்டது. இது 103 ஹெக்டாரில் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும், இதனால் 300 வீடுகள் சேதமாகின. 2,000-க்கும் மேற்பட்டோர் எச்சரிக்கையின் படி வெளியேற்றப்பட்டனர்.

லா பால்மா தீவு எரிமலை
லா பால்மா தீவு எரிமலை

அகதிகள் மீது தாக்குதல் :

கடந்த அக்டோபர் 22, வங்காள தேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் அதிகாலையில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைச் சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர், மேலும் குழந்தைகள் உட்படப் பலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரோஹிங்கியா அகதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வங்காள தேசத்துக்குத் தப்பிச் சென்றனர். இந்த வன்முறைக்கு, ஐநா அகதிகள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

பாலஸ்தீனம் - இஸ்ரேல் மோதல்

ஜெருசலேம் நகரம் தொடர்பாக இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்ட நாள்களாக மோதல் நிலவி வருகிறது. ஜெருசலேம் நகரில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்துவது, இஸ்ரேல் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், மே 11 அன்று அல்-அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேல் காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தது இதன் தொடக்கமாக அமைந்தது. மேலும், இருவரும் பதிலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேலில் கேரளாவைச் சேர்ந்த சௌமியா என்ற பெண் உயிரிழந்தார். டிசம்பர் 14 அன்று, நாப்ல்ஸ் நகரில் பாலஸ்தீன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலஸ்தீன மக்கள் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.