Published:Updated:

Vaccum bombs: ரஷ்யா தடைசெய்யப்பட்ட குண்டை பயன்படுத்தியதா?! உலக நாடுகள் பதறுவது ஏன்?

உக்ரைன் போர்

பழைமையான எறிகுண்டுகளைப்போல இல்லாமல் அதிகபட்ச வெப்பத்தையும் ஆற்றலையும் ஏற்படுத்தக்கூடிய இந்த வகை குண்டுகள் ஒரு மனிதனை ஆவியாக்கிவிடும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது.

Vaccum bombs: ரஷ்யா தடைசெய்யப்பட்ட குண்டை பயன்படுத்தியதா?! உலக நாடுகள் பதறுவது ஏன்?

பழைமையான எறிகுண்டுகளைப்போல இல்லாமல் அதிகபட்ச வெப்பத்தையும் ஆற்றலையும் ஏற்படுத்தக்கூடிய இந்த வகை குண்டுகள் ஒரு மனிதனை ஆவியாக்கிவிடும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது.

Published:Updated:
உக்ரைன் போர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து கொண்டேதான் இருக்கிறது. முதலில் ராணுவ தளவாடங்களை தாக்கிய ரஷ்யா இப்போது மக்கள் வாழும் முக்கிய நகரங்களையும் முழு வீச்சில் தாக்கத்தொடங்கியிருக்கின்றன. ஒருபக்கம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மற்றொரு புறம் உலக நாடுகள் ரஷ்யா மீது பல தடைகளை விதித்து நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய படையினர் உக்ரேனியர்கள் மீது; கீவ் நகரை சுற்றி கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வேக்யூம் (Vaccum) குண்டுகளை பயன்படுத்துவதாக ரஷ்யாமீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட அமைப்புகள் இதனைக் கண்டித்துள்ளன.

பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வேக்யூம் குண்டுகளை ரஷ்யப் படைகள் இந்த போரில் பயன்படுத்தி வருவதாக பல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதில் அம்னெஸ்டி சபை, பொதுமக்கள் தஞ்சம் புகுந்த வடகிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு பள்ளியை ரஷ்யா படையினர் தாக்கியதாக குற்றம் சாட்டியிருக்கிறது. அதேசமயம் அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா, ரஷ்யாவின் மாஸ்கோ படையினர் உக்ரைனியர்கள் மீது வேக்யூம் குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற குண்டுகளை 'Thermobaric weapon' என வகைப்படுத்துவார்கள். இந்த வகை குண்டுகள் காற்றிலிருக்கும் ஆக்சிஜனை மொத்தமாக இழுத்து அதை கொண்டு மிக உயர்ந்த வெப்பநிலையில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பை ஏற்படுத்த வல்லவை.

தெர்மோபரிக் தாக்குதல் (மாதிரி படம்) | Vaccum bombs
தெர்மோபரிக் தாக்குதல் (மாதிரி படம்) | Vaccum bombs

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் தூதர்; "இன்று ரஷ்யப் படைகள் வேக்யூம் குண்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் ஏற்படுத்த நினைக்கும் பேரழிவு எண்ணிக்கூட பார்க்கமுடியாத அளவு கொடுமையானது" என்று கூறினார். வேக்யூம் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரைன் வைக்கும் குற்றச்சாட்டு இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றன களத்தில் இருக்கும் ஊடகங்கள். வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் ஜென் சாகி "ரஷ்யப் படைகள் தடைசெய்யப்பட்ட குண்டு பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால், அது போர் குற்றமாகும்" என்று எச்சரித்துள்ளார்.

வேக்யூம் குண்டுகள்

பெரும்பாலான குண்டுகள் இலக்குகளை அழிக்க, உலோகத் துண்டுகளை சிதறடிக்கும் வெடிமருந்துகளை பயன்படுத்தி இயங்குகின்றன. ஆனால், இந்த 'Thermobaric' வகை ஆயுதங்கள் அதை செய்யாமல் குண்டுவெடிப்பில் உச்சத்தை தொடுகின்றன. இந்த ஆயுதங்கள் அதிக வெப்பநிலை மற்றும் கடும் அழுத்தத்தை பயன்படுத்தி வெடிக்கும் ஆயுதமாகும். முன்பு சொன்னது போல இந்த வேக்யூம் குண்டுகள், ஒரு உயர் வெப்பநிலை வெடிப்பை உருவாக்க சுற்றியுள்ள காற்றில் இருக்கும் ஆக்சிஜனை மொத்தமாக உறிஞ்சி வழக்கமான குண்டுகளை விட அதிதீவிர வெடிப்பை உருவாக்கி பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. இந்த குண்டுகள் மனித உடல்களை நொடிப்பொழுதில் ஆவியாக்கும் சக்தி படைத்தவை. இது வெடிக்கும் இடத்தின் அருகில் எலும்புகள் கூட மிஞ்சாது.

இந்த வேக்யூம் குண்டுகள் இரண்டாம் உலக போரிலே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அமெரிக்கா, வியட்நாம் போரில் அதிக அளவில் இந்த குண்டுகளைப் பயன்படுத்தப்பட்டன.

வெடிவிபத்தின் போது மனிதனின் நுரையீரலில் இருக்கும் காற்றை கூட உறிஞ்சிவிடும் கொடிய ஆயுதம் இது. இது ஏற்படுத்தும் வெடிப்பு அலைகளும் (Blast Waves) நீண்ட நேரம் நீடிக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த குண்டுகள் எந்த அளவு சக்தி வாய்ந்தவை என்றால் 44 டன் TNT வெடிப்புக்கு நிகரான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவை. இது வெடிக்கும் இடத்தை சுற்றிய 300 மீட்டர் பரப்பளவில் அனைத்தும் பொசுங்கி சாம்பலாகும். இதை Fuel Air Explosive என்றும் அழைப்பர்.

ரஷ்யப் படையினர் கிளஸ்ட்டர் குண்டுகளையும் ஏவுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கிளஸ்ட்டர் குண்டு வானில் இருந்தோ தரை வழியாகவோ ஏவப்படும். பெரிய மிசைல் போன்ற வடிவில் உட்புறம் எண்ணற்ற சிறிய குண்டுகளைத் தாங்கி விழும் இது தாக்கும் இடத்தை சுற்றி பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

உக்ரைன் களத்திலிருந்தோ அல்லது ரஷ்யா சார்பிலோ இந்த தாக்குதல்கள் குறித்த செய்திகள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த வகை குண்டுகள் உக்ரைனில் பயன்படுத்தப்பட்டதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று உலக அமைப்புகள்.

சர்வதேச சட்டப்படியும் ஜெனீவா உடன்படிக்கை படியும் இதுபோன்ற குண்டுகளை போரில் பயன்படுத்தக்கூடாது. ஜெனீவா உடன்படிக்கை முதலாம் உலகப்போருக்கு பிறகு 1928-ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி வேதியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களை போரில் பயன்படுத்தும் எந்த நாடும் போர்க்குற்றம் செய்த நாடாகவே கருதப்படும். சர்வதேச நீதிமன்றத்தில் இந்த குற்றங்கள் விசாரிக்கப்படும். அதன்படி இந்த போரில் தடைசெய்யப்பட்ட இந்த ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டால், தற்போது இருக்கும் பொருளாதார தடைகளுடன் போர் குற்றத்திற்கான தண்டனைகளையும் ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகளால் வழங்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism