Published:Updated:

இங்கிலாந்துப் பிரதமர் வாய்ப்பை இழந்த இந்தியர்!

ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷி சுனக்

- ரமேஷ் பாலசுப்ரமணியன்

இங்கிலாந்துப் பிரதமர் வாய்ப்பை இழந்த இந்தியர்!

- ரமேஷ் பாலசுப்ரமணியன்

Published:Updated:
ரிஷி சுனக்
பிரீமியம் ஸ்டோரி
ரிஷி சுனக்

`இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டனை இந்தியர் ஒருவர் ஆளப்போகும் காலம் வந்துவிட்டது' என்று பெருமிதம் பேசினார்கள் பலர். தற்போது பிரிட்டன் நிதி அமைச்சராக இருக்கும் ரிஷி சுனக், (இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன்) அடுத்த பிரதமராக, 10, டவுனிங் தெருவுக்குக் குடிபோய்விடுவார் என்று பரவலாகப் பேச்சு இருந்தது. அவர் மனைவி அக்‌ஷதா மூர்த்தி சில சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்திப் பல வருடங்களாக இங்கிலாந்தில் வருமான வரி கட்டவில்லை எனத் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகளால் ரிஷி சுனக் பதவி தப்புமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

நிதி அமைச்சராக ரிஷி பற்பல வரிகளை உயர்த்தியும் சிலவற்றை அறிமுகப்படுத்தியும் உள்ள நிலையில், அவரின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி வரிகளை முழுமையாகக் கட்டாமல் தவிர்க்கும் வழிமுறைகளைக் கையாண்டது எதிர்க்கட்சியினரால் பலமாக விமர்சிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஒரு நல்ல மாற்று என ரிஷியைக் கருதிய ஆளும்கட்சியினர்கூட இப்போது அவரிடமிருந்து விலகிச்செல்கிறார்கள்.

இங்கிலாந்துப் பிரதமர் வாய்ப்பை இழந்த இந்தியர்!

சர்ச்சைகளின் பின்னணி இதுதான்... பணி காரணமாகவோ அல்லது திருமணம் முடித்தோ பிரிட்டனில் குடியேறுபவர்கள் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கேயே நிரந்தரமாகத் தங்கி பாஸ்போர்ட் பெறத் தகுதி பெறுகிறார்கள். அதே நேரம், தங்களுடைய நிரந்தர வசிப்பிடம் இங்கிலாந்து கிடையாது என அரசாங்கத்திடம் வருமான வரி செலுத்தும்போது தெரிவித்தால், இங்கிலாந்தில் ஈட்டும் வருமானத்திற்கு மட்டும் வரி கட்டினால் போதும். வேறு நாடுகளிலிருந்து வரும் வருமானத்திற்கு வரி கட்டத் தேவையில்லை.

அக்‌ஷதா மூர்த்தி இத்தகைய வரி தவிர்ப்பு (வரி ஏய்ப்பு அல்ல) முறைகளைப் பின்பற்றிக் கோடிக்கணக்கான ரூபாய் வரியைத் தவிர்த்தார். சட்டப்படி அவர் செய்தது தவறில்லை எனினும்கூட, `நாட்டு மக்கள் அனைவருக்கும் வரி விதிக்கும் அதிகாரத்தில் உள்ள ஒருவரின் மனைவி செய்தது தார்மிகரீதியில் சரியா' என்ற விவாதம் நடந்துவருகிறது.

ரிஷி சுனக் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சக மாணவியான இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். தனியார் வங்கிகளில் பணிபுரிந்து வந்த ரிஷி சுனக், சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்தார்.போரிஸ் ஜான்சன் பதவியேற்றதும் ரிஷி சுனக்கின் அரசியல் பயணம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. வணிகத் துறைக்கு அலோக் சர்மா, உள்துறைக்கு ப்ரித்தி படேல், நிதித்துறை இணை அமைச்சராக ரிஷி சுனக் என இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். நிதி அமைச்சர் சாயித் ஜாவேத், ஜான்சனுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாகப் பதவி விலக, ரிஷி சுனக்கிற்கு அடித்தது யோகம். பதவி உயர்வு பெற்று நிதி அமைச்சர் ஆகி, 11, டவுனிங் தெருவிற்குக் குடிபுகுந்தார்.

இங்கிலாந்துப் பிரதமர் வாய்ப்பை இழந்த இந்தியர்!

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் என்ற முறையில் 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகளை அவர் வைத்திருந்தார். அவர் நிரந்தர இங்கிலாந்துக் குடியுரிமை பெற்றிருந்தால், சுமார் 2,800 கோடி ரூபாய் வரி கட்டவேண்டி வந்திருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகவும், வருடம்தோறும் பங்குகளின் உரிமையாளர் என்ற முறையில் வரும் 11.5 மில்லியன் பவுண்டுகள் (ஒரு பவுண்ட் சுமார் 100 ரூபாய்) வருமான வரியைத் தவிர்ப்பதற்காகவும் தான் இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிப்பவர் அல்ல என அரசாங்கத்திடம் தெரிவித்ததுதான் பிரச்னை. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் `இனிவரும் காலங்களில் தான் இந்தியாவில் ஈட்டும் வருமானத்திற்கு இங்கிலாந்தில் வரி கட்டத் தயாராக இருப்பதாக' அக்‌ஷதா அறிவித்தார்.

ஆனால் பிரச்னை அதோடு முடியவில்லை. இதையும் தாண்டி இவர்கள் இருவரும் அமெரிக்க அரசாங்கம் தரும் குடியுரிமைப் பத்திரமான கிரீன் கார்டு வைத்திருந்தனர் என புதிதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரிஷி அமைச்சரான பிறகுகூட இந்த கிரீன் கார்டு வைத்திருந்தார் என்பதும், சென்ற ஆண்டு அமைச்சர் என்ற முறையில் அமெரிக்கா செல்வதற்கு முன்னரே அதை அவர் அமெரிக்க அரசாங்கத்திடம் வேண்டாமென ஒப்படைத்தார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியிருக்கிறது. “கிரீன் கார்டு போகட்டும். ரெட் கார்டு கொடுக்க நேரமாகிவிட்டது” எனக் கிண்டல் அடித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர்.

கோவிட் காரணமாக நாடு முழுவதும் லாக்டௌன் இருந்த காலகட்டத்தில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகமான, 10, டவுனிங் தெரு மற்றும் சில அரசாங்க அலுவலகங்களில் சில பார்ட்டிகள் நடந்தன என சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதற்காக போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்றும் சொன்னார்கள். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும்கட்சியினர் சிலர்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதுதொடர்பாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. லண்டன் போலீஸாரும் தனியாக பிரதமர் உட்பட அனைவர்மீதும் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

இங்கிலாந்துப் பிரதமர் வாய்ப்பை இழந்த இந்தியர்!

அரசு உயர் அதிகாரிகள் பலருக்கு போலீஸார் அபராதங்கள் விதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. அந்த நேரத்தில் பிரதமருக்கு ஆதரவாக ரிஷி குரல் எழுப்பவில்லை என்று சொல்லப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் அலுவலகத்தில் உள்ள எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் யாரோ ரிஷி சுனக் சம்பந்தமான தகவல்களை ரகசியமாக வெளியிடுகின்றனர் என்று சிலர் சொல்கிறார்கள். `இல்லை, போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்களே ரிஷி சம்பந்தமான தகவல்களை வெளியிடுகின்றனர்' என இன்னொரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர். எது உண்மை என்பது ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ள விசாரணையின் முடிவில் வெளிவரும். ஆனால், அதுவரை ரிஷி சுனக் நிதியமைச்சராகத் தொடர்வாரா என்பதுதான் மில்லியன் பவுண்ட் கேள்வி.

ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்தபோதே ரிஷி பிரச்னை லேசாகப் புகைய ஆரம்பித்தது. ரஷ்யாவில் செயல்படும் பிரிட்டிஷ் கம்பெனிகள் அனைத்தும் அந்த நாட்டில் இயங்கக்கூடாது என பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது. அதே நேரத்தில், ரிஷியின் மனைவி அக்‌ஷதா மூர்த்தி பெரும் பங்குதாரராக இருக்கும் இன்போசிஸ் நிறுவனம் ரஷ்யாவில் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்தவில்லை.

இன்போசிஸின் தினசரி நிர்வாகத்தில் தான் தலையிடுவதில்லை என அக்‌ஷதா மூர்த்தி அறிவித்தார். ஆனால், `அக்‌ஷதா மூர்த்தி மற்றும் ரிஷி சுனக் ரஷ்யாவில் இயங்கும் ஒரு நிறுவனம் மூலம் வருமானம் பெறுகின்றனர்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தன் மனைவிக்காக ரிஷி வாதிட்டார். `என் மனைவி என்னுடைய உடைமை அல்ல. அவர் ஒரு சுதந்திரமான மனிதர். அவருடைய தனிப்பட்ட விவகாரத்தில் நான் தலையிட முடியாது' என வாதிட்டார். எனினும் ஓரிரு நாள்களில் தங்கள் ரஷ்ய அலுவலகத்தை மூடுவதாக இன்போசிஸ் அறிவித்தது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை மூன்று முகவரிகள் முக்கியமானவை. ராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனை; பிரதமர் வசிக்கும், 10, டவுனிங் தெரு; சான்சலர் என அழைக்கப்படும் நிதி அமைச்சர் வசிக்கும், 11, டவுனிங் தெரு.

சென்ற வார இறுதியில், 11, டவுனிங் தெரு வீட்டை காலி செய்துவிட்டு அக்‌ஷதா மூர்த்தி மற்றும் குழந்தைகள் தங்களுடைய சொந்த வீட்டிற்குக் குடி போனார்கள். தங்கள் மகளின் பள்ளிக்கு அருகே வசிப்பதற்காக அவர்கள் சென்றதாகக் காரணம் கூறப்பட்டது. ரிஷி சுனக் வார நாள்களில் மட்டும் 11, டவுனிங் தெரு வீட்டில் இருந்தபடி பணி செய்வார் என்று சொல்லப்பட்டது.

பிரதமராகி, 10, டவுனிங் தெரு வீட்டிற்குக் குடி போவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷி சுனக், 11, டவுனிங் தெரு வீட்டையே காலி செய்யவேண்டி வருமோ என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் கவலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism