Published:Updated:

`தன்னார்வலர்களின் அசத்தல் முயற்சி; 24 மணி நேரமும் இலவசம்’ - ஏடிஎம் மூலம் அரிசி வழங்கும் வியட்நாம்

வியட்நாம்
வியட்நாம்

வியட்நாமில், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேரமும் ஏடிஎம் மூலம் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அதனால் எந்தப் பாதிப்பும் இல்லாதவர்களே மிகக் கடுமையான விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தினசரி கூலித் தொழிலாளர்கள் அடுத்தவேளை உணவு இல்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மார்ச் 23 -ம் தேதிக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் விடியும் ஒவ்வொரு நாளும் ரணமாகத்தான் உள்ளது.

வியட்நாம்
வியட்நாம்

இந்தியா மட்டுமல்லாது மொத்த உலக நாடுகளிலும் கூலி தொழிலாளர்களுக்கு இதே நிலைதான் நீடித்துவருகிறது. இந்நிலையில், இப்படி சிரமப்படும் மக்களைக் காப்பதற்காக வியட்நாமில் 24 மணி நேரமும் இயங்கும் இலவச அரிசி ஏடிஎம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250-க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை ஒருவரும் உயிரிழக்கவில்லை. மற்ற நாடுகளைவிட வியட்நாமில் கொரோனாவின் தாக்கம் மிகக் குறைவுதான் என்றாலும், அங்கு வைரஸ் மேலும் பரவாமல் இருக்கக் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

` 963 குடும்பங்கள், 24,000 கிலோ பொன்னி அரிசி!' - ஊரடங்கில் அசரவைத்த ஊராட்சி மன்றத் தலைவர்

இந்த நேரத்தில், உணவின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், அதிக ஏழை மக்கள் வாழும் கிராமங்களில் அரிசி ஏடிஎம்-கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் மக்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஒன்றரைக் கிலோ வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அரிசி எடுக்க வரும் மக்கள், குறைந்தது 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும் என கட்டாயமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏடிஎம்-க்கு அருகில் இருக்கும் சானிடைஸரில் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே இயந்திரத்தைத் தொட அனுமதிக்கப்படுகிறார்கள்.

வியட்நாம்
வியட்நாம்

மொத்த வியட்நாமிலும், அதிக ஏழை மக்கள் வாழும் பகுதியாக உள்ள ஹோ சி மின் நகரத்தில், 24 மணிநேரமும் இந்த ஏடிஎம் வசதி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். என் மொத்த குடும்பத்துக்கும் ஒரு நாளுக்கு இந்த அரிசி போதுமானதாக உள்ளது. இந்த ஏடிஎம் திட்டம் எங்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது” என அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தாய் தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்தமுறை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெகுவாகப் பாராட்டியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு